இந்து டாக்கீஸ்

நிஜமும் நிழலும்: தவிக்கும் தமிழ்ப் படங்கள்

கா.இசக்கி முத்து

படப்பிடிப்புக்காக மும்பை, டெல்லி எனப் பறந்த காலம் போய் இப்போது தணிக்கைச் சான்றுக்காக அயல் மாநிலங்களை நோக்கிப் பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். காரணம், தமிழகத்தில் சென்ஸார் அதிகாரிகளின் பற்றாக்குறை.

கோடிகளைக் கொட்டி ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டும் தயாரிப்பாளர்கள் தணிக்கைச் சான்றுக்காகக் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி., நடிகர்களின் உச்சபட்ச ஊதியம், பெரிய பெரிய கம்பெனிகளின் கையில் திரையரங்குகள் சிக்கிக்கொண்ட நிலைமை, பெப்ஸி தொழிலாளர்களின் ஊதிய நிர்ணய விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தத்தளித்து வருகிறார்கள். இதற்கிடையில்தான் சென்ஸார் போர்டும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் காக்க வைத்துக் கண்ணீரில் ஆழ்த்தி வருகிறது.

இப்போதெல்லாம் ஒரு படத்தைத் தயாரிப்பது எளிதான காரியம் ஆகிவிட்டது. ஆனால், அப்படத்தை வெளியிடுவதற்குள் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் பிரசவ வேதனைதான். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், தமிழ்நாட்டில் சென்சார் அதிகாரிகள் அனைவருமே நீக்கப்பட்டுவிட, தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குத் தணிக்கை சான்று வாங்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நல்லி குப்புச்சாமி உள்ளிட்ட பலரும் தற்போது இல்லை. இதனால் பல்வேறு திரைப்படங்கள் சென்சார் செய்ய முடியாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் முடங்கும் அபாயம் கோடம்பாக்கத்தை அதிர வைத்திருக்கிறது.

இது குறித்துச் சென்சார் அதிகாரியாக இருந்த முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசினோம். “சென்சாருக்கு அப்ளை பண்ணினால், நாங்கள் இரண்டு நாட்களில் படத்தைப் பார்த்துவிடுவோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், எங்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

எப்போதும் சென்சாருக்கு என்று இங்கு ஒரே ஒரு அரசு அதிகாரி மட்டுமே இருப்பார். அவரைத் தவிர மற்றத் துறைகளில் இருந்து தலா ஒருவரை நியமிப்பார்கள். ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால், அப்படம் பார்க்கும் சென்சார் குழுவில் குறைந்தபட்சம் 3 பெண்கள் இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது.

அவ்வாறு ஒரு படத்தைத் தணிக்கை செய்வோம். ஆனால், தற்போது அரசாங்க அதிகாரியான பக்கிரிசாமி மட்டுமே இருக்கிறார். மற்றத் துறைகளில் இருந்து இதுநாள் வரை ஆட்கள் நியமிக்கப்படவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் படங்கள் சென்சார் செய்யத் தாமதமாகிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழ் படம் எதுவும் குறிப்பிட்ட தேதிக்கு வெளிவருவது சந்தேகம்தான் “ என்றார்.

இந்தப் பிரச்சினையால், தமிழ் படங்களை மும்பையில் சென்சார் பண்ணத் தொடங்கிவிட்டார்கள். 'அஞ்சான்', 'சலீம்' ஆகிய படங்கள் மும்பை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு படங்கள் தணிக்கைக்காகப் பதிவிட்டுக் காத்திருக்கும் நிலையில், இப்போது பதிவு செய்தால் ஏற்கனவே காத்திருக்கும் படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் நமது படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 37 படங்கள் வெளியிடுவதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. சென்சார் அதிகாரிகள் பிரச்சினையால் இப்படங்கள் சொன்ன தேதிகளில் வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.

சென்சார், வரிச்சலுகை, விநியோகஸ்தர்கள் ஒப்பந்தம், திரையரங்குகள் ஒப்பந்தம் என அனைத்தும் முடிந்து ஒரு படம் வெளியாக வேண்டும். பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கே இத்தகைய சிக்கல் தீராத தலைவலியாக அமைகிறதென்றால், சிறு தயாரிப்பு நிறுவனங்களின் நிலையை என்னவென்று சொல்வது?

SCROLL FOR NEXT