இந்து டாக்கீஸ்

ஹனுமான் திரைப் பார்வை

திரை பாரதி

மலைத் தொடரும் கடலும் சந்திக்கும் ஒரு ஆந்திர கிராமம். அங்கே தனது அக்காவுடன் (வரலட்சுமி) வசித்துவருகிறார் கவண்வில் அடிப்பதில் கெட்டிக்கார இளைஞனான ஹனுமந்த் (தேஜா சஜ்ஜா). டாக்டருக்குப் படித்துவிட்டு ஊர் திரும்பும் தனது பால்ய காலத் தோழியான மீனாட்சியை (அமிர்தா ஐயர்), வனக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றும்போது கடும் தாக்குதலுக்கு ஆளாகி கடலில் விழுந்து மூழ்குகிறார். எதிர்பாராதவிதமாகக் கடலுக்கடியில் அவருக்குக் கிடைக்கும் அதிசயக் கல் ஒன்றினால் உயிர்பிழைக்கும் ஹனுமந்த், அந்தக் கல்லின் ஆற்றலைக் கொண்டு சூப்பர்மேன் ஆவதுடன், தனது கிராமத்துக்குப் பல நன்மைகளைச் செய்கிறார். இதற்கிடையில் சிறுவயது முதலே சூப்பர் மேன் ஆவதை லட்சியமாகக் கொண்டு பலவகையிலும் அதற்காக முயன்று வரும் மைக்கேல் (வினய் ராய்), ஹனுமந்திடம் இருக்கும் அதிசயக் கல்லைக் கைப்பற்றுவதற்காக அந்தக் கிராமத்துக்கு வருகிறான். மைக்கேலின் சதிகளிலிருந்து ஹனுமந்தும் கிராமவாசிகளும் தப்பித்தார்களா, இல்லையா என்பது கதை.

பக்தி, ஃபாண்டஸி இரண்டையும் இணைக்கும் சாகசத் திரைப்படங்களில், ‘மேக்கிங்’கில் காட்டும் ஈடுபாட்டை திரைக்கதையில் செலுத்தியிருக்க மாட்டார்கள். குறிப்பாக, கதை நடக்கும் காலகட்டத்தின் வாழ்க்கையையும் பண்பாட்டின் ஒரு பகுதியாக நிலைபெற்றுவிட்ட நம்பிக்கையையும் அளவோடு இணைப்பதில் சறுக்கிவிடுவார்கள். இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் பிரசாந்த் வர்மா ஹனுமான் வழிபாட்டில் நிலைத்திருக்கும் நம்பிக்கையை மிக அளவாகத் தொட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல், பழைமையில் ஊறிக்கிடக்கும் ஒரு கிராமத்தை சீர்திருத்த விரும்பும் பெண்ணாகக் கதாநாயகி, சூப்பர் மேனாக மாறும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னால், பலவித இயலாமைகளுடன் பொறுப்பில்லாத பொடியனாக வலம் வரும் நாயகன், சிறுவயது முதலே சூப்பர் மேன் ஆக விரும்பும் ஒருவன், தனது லட்சியத்துக்காக பெற்றோர் கண் முன்னால் சாவதை ஏற்றுக்கொள்ளும் கல்மனம் படைத்தவனாக வில்லன் என முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும்விதமாக சித்தரித்துள்ளார்.

ஹனுமந்த் - அவனுடைய அக்கா வரலட்சுமி இடையிலான பிணைப்பு, ஹனுமந்த் - அவனுடைய நண்பன் இடையிலான தோழமை, ஹனுமந்த் - அவனுடைய காதலி இடையிலான மறுப்பு - ஏற்பு - புரிதல், ஹனுமந்த் - வில்லன் இடையிலான யுத்தம் ஆகியவற்றில் உணர்வுகள் - ஃபாண்டஸி - பக்தி ஆகியன சரியான விகிதத்தில் கலந்திருப்பதால், நாயகன் கதாபாத்திரத்தை தொடக்கம் முதல் இறுதிவரை விலகலின்றிப் பின்தொடர முடிகிறது.

வில்லனுக்கு உதவும் விஞ்ஞானியாக வருபவர், கிராமத்துக் காவல்காரராக இருக்கும் மல்யுத்த வீரர், மூன்றுவிதப் பரிமாணங்களில் தோன்றும் ஆபத்பாந்தவன் சமுத்திரக்கனி எனத் துணைக் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது.

பட உருவாக்கத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரம், கலை இயக்கம் ஆகியன ஒரு ஃபாண்டஸி சூப்பர் ஹீரோ படத்துக்கான காட்சி அனுபவத்தைக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. அனுதீப் தேவ் - கௌராஹரி - கிருஷ்ணா சௌரப் ஆகிய மூன்றுபேர் இணைந்து வழங்கியிருக்கும் பாடல்கள் - பின்னணி இசை படத்துக்குப் பலம்.

ஃபாண்டஸி படம் ஒன்றில் இடம்பெறும் சாகசக் காட்சிகள் எல்லாவற்றிலும் தர்க்கத்தை எதிர்பார்க்க முடியாது. அந்தக் குறையை மீறி, பண்டிகைக்கான கொண்டாட்ட மனநிலையுடன் வரும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றாத பொழுதுபோக்கு படமாக அமைந்துவிட்டார் இந்த ‘ஹனுமான்’

SCROLL FOR NEXT