ந
கரத்தின் புழுதியோ பரபரப்போ படியாத சிஸிலியன் தீவு. நடுத்தர வயதான இவானும் சியாராவும் தனித்தனியாக வந்து இறங்குகிறார்கள். தீவின் கரையோரத்தில் கரடுமுரடான பவளப்பாறைகள் குன்றுபோலக் குவிந்திருக்கின்றன. அவற்றின் மேற்பரப்பில் காட்டுப்பூக்கள் நிறைந்த புல்வெளி விரிந்துகிடக்கிறது. அதையொட்டி வானுக்கும் பூமிக்குமாக நிற்கின்ற பாழடைந்த கலங்கரை விளக்கக் கட்டிடத்தை இருவரும் பார்வையிடுகிறார்கள். இப்படித் தொடங்குகிறது, சுவிட்சர்லாந்து இயக்குநர் ரொலாண்டோ கோலாவின் திரைப்படமான ‘செவன் டேஸ்’ (Seven Days).
2017-ம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ‘லா லா லேண்ட்’, ‘எ மோன்ஸ்டர் கால்ஸ்’ திரைப்படங்களின் வரிசையில் இத்திரைப்படமும் ஒன்று. உலகெங்கும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘செவன் டேஸ்’ 15-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உலக சினிமா ஆர்வலர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இத்தாலியின் பெருநகரம் ஒன்றில் வசிக்கும் இவானின் அண்ணன் ரிச்சர்டுக்கும் சியாராவின் நெருங்கிய தோழி ஃபிரான்செஸ்காவுக்கும் ஒரு வாரத்தில் காதல் திருமணம். தன்னுடைய திருமணம் இத்தீவில்தான் நடைபெற வேண்டும் என்கிற கனவுகொண்டிருக்கிறார் ரிச்சர்ட். அதற்கான ஏற்பாடுகளை ஆறு நாட்களுக்குள் செய்யவே இவானும் சியாராவும் இந்தத் தீவுக்கு வந்திருக்கிறார்கள். முன்பின் அறிமுகமில்லாத இவ்விருவரும் சேர்ந்து வசதி வாய்ப்புகள் இல்லாத தீவில் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது சவாலான காரியமாக இருக்கிறது. ஆடை வடிவமைப்பாளரான சியாரா அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்தவளாகத் இருக்கிறாள். தாவரவியல் அறிஞரான இவான் விரக்தியும் கடுகடுப்பும் நிறைந்து காணப்படுகிறார்.
இடிபாடுகளாகக் கிடக்கும் கலங்கரை விளக்கக் கட்டிடத்தில்தான் தன்னுடைய முதலிரவு நடக்க வேண்டும் என்கிற தன் அண்ணனுடைய ஆசை இவானுக்கு அபத்தமாகத் தோன்றி எரிச்சலூட்டுகிறது. ஆனால், போதை பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடந்த ரிச்சர்ட் 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் இதே கலங்கரைவிளக்கக் கட்டிடத்தின் மேல்தளத்தில் வந்து நின்றிருக்கிறார்.
அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை பிரம்மாண்டம், அமைதியைத் தன்னகத்தே கொண்டும் காட்சியளிக்கும் நீலப் பெருங்கடலைத் தரிசித்தபோதுதான் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டார் என்கிற உண்மை, சியாராவுடனான உரையாடல் வழியாக இவானுக்குத் தெரியவருகிறது. அதன் பிறகு இவானின் நடத்தையில் மாற்றம் ஏற்படத்தொடங்குகிறது. சியாராவின் குணத்தாலும் வனப்பாலும் இவான் ஈர்க்கப்படுகிறார்.
அதிகமும் முதியவர்கள் வாழும் அத்தீவில் இருவருக்கும் துணையும், நேசமும் தேவைப்படுகிறது. நட்பு காதலாக மலர்கிறது. ஏற்கெனவே மணமுறிவினால் உறவின் மீதான நம்பிக்கை இழந்த இவான், இதையும் தற்காலிகமான உறவாகப் பாவித்துவிட்டுப் பின்பு அவரவர் உலகிற்குத் திரும்பிவிடலாம் என எண்ணுகிறார். மறுமுனையில் காதல் கடல் போல ஆழமானது என்கிற உறுதிபடைத்தவளாக சியாரா இருக்கிறார்.
ஆனால், அவருக்குத் திருமணமாகிக் கணவரும் விடலைப்பருவத்தில் மகளும் இருக்கிறார்கள். இதனால், இவானுக்கும் சியாராவுக்கும் இடையில் மிகப் பெரிய மனப் போராட்டம் நடக்கிறது. விலகவும் முடியாமல், இணையவும் முடியாமல் இருவரும் தத்தளிக்கிறார்கள். ஒருகட்டத்தில் தாங்கள் நடத்தவிருக்கும் திருமணம் நடைபெறும் நாள்வரை காதலித்துவிட்டுப் பின்பு பிரிந்துபோய்விடலாம் என்கிற முடிவை எட்டுகிறார்கள்.
சியாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரெல்லா இப்படத்தின் படப்பிடிப்பைப் பற்றி ‘தி இத்தாலியன் இன்ஸைடர்’ பத்திரிகைக்காக அளித்த நேர்காணலில், “கிட்டத்தட்ட 12 வாரங்கள் சிஸிலியன் தீவில் தங்கியிருந்தோம். உண்மையாகவே அங்கு எதுவுமே கிடையாது. வங்கி இல்லை, கடை இல்லை, மருந்தகம் இல்லை. ஒரே ஒரு ஹோட்டலும் பாரும்தான். உங்களுக்கு நீங்களேதான் துணை. அதில் சவுகரியம் இருந்தால் மட்டுமே அங்கு வாழ முடியும்” என்றார்.
இப்படிப்பட்ட தீவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் முக்கியக் கதாபாத்திரமாக, கதைசொல்லியாக, ஆழ்மனதின் குரலாகக் கடல் ஜீவித்திருக்கிறது. கடலுக்குள் இவானும் சியாராவும் நீந்தியபடி ஒருவருடைய ஸ்பரிசத்தை மற்றொருவர் உணருதல், திருமணச் சம்பிரதாயமாக படகிலிருந்து கடல் மீது வீசப்படும் பூ வளையங்கள் கடல் மடியில் தஞ்சமடைதல், மணமக்களை வாழ்த்த மதுக் கோப்பையின் விளிம்பை ஆள்காட்டி விரலால் வருடும்போது கடல் அலைகளின் ஒலி எழும்புதல் - இப்படி நீலப் பெருங்கடல் ஆழ்மனதை உருக்கும் வல்லமை படைத்தது என்பது வெவ்வேறு காட்சிப் படிமங்களால் உணர்த்தப்படுகிறது.
தன்னுடைய அண்ணனுக்காக வேண்டாவெறுப்பாகக் கலங்கரைவிளக்கக் கட்டிடத்தைப் புனரமைக்கத் தொடங்கும் இவான், ஒரு கட்டத்தில் அக்கட்டிடத்தோடு ஒன்றிவிடுகிறார். கடைசியில் அதில் விளக்கைப் பொருத்தும்போது சிஸிலியன் தீவு முழுக்கக் காதல் ஒளி பாய்கிறது. இப்படியொரு தீவில் காதல் வயப்படாமல் யாருமே இருக்க முடியாது என்கிற உணர்வு உள்ளார்ந்து ஏற்படுகிறது.