‘சித்திரம் பேசுதடி’ தொடங்கி ‘கைதி’ வரை ஒரே சீராகப் பயணித்து வருபவர் நரேன். நம்பகமான கதாபாத்திர நடிப்புக்குப் பெயர் பெற்ற இவர், முதல் முறையாக ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆர்டினரி’ (தமிழில் பார்த்திபன், விதார்த் நடிப்பில் மறுஆக்கம் செய்யப்பட்ட ‘ஜன்னல் ஓரம்’) உட்படப் பல மலையாளப் படங்களை இயக்கிய சுகீத், முதல் முறையாக நேரடியாகத் தமிழில் இயக்கும் ‘ஆத்மா’ என்கிற படத்தில்தான் நரேனுக்கு இப்படியொரு கதாபாத்திரம்.
இதற்காகத் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி நடித்திருக்கிறார். கதை முழுவதும் துபாயில் நடக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் சிறிய அளவு ஆட்டிசம் குறைபாடுள்ள ஒருவர், தனது பக்கத்து வீட்டுத் தோழி, நண்பன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு கொலையின் மர்மத்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை. நரேனுடன் ஷ்ரத்தா சிவதாஸ், கனிகா, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நஜீப் காதிரி தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.
2கே கிட்ஸ் உடன் மோதல்! - கடந்த 2015இல் வெளிவந்த ‘திறந்திடு சீசே’ படத்தை இயக்கியவர் எம். முத்து. அவரது இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் 'சிக்லெட்ஸ்'. எஸ். எஸ். பி. பிலிம்ஸ் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கிறது.
புத்தாயிரத்தில் பிறந்த இளைஞர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியைக் கதை மையப்படுத்தியுள்ளது. இருமொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களைக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படம் குறித்து படத்தின் ட்ரைலைர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பேசியபோது, “தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டவர்கள் தான் 80, 90களின் காலகட்டத்தினர்.
ஆனால் மனதில் நினைத்ததை பெற்றோரிடமும் பொதுவெளியிலும் பட்டவர்த்தனமாகப் பேசுபவர்கள் தான் இன்றைய புத்தாயிரத் தலைமுறையினர். அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? இதனால் பெற்றோர்களுடனும் சமூகத்துடனும் அவர்கள் எப்படி மல்லுக்கட்டுகிறார்கள். இந்தத் தலைமுறை இடைவெளியின் சிக்கல்களை எப்படிக் களைவது என்பதைப் பேசும் படம்” என்கிறார்.
மாஸ் படங்களின் வேட்டை! - அஜித், விஜய் உள்ளிட்ட மாஸ் கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள், லைகா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றுவதில் நெட்ஃபிளிக்ஸ் தொடர்ந்து அதிரடி காட்டிவருகிறது. இந்த நிறுவனம் 2024ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் திரையரங்க ரிலீஸுக்குப் பின் வெளியிட தற்போது கைப்பற்றியிருக்கும் ஒன்பது மாஸ் தமிழ்ப் படங்கள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி', ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ‘இந்தியன்2', ‘அயலான்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஆகியவையும் அடங்கும். இதுபற்றி நெட்ஃபிளிக்ஸ் உள்ளடக்கப் பிரிவின் தலைவர் விபி மோனிகா ஷெர்கில் கூறும் போது “கடந்த ஆண்டு ‘லியோ', ‘துணிவு', ‘மாமன்னன்' உட்பட நாங்கள் வெளியிட்ட தமிழ்ப் படங்கள் டிஜிட்டல் பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தற்போது ‘விடாமுயற்சி’, ‘இந்தியன் 2’ உட்பட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்கில் வெற்றிபெறும் அத்தனை படங்களையும் நாங்கள் கைப்பற்றுவோம்” என்றார்.