பசுமையான தென்காசியில் நடக்கிறது கதை. அங்கு தந்தையின் (இயக்குநர் மகேந்திரன்) போட்டோ ஸ்டுடியோவைநடத்திவருகிறார் உதயநிதி. கல்யாணம், காதுகுத்து, துக்க வீடு எதுவாக இருந்தாலும் போட்டோ என்றால் அவர் தான்.
அப்பாவையும், ஸ்டுடியோவையும் கவனித்துக்கொள்வது, காதலிக்கு ‘லாலா’ கடை மசால் வடை வாங்கித் தருவது என ஆரவாரம் இல்லாமல் அமைதியாகச் செல்கிறது அவர் வாழ்க்கை. அதில் திடீரென ஒரு கைகலப்பு. ஊர்கூடி வேடிக்கை பார்க்க, உதயநிதியை முச்சந்தியில் வைத்து அடித்துத் துவைத்து அவமானப்படுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. அவரை திருப்பி அடித்து பழிவாங்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். அதுவரை செருப்பு போடுவதில்லை என்று ஊர் முன்பு சபதம் செய்கிறார். செருப்பு போட்டாரா? என்பது மீதிக்கதை.
மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் மறுஆக்கம்தான் ‘நிமிர்’.
‘மலமேலே திரிவெச்சு’ என்ற பாட லில் கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களின் வட்டார வாழ்க்கையைக் காட்டியபடி, கதாபாத்திரங்களின் இயல் பான அறிமுகத்துடன் ‘மகேஷிண்டே பிரதிகாரம் மூலப் படம் இறுதிவரை ஒரே சீராக பயணிக்கும். அந்த எதார்த்தச் சித்தரிப்பை தமிழுக்கு இடமாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
உதயநிதி தொடங்கி துணை நடிகர்கள் வரை அனைவரும் கதாபாத்திரங்களாக தெரிவதற்கு அவர்களைப் படைத்த கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரனே காரணம்.
நான்கு காட்சிகளில் நடிகராக வந்தாலும், நறுக்குத் தெறித்தாற்போல வசனங்கள் எழுதி தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார் வசனகர்த்தா சமுத்திரக்கனி.
‘நேஷனல் (ஸ்டுடியோ பெயர்) செல்வம்’ கதாபாத்திரம் உதயநிதிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அமைதி யான தந்தைக்கு மகனாக, காதலியைக் கண்டு உருகும் எளிய காதலனாக, காதலியைத் தொலைத்து நிற்கும் ஏமாளியாக, தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்கும்வரை செருப்பு போட மறுக்கும் வைராக்கியம் கொண்ட இளைஞனாக, தந்தையிடம் இருக்கும் கலையை ஒரு கட்டத்தில் கண்டெடுக்கும் புகைப்படக் கலைஞனாக இயல்பான நடிப்பைத் தர முடிந்தவரை முயன்றிருக்கிறார்.
அதிகம் பேசாமல், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஒரு ஒளிப்படத் தருணமாகவே பார்க்கும் அமைதியான அப்பா கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
அவருக்கு இணையாக எம்.எஸ்.பாஸ்கர். சமுத்திரக்கனியை அடிக்கச் செல்லும் உதயநிதியுடன், அவர் பட்ட அவமானத்தைத் தனது முகத்தில் ஏந்திக்கொண்டு கூடவே நடந்துசெல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் நடையில் புழுதி யாய் தெறிக்கிறது வீராப்பு.
பார்வதி நாயர், நமீதா புரமோத் என இரு கதாநாயகிகள். நமீதா புரமோத்தின் துருதுருப்பும், நடிப்பும் தனித்துக் காட்டுகின்றன.
அருள்தாஸ், சண்முகராஜன், கருணாகரன், கஞ்சா கருப்பு, மாதவனாக வருபவர், மாப்பிள்ளையாக வருபவர் என துணைக் கதாபாத்திரங்களைச் சுற்றி சூழ்ந்திருக்கும் தூய நகைச்சுவை, கதையின் முக்கிய திருப்பத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது. இதுவே அனைத்துத் தரப்பு பார்வையாளர்களுக்குமான ஆரோக்கியமான நகைச்சுவை என்பதை திரையரங்கில் எழும் சிரிப்பொலி உணர்த்துகிறது.
கதாபாத்திரங்களை நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர் கள் போல உணரவைக்கிறது திரைப் படம்.
மலையும், மழையும் குளிரூட்ட, ஆறு, சிற்றோடைகள் சலசலக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரியும் பசுமை, கண்களை நிறைக்கும் தென்காசியின் நிலவியல் தன்மையை உயிரோட்டத்துடன் காட்சிகளுக்குள் சலன ஓவியமாய் பதிந்து தந்திருக்கும்என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு தான் படத்தின் அசல் கதாநாயகன்.
தென்காசிப் பகுதி வீடுகளின் வெளி அழகு, மிகையற்ற அரங்கப் பொருட்களின் வழியாக வெளிப்படும் உள்ளரங்க அழகு ஆகிவற்றில் கலை இயக்கம் என்பதைக் கண்ணுக்குத் தெரியாமல் செய்திருக்கும் மோகன் தாஸ், கதைக்கான கால அளவு, திரைக்கதை தீர்மானிக்கும் வெட்டுக்கள் ஆகியவற்றில் கச்சிதமான படத்தொகுப்பைத் தந்திருக்கும் ஐயப்பன் நாயர் ஆகியோரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
டர்புகா சிவா - அஜனீஷ் லோக்நாத் இருவர் இசையில் மென்மையாய் வருடும் 'நெஞ்சில் மாமழை' பாடல் உட்பட அனைத்துப் பாடல்களும், பின்னணி இசையும் ஈர்க்கின்றன.
‘பூவுக்கு தாப்பா எதுக்கு? ஊருக்கு கதவா இருக்கு?’ தொடக்கப் பாடல், தமிழுக்கான ஒட்டவைப்பாக துறுத்திக்கொண்டு தெரிகிறது. அதில் வரும் பெண்களிடமும் தமிழைவிட கேரளச் சாயலே அதிகம் தெரிகிறது. காதல் தவிர்த்த மற்ற காட்சிகளில் உதயநிதி இன்னும் அதிக ஈடுபாடு காட்டியிருக் கலாம்.
இதுபோன்ற சிற்சில குறைகளை தவிர்த்துப் பார்த்தால், ஓரளவு நிமிர்ந்தே நிற்கிறது ‘நிமிர்’.