நம்பும்படியான ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களை அருண் விஜய் எப்போதும் ஏமாற்றுவதில்லை. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் விஜய் உருவாக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் முழுநீள ஆக்ஷன் படமாக வெளியாகியிருக்கிறது ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)'. இப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். அது பற்றி அவர் கூறும்போது, “இப்படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் அத்தனையும் திரைக்கதைக்கு அவசியமானது.
குறிப்பாக அருண் விஜயின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. லண்டனில் ஓடும் பேருந்தில் ஒரு சண்டைக் காட்சி எடுத்தபோது அவரது தசைநார் கிழிந்துவிட்டது. ஆனால், வலியை அவர் பொருட்படுத்தவே இல்லை. அடுத்து வந்த 10 நாட்கள் அவர் தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துப் படக்குழுவை அசரவைத்தார்.” என்று பாராட்டியிருக்கிறார்.
சூர்யாவின் ஆர்வம்! - சூர்யா முதல் முறையாக, முழுவதும் போர்க்களக் காட்சிகளால் நிறைந்த ‘கங்குவா’ என்கிற ‘பான் வேர்ல்ட்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் கடைசி ஷாட்டும் படமாகிவிட்டதைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் தனது பதிவில்: “ ‘கங்குவா’ படத்தில் எனது கடைசி ஷாட் எடுத்து முடிக்கப்பட்டது.
இப்படம் எனது திரை வாழ்க்கையில் பல பெரிய படங்களுக்கான தொடக்கமாக இருக்கும். படப்பிடிப்பு முழுவதும் பல நிகழ்வுகள்.. பல நினைவுகள். ‘கங்குவா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். அதைக் காத்திருப்பு ஏதுமின்றி நீங்கள் திரையில் காணவேண்டும் என விரும்புகிறேன்” என இப்படம் குறித்த தனது ஆர்வத்தைத் தெரிவித்திருக்கிறார்.
வளரும் இசையமைப்பாளர்! - பாடல்கள் குறைந்து கொண்டு வரும் தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, த்ரில்லர், ஹாரர் படங்களில் பின்னணி இசையின் பங்கு மிகப் பிராதானமானது. கடந்த வாரம் வெளியான ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் பின்னணி இசையை ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியிருந்தார்கள்.
இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தவர் கௌசிக் கிரிஷ். இவர் ஏற்கெனவே அருள்நிதி நடித்த ‘டி பிளாக்’ என்கிற படத்துக்குப் பின்னணி இசை அமைத்திருந்தார். ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் ஒலிப் பொறியாளராகப் பணி யாற்றிய அனுபவம் பெற்ற இவர், ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படத்தில் இடம்பெற்று ஹிட்டடித்த ‘கண்ணால கண்ணால’ பாடலை யும் பாடிய பாடகராகவும் முகம் காட்டுகிறார்.
‘பான் உலகம்’ - இந்தியாவில் 50 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதைப் பிறமொழிகளில் ‘டப்’ செய்து ‘பான் இந்தியா’ படமாக வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்திய மொழி எல்லைகளைக் கடந்து ‘பான் உலக’ பொழுதுபோக்கு சினிமாவாக வெளியாகிறது ‘ஹனு - மான்’ என்கிற தெலுங்குப் படம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக நடித்திருப்பவர் தேஜா சஜ்ஜா. இதில், தமிழ் சினிமாவிலிருந்து வரலட்சுமி, அம்ரிதா ஐயர் என இரண்டு கதாநாயகிகள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை ‘அஞ்சனாத்ரி’ என்கிற கற்பனைப் பிரபஞ்சத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ‘அயலான்’ படத்தின் கிராஃபிக்ஸ் - வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் பற்றி இணையவாசிகள் பேசி வருவதுபோலவே ‘ஹனு - மான்’ படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் சிலாகித்து வருகின்றனர்.