கா
ற்று அழுதுகொண்டிருக்கிறது… இங்கே வெட்டப்பட்டதும் வீழ்ந்துகிடப்பதும் மரங்கள் மட்டுமே அல்ல, மனித வாழ்க்கையும்தான் என்பதற்கு ஆதாரமாக நம் கண்முன்னே முடமாகிக் கிடக்கிறது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல். வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் நம் திரைப்படங்கள் சுற்றுச்சூழல் என்பதைத் தொட்டாவது காட்டியிருக்கின்றனவா?
“நவீன உலகின் தழும்புகளை வரலாற்றில் பதிவுசெய்யத் தூரிகைகளைவிடவும் வேகமான ஆயுதம் தேவை. அதற்காகவே கேமராவை தேர்ந்தெடுத்தேன்.” என்றார் உலகமே வியக்கும் பிரெஞ்சு ஒளிப்பட மேதையான ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸோன்.
நம் சூழலின் அழிவைக் கலைஞர்களே கண்டுகொள்ளாதபோது, தங்கள் நாட்டு மக்களின் நலனைத் துளிகூட எண்ணாமல், மனிதத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராகத் திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கும் அரசுகள், தங்கள் பதவி, அதிகாரத்தின் மீது மட்டுமே அக்கறை காட்டும் ஆட்சியாளர்களை எப்படிக்கேட்பது?
இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த குரல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் சுற்றுச்சூழல் பேசுபொருளாக்கப்பட வேண்டும். அதிலும், அவற்றைத் திரை வடிவில் ஆவணமாக்குதல் மக்களிடையே மிக எளிதாகவும் வேகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.
அதை முன்னெடுக்கும் நோக்கத்தில் சென்னை லயோலா கல்லூரியின் ‘லைவ்’ துறையும் (Loyola Institute of Vocational Education - LIVE) பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இணைந்து, இதுவரை இல்லாத அரிய முயற்சியாக மாபெரும் சர்வதேச சுற்றுச்சூழல் திரைப்பட விழா ஒன்றை நடத்த உள்ளன.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அச்சு ஊடகப் பங்கேற்பாளராக இணைந்து முன்னெடுக்கும் இத்திரைப்பட விழாவில், திபெத் , அமெரிக்கா, ஈரான், பொலிவியா நாடுகளின் திரைப்படங்கள், இந்தியாவிலிருந்து மராத்தி, மணிப்புரி, மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
மேலும் சூழல் சார்ந்த பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் இந்த விழாவில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 20-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை (பிப்ரவரி 20-23) நான்கு நாட்கள் சென்னை லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத்துறை அரங்கில் நடக்கிறது. இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், மிஷ்கின், நலன் குமரசாமி, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி போன்றவர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மக்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதுமான காதலைத் திரையில் காண்பிக்க நினைக்கும் திரைப்படப் பயிற்சி மாணவர்கள், இளைஞர்கள் இந்தத் திரைப்பட விழாவில் அவசியம் கலந்துகொள்ள வரும்படி அழைக்கிறது விழாக்குழு.
இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பும் அனைவரும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். கூடுதல் விவரங்களுக்கு:
9500149944, 9500092712 | முகநூல்: Facebook:@loyolalive