இந்து டாக்கீஸ்

திரையிசை: மீகாமன்

சுரேஷ்

பாய்ஸ் நான்கு இளைஞர்களில் ஒருவரான எஸ்.எஸ்.தமன் தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகரமான இசையமைப்பாளராக உருமாறியது தெரிந்த கதை. ஈரம், காதலில் சொதப்புவது எப்படி, ஒஸ்தி படங்களின் பாடல்கள் அவரது பெயரைச் சொல்லும்.

ஆர்யா நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் ‘மீகாமன்' படத்துக்கு எஸ்.எஸ். தமனே இசை. இரண்டு பாடல்களை கார்க்கியும் ஒரு பாடலை ஏக்நாத்தும் எழுதியுள்ளனர்.

மேற்கத்திய பாணிப் பாடல்கள், இனிய மெலடிகளுடன் விறுவிறுப்பான அதிரடிப் பாடல்களைத் தருவது தமனின் வழக்கம். மீகாமனில் மூன்றே பாடல்கள், ஒரு கருவியிசைத் துணுக்கு.

பூஜாவின் குரலில் ஒலிக்கும் ‘ஏன் இங்கு வந்தான்' பாடல் நாயகியின் தாபத்தை வெளிப்படுத்துவது. இந்தப் பாடலில் ரெட்ரோ எனப்படும் பழைய பாணி இசையை நவீன மெட்டுடன் அழகாகக் கலந்திருக்கிறார் தமன். ரசிக்க வைக்கும் பாடல்.

மேகா பாடியுள்ள ‘யாரோ யாரோ' பாடலும் கிட்டத்தட்ட பெண்ணின் தாபத்தைப் பற்றியது போலவே உள்ளது. ‘ஏன் இங்கு வந்தானு'க்குப் பதிலாக மெட்டும் குரலும் விறுவிறுப்பாக அமைந்திருக்கின்றன.

மீகாமன் தீம் பாடல் என்று சொல்லிவிட்டு மீகமன் மீகமன் என்று கடைசிவரை தவறாகவே பாடுகிறார்கள். பாடியிருப்பது மானசி, மோனிஷா.

இப்பொழுதெல்லாம் சினிமா ஆடியோக்கள் தனித்து ரசிப்பதற்கான பாடல்களாக அல்லாமல், சினிமாவின் ஒரு பாகமாகவே பெரும்பாலும் உள்ளன. அதனால், கதையின் தேவைக்கேற்ப பாடல்களின் வடிவமும் எண்ணிக்கையும் மாறுகின்றன. மீகாமனில் பாடல்கள் குறைவாக இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கலாம். முக்கியமான ஒரு குறைதமனின் வழக்கமான மயக்கும் மெலடி இதில் மிஸ்ஸிங்.

SCROLL FOR NEXT