இந்து டாக்கீஸ்

மார்கழியின் இன்ப கீதம்! பாடியவர் இவர்தான்!

செய்திப்பிரிவு

மார்கழி மாதம் வந்துவிட்டால், எங்கள் வீட்டுப் பெண்களுக்கு எங்கிருந்து தான், தெம்பு வருகிறதென்றே தெரியாது. பனிக்கொட்டும் அதிகாலை 4 மணிக்கே குளித்து விட்டு வாசலில் பெரிய கம்பிக்கோலம் போட்டு விட்டு கோ.புதூரில் இருந்து தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு நடக்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் 2 கி.மீ தூரமுள்ள கோயிலுக்கு நடந்து செல்வதென்பதே உடற்பயிற்சி தான். அதிகாலை தரும் காற்றின் புத்துணர்வும், பெருமாள் கோயில் பிரகாரம் முழுவதும் பரவிக்கிடக்கும் சுகந்த வாசனையும் அந்த மாதத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

என் அக்காக்கள் கோயிலுக்குப் போகும் போது, 'துணைக்குப் போடா' என ஒவ்வொரு நாளும் அம்மா விரட்டி விடுவாள். சாலையின் இருபுறமும் அடர்ந்த புளியமரங்கள். காற்றடிக்கும் போது புளியம்பழங்கள் உரசிக்கொள்ளும் சத்தம் அந்த அதிகாலைப்பொழுதில் கிலியை ஏற்படுத்தும். சாலையில் மரங்கள் இருந்த அளவு அப்போது தெருவிளக்குகள் இல்லை. எனக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலை விட. எங்கள் தெரு தேசிய விநாயகர் கோயிலை மிகவும் பிடிக்கும். அதிகாலை வேளை, அந்த கோயிலின் அரசமரத்தில் இருந்து ஒலிக்கும் பாடல்களின் பக்தன் நான்.

மதுரை ஐடிஐ பஸ்ஸ்டாப்பில் இருந்த நடராஜன் தேநீர் கடை பின்னாளில் எனக்கு பாடல்பெற்ற தலமாக மாறுவதற்கு முன்பு, தேசிய விநாயகர் கோயில் தான் அந்த இடத்தைப் பிடித்திருந்தது. மதுரை ஆத்திகுளத்தில் இருந்த 'வீரலட்சுமி', மூன்றுமாவடியில் இருந்த 'ராஜா' ஆகிய டெண்ட் கொட்டகைகள் என் இளமை காலங்களை எடுத்துக் கொண்டன. இரண்டு வாரங்களுக்குள் எப்படியும் ஒரு எம்.ஜி.ஆர் படம் திரையிடப்படும் என்பதால், வாரா வாரம் எனக்கு ஆரவாரம் தான். அந்த திரையரங்குகளில் கட்டப்பட்டிருந்த கூம்பு வடிவ குழாய்களின் வழியே தான் முதன் முதலில் இசை பருகிறேன். இன்று வரை அந்த தாகம் தீரவில்லை. தேசிய விநாயகர் கோயிலில் ஒலிக்கும் கூம்பு வடிவ குழாய்களில் தான் மார்கழி மாதம் முழுவதும் பாடல்கள் ஒலிக்கும். அந்த கோயிலில் நான் அதிகம் கேட்டு ரசித்தது,

'ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ
எங்கள் தேவிமுகம்- அந்த
ஆதிசக்தி கருமாரி ஆலயம்
வாழ்வு தரும்..'

என்ற பாடல் தான். விநாயகர் கோயில் என்றாலும் அம்மன், ஐயப்பன், முருகன் என எல்லா தெய்வங்களின் பாடல்களுக்கும் அங்கு இடமிருந்தன. கோயிலின் பெயரே தேசிய விநாயகர் ஆயிற்றே! திரைப்படங்களில் கேட்டு மகிழ்ந்த இசையரசி பி.சுசீலாவின் இனிய குரலில் ஒலித்த 'ஆயிரம் இதழ் கொண்ட' பக்திப் பாடலை நான் அதிகம் விரும்பினேன். கே.வீரமணி இசையில் ஒலிக்கும் இப்பாடலை இன்றும் கேட்டு ரசிக்கிறேன்.

'நதியாய் பாயும் பன்னீராலேஅபிஷேகம்- தினம்
நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்....'

என சந்தக்கட்டுக் குறையால் பி.சுசீலா பாடும் அழகில் மெய்யுருகிப் போவேன். இவ்வளவு அற்புதமானப் பாடலை எழுதிய கவிஞர் மு.தவசீலன். தமிழ்நாட்டில் திரையிசை கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட்ட அளவிற்கு பக்தியிசையைப் பரப்பிய கவிஞர்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்பதற்கு மு.தவசீலன் நல்ல உதாரணம். அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் காலத்தால் அழியாதவை. குன்னக்குடி வைத்தியநாதன், எச்.எம்.வி.ரகு, ஆர்.ராமானுஜம், வி.குமார், சூலமங்கலம் சகோதரிகள், டி.ஆர்.பாப்பா, கே.வீரமணி, பிரபாகர் பத்ரி உள்ளிட்ட பலரின் இசையில் எண்ணற்ற பாடல்களை மு.தவசீலன் எழுதியுள்ளார். அவர் எழுதாத தெய்வமில்லை. பக்தியில் தோய்ந்த அவரது எழுத்துக்கள், காலவெள்ளம் அடித்துச் செல்ல முடியாதவை.

கேரளாவில் உள்ள ஐயப்பனைத் தரிக்கச்செல்லும் தமிழக பக்தர்களின் மனங்களில் குடிகொண்டுள்ள எத்தனையோ பாடல்களை மு.தவசீலன் எழுதியுள்ளார். கே.வீரமணி- சோமு இசையில் கே.வீரமணி பாடிய.

'சபரியிலே தெரியுதுபார் மகரஜோதி- தர்ம
சாஸ்தாவின் அருள்கூறும் கருணை ஜோதி
சரணம்பாடி சரணம்பாடி சாந்தியைத்தேடி- அவன்
சந்நதியில் கூடுகின்றனர் ஆயிரம் கோடி...'

என்ற இந்த பாடலைக் கேட்கும் போதே உடலுக்குள் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. 'மலையெங்கும் எதிரொலிக்கும் சரணகோஷம், மனமகிழும் சாமிக்கு தினம் நெய்யபிஷேகம்' என்று எளிய சொற்களைக் கொண்டு தவசீலனால் எழுதப்பட்ட இந்த பாடலின் அடர்த்தி கேட்போரை மெய்யுருக வைக்கும். 'ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை' என்ற கே.வீரமணி பாடிய பாடலின் சொற்கட்டுக்குள் தவசீலனின் கவிதை ஒளிந்து கிடக்கிறது. எம்.எல்.வசந்தகுமாரி குரலில் ஒலித்த 'சரணம் என்பதே நாதம்' என்ற அழகிய பாடல் தவசீலன் பக்தியிசை உலகிற்குத் தந்த கொடை. 'வைகறைப் பொழுதினில் விழித்தேன்' என்று பி.சுசீலா பாடிய பக்திப் பாடல், திரையிசை பாடலுக்கும் குறைவில்லாத அழகுடன் எச்.எம்.வி.ரகுவால் இசை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய பாடலுக்கும் உயிரூட்டியவர் கவிஞர் மு.தவசீலன் தான்.

அறுபடை வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் என்றால் அது சூலமங்கலம் சகோதரிகள் தான். அவர்கள் பாடிய முருகன் பாடல்களுக்கு இன்றும் தனி மவுசு உள்ளது. 'துதிப்போர்க்கு வல்வினை போம்' என்று 1970-ம் ஆண்டுகளில் அவர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் இசைத்தட்டு விற்பனை உலகில் மகத்தான சாதனையைச் செய்தது. அவர்களுக்காக மு.தவசீலன் எழுதிய இந்தப் பாடல், கேட்கும் போதெல்லாம் மனதிற்குள் மணியடிக்கும்.

'ஓம் என்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்...'

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இந்தப் பாடலைப் பாடிய சூலமங்கலம் சகோதரிகள், தவசீலன் எழுதிய பாடலுக்கும் இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'எங்கும் முருகனைப் பார்க்கின்றேன்- என்றும்
அவன்குரல் கேட்கின்றேன்
பார்த்திடும் கண்களில் தெரிகின்றான்
பாடிடும் நெஞ்சில் அருள்கிறான்...'

என்ற இந்தப் பாடலின் மெட்டு பக்தியிசை உலகில் தனியிடம் பிடித்தது. ஏனெனில் பல்லவியைத் தொடர்ந்து வரும் சரணத்தில் அவர்கள் போட்ட மெட்டும், அழகூட்டும் அவர்களின் குரல்களும் தவசீலன் என்ற கவிஞனின் கவிதையை, களிறு போல இசை உலகில் உலாவ விட்டுள்ளது.

தவசீலன்


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்,சிறந்த பாடகி என்பதற்கு அவர் பாடிய பாடல்களைக் கேட்டால் உணர முடியும்.
'அடிமைப்பெண்', 'சூரியகாந்தி','வந்தாளே மகராசி', 'திருமாங்கல்யம்', 'வைரம்', 'அன்பைத் தேடி' ஆகிய படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால், ஜெயலலிதா பாடிய முதல் பக்திப்பாடலை எழுதியவர் என்ற பெருமை கவிஞர் மு.தவசீலனைத் தான் சேரும்.

'தங்கமயில் ஏறிவரும் எங்கள் வடிவேலவன்
திருவருள் தந்திடுவான் திருத்தணி முருகையன்...'

என்ற அந்தப் பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை மீட்டியுள்ளார்.'செந்தூரைக் காண்பதில்தான் கண்ணுக்கு இனிமை' என்று பாடும் ஜெயலலிதாவின் குரலும் இனிமை தான். திரைப்பாடல்களில் ஒலித்த அவரது குரலுக்கும், இந்த பக்தி பாடலின் காணும் அவரது குரலுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர முடியும்.

வாணி ஜெயராம், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், தேரெழுந்தூர் சகோதரிகள், ராதா- ஜெயலட்சுமி, எம்.ஆர்.விஜயா, ராஜராஜசோழன், கே.ராஜு உள்ளிட்டோர் பாடிய எண்ணற்ற பக்திப் பாடல்களை எழுதிய கவிஞர் மு.தவசீலனை கவி உலகம் கொண்டாட மறந்து விட்டது மிகப்பெரிய சோகம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: kavithakumar.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT