அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலைமையை மாற்றி, இளமை ததும்பும் காதல் கதைகளின் பக்கம் தமிழ் சினிமாவைத் திசைதிருப்பியவர், இயக்குநர் ஸ்ரீதர்.
அவரது முக்கோணக் காதல் கதைகள், ‘சித்ராலயா’ கோபுவின் விலா நோகச் செய்யும் நகைச்சுவை, வின்சென்ட்டின் குளிர்ச்சியான கேமரா, ஆனாரூனா என்ற திருச்சி அருணாசலத்தின் கருப்புவெள்ளை ஒளிப்படங்கள் துடிப்பான காட்சிகளுக்குப் பெயர்போன, சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தங்களது திறமைகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய பட நிறுவனம்தான் சித்ராலயா
கலையுலகில் புதிய அலைகளைத் தோற்றுவித்த சித்ராலயா நிறுவனத்தின் சின்னம், பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்த ஒன்று. படகைத் துடுப்பால் செலுத்தும் ஒரு வலுவான வாலிபன், அவன் முன்பாக ஒரு பெண் அந்தப் பயணத்தை ரசித்தபடி அமர்ந்திருப்பது போன்ற அந்த சின்னம் திரையில் தோன்றும் தொடக்கக் காட்சியில் பார்வையாளர்கள் சிலிர்ப்புடன் நிமிர்ந்து அமர்வார்கள்.
வாழ்க்கை ரசிக்கத்தக்க ஒரு ரம்மியமான பயணம் என்பதைக் கூறிய சின்னம் மட்டுமல்ல; அதைக் கண்டமாத்திரத்தில் ஏமாற்றாத படைப்பைக் காண வந்திருக்கிறோம் என்னும் கர்வத்தையும் அந்தச் சின்னம் தோன்றும் பின்னணியில் ஒலிக்கும் ‘லோகோ மியூசிக்’ தந்துவிடும்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று எல்லாப் பகுதிகளிலும் கொடி கட்டிப் பறந்தது சித்ராலயா. ராஜ்கபூர் குடும்பம், லதா மங்கேஷ்கர், ராஜேந்திர குமார், மெஹ்மூத், சசி கபூர், தேவ் ஆனந்த் , வஹீதா ரஹ்மான் உள்பட அனைத்து வடஇந்திய நட்சத்திரங்களையும் ஆட்டி வைத்தது சித்ராலயா.
இன்றும் சித்ராலயாவின் சாதனைகளை, பெருமைகளைப் பற்றிய பசுமையான நினைவுகளோடு தனது எண்பத்தி ஆறாவது வயதிலும், துடிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார் ‘சித்ராலயா’ கோபு. சித்ராலயா நிறுவனத்தைத் தனது பெயரிலேயே தாங்கிக்கொண்டு, ‘கல்யாணப் பரிசு’ காலத்தின் அதே நகைச்சுவை உணர்வு இம்மியளவும் குறையாமல், குரலிலும் எவ்வித நடுக்கமுமின்றி சென்னை திருவான்மியூரில் கலகலப்புடன் வசிக்கிறார்.
காலை வாக்கிங் செல்பவர்கள் பய்ட் பைப்பரின் (pied piper) இசையில் மயங்கி அவரைப் பின்தொடரும் குழந்தைகளைப் போன்று, இன்றும் கோபு பின்பாகவே செல்ல, அவர் தனது திரைப்பட அனுபவங்களைக் கூறிக்கொண்டே செல்வது வழக்கம். ஆங்காங்கே அவர்கள் சிரித்துக்கொண்டு நிற்க நடைப்பயிற்சி, சிரிப்புப் பயிற்சியாக மாறிவிடும்.
அவரின் 'வாக் தி லாஃப்’ அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். ‘சித்ராலயா’ கோபுவுடன் `தி இந்து’ தமிழும் அன்றாடம் நடைப்பயிற்சி செய்து, சித்ராலயா நாட்களின் அனுபவங்களை உங்களுக்குப் புதிய தொடராக வழங்குகிறது.
கேமராவுக்கு, முன்பாகவும், பின்பாகவும், நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நிகழ்வுகளை, என் எஸ் கிருஷ்ணன் மனைவி டி.ஏ. மதுரம் தொடங்கி, பாலையா, தங்கவேலு, சாரங்கபாணி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், எம். சரோஜா, மனோரமா, சச்சு, ரமாப்ரபா, கோவை சரளா உட்பட அனைவருக்கும் நகைச்சுவை வசனங்களை எழுதிய அனுபவங்களை அவர் கூறக் கேட்டால் நேரம் போவதே தெரியாது.
சிவாஜி கணேசன், ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் தொடங்கி , இன்றைய விக்ரம், பாண்டியராஜன் வரை பல நடிகர்களுடனும் பத்மினி, ஜெயலலிதா, தேவிகா தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரை பலருடன் பணிபுரிந்து விட்டார். “அவரது திரைப்பட நகைச்சுவை ஒரு கால் பங்குதான். அவருடன் நேராகப் பேசினால்தான் அவரது முழு நகைச்சுவையையும் அனுபவிக்கலாம்” என்று கமல் ஹாசன் கூறியிருக்கிறார். கிரேசி மோகன் இவரைத் தனது ஆசானாகக் கருதி வருகிறார்.
இனி ஒவ்வொரு, வெள்ளிக்கிழமையும் இந்த வேடிக்கை மனிதரின் அனுபவங்களை `தி இந்து தமிழ்’ உங்களுக்கும் கடத்தி உங்கள் நினைவுகளைக் கிளறவிருக்கிறது. மனம் விட்டுச் சிரிக்கத் தயாராக இருங்கள்.
படங்கள் உதவி: ஞானம்