இந்து டாக்கீஸ்

மாற்றுக் களம்: தாய்க்கும் மகளுக்கும் ‘மா’

செய்திப்பிரிவு

பெ

ண்களின் பாலியல் சுதந்திரத்தைப் பேச முயன்று தமிழ் வலைவாசிகளின் கவனத்தை ஈர்த்து, சலசலப்பையும் ஏற்படுத்திய குறும்படம் ‘லட்சுமி’. இதன் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் கடந்த வாரம் யூடியூபில் வெளியானது ‘மா’ என்ற புதிய குறும்படம். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் விடலைப் பெண் கருவுறுகிறாள். தன்னுடைய தாயிடம் நடந்ததைச் சொல்ல இருவரும் இணைந்து சூழலை எதிர்கொள்வதுதான் ‘மா’ குறும்படத்தின் கதை.

‘பாலியல் சுதந்திரம்’ என்ற கருத்தாக்கத்தைப் போலவே ‘பதின்பருவ கர்ப்பம்’ என்பதும் பொதுச் சமூகத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய தலைப்பே! சமூக ஒழுக்க மரபுகளை மீறும் எந்த ஒன்றும் நிச்சயம் எதிர்ப்பையும் சந்திக்கும் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் ‘லட்சுமி’ குறும்படம் இரண்டையும் பெற்றது. ஆனால், ஒரு கலைப் படைப்பு நேர்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அது சமூகத்தில் தாக்கம் செலுத்திக் காலத்தை வெல்லும். இத்தகைய புரிதலோடு அணுகினால் ‘லட்சுமி’ குறும்படத்தைக் கையாண்டவிதத்தைக் காட்டிலும் நுட்பமாக ‘மா’வில் திரைமொழி பேசியிருக்கிறார் இயக்குநர் சர்ஜுன்.

குறிப்பாகத் தாய்-மகள் உறவை நுணுக்கமாகப் படம் பதிவுசெய்திருக்கிறது. தன்னுடைய 15 வயது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் முதலில் வெறுத்தொதுக்கும் தாய் பின்னர் அவளை அரவணைத்தல், மகளின் நிலையைக் கணவரிடம் சொல்லிவிடத் துடித்தாலும் அதன் பாதகத்தை எண்ணி அமைதி காத்தல், இறுதி காட்சியில் மகளை மீண்டும் நிமிர்ந்தெழ உத்வேகம் அளித்தல் என கம்பீரமாகத் தாய்மையைத் தன்னுடைய திறமையான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார் மலையாள நடிகை கனி கஸ்ருதி.

இவை சாத்தியமாகக் காரணம் பிரியங்கா ரவிந்திரனின் திரைக்கதை. பிரியங்காவைப் பாராட்டும் அதே வேளை, திரைக்கதாசிரியராக ஒரு பெண்ணைக் கொண்டுவந்த இயக்குநருக்கும் பாராட்டுகள். பெண்மையை, பெண்களின் வாழ்வுலகை அவர்களின் அகவுலகை ஆண் மையப் பார்வையில் வெளிப்படுத்தும் கலை வெளிப்பாடுகள் முழுமையானவை என்று கூறிவிட முடியாது. திரைக்கதையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சர்ஜுன் அவ்விதத்தில் ஒரு பெண் திறமையை இப்படத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருப்பது நம்பகத்தின் அருகில் பார்வையாளர்களைக் கொண்டுவருகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது முதன்முறையாகப் பேசப்பட்டிருக்கும் கருப்பொருள் அல்ல. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ முதல் ‘ஆதலால் காதல் செய்வீர்’வரை ஆண்கள் பெண்களை மயக்கித் தங்களுடைய வலைக்குள் விழ வைப்பதாகவே திருமணத்துக்கு வெளியே உருவாகும் பாலியல் உறவுகள் புனையப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய உறவில் பெண்களுக்குச் சம்மதமோ விருப்பமோ இருப்பதாகச் சொல்லும் துணிச்சல் அரிதாகவே வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘லட்சுமி’, ‘மா’ இரண்டு படங்களும் அத்தகைய மனத்தடையை மீறி உள்ளன. குறிப்பாக, ‘மா’வில் உள்ள ஹரி கதாபாத்திரம்

நிகழ்ந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் காட்சி ஆண் தன்மை குறித்த புனைவில் முக்கியத் திருப்பம் அல்லது சோதனை முயற்சி எனலாம். அந்தத் தருணத்தில் படம், யார் மீதோ பழி போட்டுவிட்டு விலகி ஓட நினைக்காமல், பாலியல் கல்விக்கான தேவையை மறைமுகமாக வலியுறுத்துகிறது. அதே சோதனை முயற்சியைத் தந்தை கதாபாத்திரத்திலும் இயக்குநர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ஹாக்கி வீராங்கனையான தன்னுடைய மகளின் விளையாட்டுப் பயிற்சிக்கான உடையை குறைபேசுவது, தனக்கு வரும் அலைபேசி அழைப்பில் சக ஆசிரியரிடம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துவது என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை குறைகளையும் கடந்து பதின்பருவ பாலியல் சிக்கலையும் தாய்-மகளுக்கு இடையிலான புரிதலையும் நுட்பமாகத் திரையில் பேச முயன்றிருக்கிறது ‘மா’.

SCROLL FOR NEXT