வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என கலந்துகட்டி நடித்தபடி தனது புகழ்க்கொடியைப் பாலிவுட்டில் பறக்க விட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் நாயகனாகவும் கத்ரீனா கைஃப் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் நேரடியாகத் தயாராகி இருக்கிறது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவுத் ராய், ஜெயா துரானி, கேவல் கார்க் ஆகிய நான்கு பேர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். ‘அந்தாதுன்’ பிளாக் பஸ்டர் கொடுத்தாரே அவரேதான்! தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்க, இந்திப் பதிப்பில் முழுவதும் பாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதேநேரம், கத்ரீனா கைஃப் உடன் ராதிகா ஆப்தே, அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். படத்தின் கதைக்களம், கிறிஸ்மஸ் பண்டிகையை மையமாகக் கொண்டிருப்பதால் இன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது புற்றீசல் போல் பல படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பதால், இரண்டு வாரங்கள் தள்ளி ‘மெரி கிறிஸ்துமஸ்’ வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஹிரித்திக் நடனத்துக்குப் பாராட்டு! - இந்தி சினிமாவின் சூப்பர் ஹீரோ அவதாரங்கள், நடனத்தை மையமாகக் கொண்ட கதைக் களங்கள் என்றால் அதில் வாகை சூடும் மாஸ் ஹீரோ ஹிரித்திக் ரோஷன். அதனால், இந்தியாவின் நடன சூப்பர் ஹீரோ என்று நெட்டிசன்களால் அழைக்கப்படுபவர். ஷாரூக் கானின் ‘ஜவான்’ திரைப்படம் தமிழ்நாட்டில் 75 கோடியை வசூல் செய்ததைத் தொடர்ந்து, ஹிரித்திக் ரோஷனும் தமிழ் ரசிகர்களை நாடி வந்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஃபைட்டர்’ என்கிற படம் தமிழிலும் வெளிவரவிருக்கிறது.
இதற்கு முன்னோட்டமாக வெளியான ‘ஷேர் குல் கயே’ என்கிற பாடலில் ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஹிரித்திக்கின் ‘கஹோ நா ப்யார் ஹே’, ‘கபி குஷி கபீ கம்’, ‘தூம் 2’ போன்ற படங்களில் அவர் அதிரடி ஆட்டம் ஆடியதை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்குமுன் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பேங் பேங்’, ‘வார்’ படங்களில் நடித்திருந்தார் ஹிரித்திக். மீண்டும் ‘ஃபைட்டர்’ இவர்களை இணைந்திருக்கின்றது. இப்படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார். ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடி தீபிகா படுகோனே.
அஞ்சலிக்கு அடையாளம்! - கதாபாத்திரமாக உணர வைக்கும் பெண் நடிகர்களில் அஞ்சலியின் நடிப்புத் திறன் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. தம்மில் ஒருவர்போல் பார்வையாளர்களை உணர வைக்கும் அவர், தமிழ் சினிமாவிலிருந்து காணாமல்போகும்போதெல்லாம், அவரை மீண்டும் மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வருவார் இயக்குநர் ராம். இம்முறை, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அவர் இயக்கியிருக்கும் ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் அஞ்சலியை நடிக்க வைத்திருக்கிறார். இப்படம் நெதர்லாந்து நாட்டில் ஜனவரியில் நடக்கவிருக்கும் 53வது ரோட்டர்டாம் சர்வதேசப் படவிழாவில் திரையிடத் தேர்வாகியிருக்கிறது. இயக்குநர் ராம் படங்களில் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அஞ்சலிக்கு ஒரு அடையாளமாக மாறியிருப்பதுபோலவே இந்தப் படத்திலும் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறாராம் இயக்குநர்.