படங்கள் உதவி: ஞானம் 
இந்து டாக்கீஸ்

அந்த நாள் ஞாபகம் - நான் ஏன் ‘ஜெண்டில்மேன்’?

நட்சத்திரன்

மறைந்த சரத்பாபு 1992இல் அளித்த விரிவான பேட்டியில்  ‘உங்களை ஜென்டில்மேன் என்று பலரும் குறிப்பிடுவார்கள். உண்மையில் நீங்கள் எந்த அளவு ஜென்டில்மேன்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த விரிவான பதில்: “என்னைச் சந்திக்கும் ரசிகர்கள் 'நீங்க ஜென்டில்மென் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறீர்கள்’ என்று சொல்கிறார்கள். என்னை அறிமுகப்படுத்திய கே. பாலசந்தர் சார் முதலில் என்னை ‘நிழல் நிஜமாகிறது’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவரது இயக்கத்தில் நான் நடித்து முதலில் வெளிவந்த படம் ‘பட்டினப் பிரவேசம்’. அப்போது படப்பிடிப்பில் கே.பி சார் என்னை 'ஜென்டில்மேன்’ என்று அழைக்கத் தொடங்க, பலரும் அப்படியே குறிப்பிடத் தொடங்கினார்கள். ‘பட்டினப் பிரவேச’த்தில் என் கதாபாத்திரமும் தன்னை அடிக்கடி ஜென்டில்மேன் என்று குறிப்பிடுவது போல் அமைந்து விட்டது.

கண்ணியமான கதாபாத்திரங்களுக்குத்தான் என்னைப் பலரும் அணுகியுள்ளனர். இதில் எனக்குப் பெருமைதான். ஆனால் இந்த இமேஜ் சில விஷயங்களில் எனக்கு எதிராகவும் போயிருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயகர்களுக்குக்கூட சில வில்லன் குணங்கள் இருப்பதாக அமைக்கிறார்கள். அதனால்தான் எனக்குத் தமிழ்ப் படங்களில் வாய்ப்பு குறைந்து விட்டதோ என்னவோ! அதேசமயம், நானும் பல வில்லன் கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறேன். ‘உச்சக் கட்டம்’ படத்தில் எனக்கு வித்தியாசமான கேரக்டர். மக்களும் ரசித் தார்கள். ‘அலைகள் ஓய்வதில்லை’ தெலுங்கில் எடுக்கப்பட்ட போது தமிழில் தியாகராஜன் செய்த கதாபாத்திரத்தை நான் தெலுங்கில் செய்தேன்.

அடிப்படையில் நான் ஒரு ‘சாஃப்ட்’டான மனிதன்தான். மூர்க்கமான கோபமெல்லாம் வராது. ஆந்திராவில் பள்ளியில் படிக்கும்போதும் சரி, கல்லூரியில் பிஎஸ்சி படிக்கும் போதும் சரி அதிர்ந்துகூடப் பேசாத எனது அப்போதைய கனவு, மிடுக்கும் துடிப்பும் மிக்க ஒரு போலீஸ் அதிகாரியாக ஆவது. அதற்கேற்ற உடல்வாகு என்னிடம் இருந்தது. ஆனால், கால ஓட்டத்தில் நடிப்பு ஆசை பிறந்தது. சினிமாவில் நடிக்க முயன்றேன். கணிசமான எண்ணிக்கையில் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தபோதும் நான் ஏன் ஒரு அழுத்தமான இடத்தைத் திரையுலகில் பிடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நடிப்பவர்களை நட்சத்திரம், நடிகர் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

ரஜினி போன்றவர்கள் ஸ்டார்கள். அவர்கள் நடிப்பு பேசப்படுகிறதோ இல்லையோ அவர்கள் பரபரப்பாகப் பேசப்படுபவர்கள். சஞ்சீவ் குமார், நசிருதீன் ஷா போன்றவர்கள் சிறந்த நடிகர்கள். அவர்களுடைய நடிப்புதான் விமர்சிக்கப்படும். கமல் பாதி ஸ்டார் பாதி ஆக்டர். என்னால் ​வன்முறைக் காட்சிகள், சண்டை போன்ற சமாச்சரங்களையெல்லாம் செய்ய முடியாது. அதனால் ஸ்டார் ஆக முடியாது. எனக்கு ஒத்துவராததை நான் செய்யத் தயாரில்லை. நான் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தால் போதும். அந்த விருப்பம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்றுதான் நம்புகிறேன்

SCROLL FOR NEXT