ஆதி... கதைக்காக ‘மிருகம்' படத்தில் தன்னை நரம்பாக மாற்றி அதிர வைத்தவர், 'அரவான்' படத்தில் கட்டுடல் காளையாக மாறி அசரடித்தார். ‘கோச்சடையான்' படத்தில் தலைகாட்டினார். இப்போது ‘யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் நடித்துவருகிறார்.
ஒரு குறளையே தலைப்பா வைச்சிருக்கீங்களே...?
சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தினை மையப்படுத்திய கதை. இந்தக் கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிச்சப்போ, இந்தக் குறள் பொருத்தமா இருந்துச்சு. நிறைய சம்பவங்களில் பிரச்சினை பெரிசா இருக்கும். ஆனா அது ஆரம்பிச்ச இடம் ஒரு வார்த்தையா இருக்கலாம் அல்லது ஒரு செயலா இருக்கலாம். அந்த ஒரு விஷயத்தை மையப்படுத்தித்தான் இந்தக் கதை நகரும்.
நண்பர்களை வைச்சு நிறையப் படங்கள் வந்திருந்தாலும், எந்த ஒரு படத்தோட சாயலும் இந்தப் படத்திற்கு இருக்காது.
காதல் காட்சிகள் எல்லாம் ரொம்ப லவ்லியா பண்ணிருக்கீங்கனு கேள்விப்பட்டோமே…
இந்த மாதிரிச் செய்திகளை எப்படிச் சார் ஸ்மெல் பண்றீங்க? மலையாளத்தில் ‘1983' அப்படிங்கிற படம் மூலம் பிரபலமான நிக்கி கல்ரானி இந்தப் படம் மூலமா தமிழில் அறிமுகமாகிறார். ‘பையா' படத்தோட கன்னட ரீமேக்கில் தமன்னா வேடத்தில் நடித்தவர் இவர். ஒரு ரியல் லவ்வை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உங்கள் படம் மூலமா தமிழில் அறிமுகமாகிறாரே?
‘குரு' படத்தில் நீங்கள் அவரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது டப்பிங் பண்ணப்பட்ட படம். முதல் நேரடி தென்னிந்திய படம் இதுதான். அவர் இந்தப் படத்தோட கதையைக் கேட்டவுடன், 'தென்னிந்திய மொழி படங்களில் அறிமுகமாக ரொம்ப நாள் காத்திருக்கிறேன். ஆனால், நல்ல கதை எனக்குக் கிடைக்கவில்லை. மிதுன் தென்னிந்தியாவில் அறிமுகமாக நல்ல கதை இதுதான்' என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
நண்பர்கள் பற்றிய படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, பசுபதி - யார்தான் வில்லன்?
வில்லன், நாயகன் அப்படிங்கிற விஷயமே இந்தப் படத்தில் கிடையாது. சினிமாவில் நாலு பேருக்கு நல்லது செய்தால் நல்லவன், நாலு பேருக்குக் கெட்டது செய்தால் கெட்டவன். நிஜ வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால், நல்லது செய்யுற அனைவரும் நல்லவன் கிடையாது. கெட்டது செய்யுற அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. நல்லது செய்யுறப்போ சில கெட்டதும் செய்வார்கள். இந்தப் படத்தில் நிலவும் சூழ்நிலைதான் ஒரு பாத்திரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தப் படத்துல சூழ்நிலைதான் வில்லன், ஹீரோ ரெண்டுமே.
கோச்சடையான்ல ரொம்ப சின்ன ரோலில் நடிச்சிருந்தீங்க. ரஜினி என்ன சொன்னார்?
சின்ன ரோல் பண்ணியிருந்தாலும், ரொம்ப முக்கியமான ரோல். முக்கியமான காட்சிகளில் எல்லாம் நான் இருப்பேன். நிறைய பாராட்டுகள். முதல் நாள் மட்டும் தான் ரஜினி சார்கூடப் பணியாற்றுகிறோம் என்ற எண்ணம் இருந்தது. அவருக்குள்ள என்னை இழுத்துக்கிட்டார். சூப்பர் ஸ்டார் அப்படிங்கிற எண்ணத்தை உடைச்சுட்டார். முதல் ஷாட்டே அவரோட தோள் மீது கை போட்டு நடந்து போகிற மாதிரி காட்சி. நான் பயந்தேன். அவர் பயத்தைப் போக்கிட்டார். சேர்ந்து சாப்பிட்டது, பேசினது எல்லாம் மறக்கவே முடியாது. ஒரு நடிகன் எவ்வளவு பெரிய உச்சத்துக்குப் போனாலும் எப்படி நடந்துக்கணும்கிறதை ரஜினி சாரைப் பார்த்துக் கத்துக்கலாம்.
‘அரவான்' படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?"
நிச்சயமா இருக்கு. ‘அரவான்' படப்பிடிப் பின்போது எனக்கு ஏற்பட்ட வலிகள் ஞாபகத் திற்கு வருகின்றன என்று என்னோட சமூக வலைத்தளத்தில் சமீபத்துல ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். என்னோட வாழ்க்கைல 30 வருஷம் கழிச்சுக்கூட ‘அரவான்' டி.வி.டி. போட்டுப் பார்க்கும்போது ஒரு நடிகனா ரொம்ப சந்தோஷமா இருப்பேன். ‘அரவான்' என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.