இந்து டாக்கீஸ்

சாக்ஸபோனில் ஒரு குதிரையோட்டம்

ம.ரமேஷ்

பி

ரபல மிருதங்க வித்வான், இசை நிபுணரான டி.வி.கோபாலகிருஷ்ணன் மகன் ஜி.ராமநாதன். இவர் வயலின், சாக்ஸபோன், மிருதங்கம், கஞ்சிரா இசைக்கும் திறன் கொண்டவர். மேற்கத்திய சங்கீதமும் தெரியும். இளையராஜா வின் இசைக் குழுவில் வயலின் கலைஞராக 30 ஆண்டுகளாக இருக்கிறார். ‘லாலி லாலி ஆராரோ’ என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு சமீபத்தில் கிடைத்துள் ளது. இப்படி பன்முகத் திறன் பெற்ற கலைஞராக இருந்தாலும், கர்னாடக இசை உலகில் ‘சாக்ஸ போன் ராமநாதன்’ என்றே பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த மார்கழி இசை விழாவில், சென்னை கல்சுரல் அகாடமியில் இவரது கச்சேரி நடந்தது.

ஸ்வரங்களை கம்பிபோலப் பிடிக்காமல், அலைகள்போல அசைத்துப் பாடுவதை கர்னாடக இசையில் ‘கமகம்’ என்பர். இந்த கமகங்களை மையமாகக் கொண்ட கர்னாடக இசைக்கு சாக்ஸபோன் போன்ற மேற்கத்தியக் கருவிகள் பெரும்பாலும் பொருந்தாது. ஆனாலும், தான் பெற்ற பயிற்சியின் பலத்தால் மிக அருமையாக வாசித்தார்.

சிறப்பு அம்சமாக, ஹம்சவினோதினி என்ற ராகத்தைக் கையாண்டார். அது அவ்வள வாக பிரபலமான ராகம் அல்ல. சங்கராபரணம் ராகத்தில் ‘ப’ என்ற ஸ்வரத்தை நீக்கினால் கிடைப்பது ஹம்சவினோதினி. அதில் நீண்ட ஆலாபனையை இழைத்து ‘சரணம் பவ’ எனத் தொடங்கும் நாராயண தீர்த்தர் பாடலை, குதிரையின் ஓட்டம் போல் வேகமாக வாசித்தார்.

கச்சேரியின் தொடக்கத்தில் தியாகராஜரின் 4 கீர்த்தனைகளை அடுத்தடுத்து அள்ளித் தெளித்தது ராமநாதனின் சாக்ஸபோன். முதலில் ‘அபீஷ்ட வரத’ எனத் தொடங்கும் ஹம்ஸத்வனி ராகப் பாடல், பின்னர் ‘மனசா எடுலோ’ (மலயமாருதம்), ‘ஞானமு சகராத’ (பூர்விகல்யாணி), ‘நாத தனுமனிசம்’ (சித்தரஞ்சனி) ஆகியவை இடம்பெற்றன. இவற்றுள் விஸ்தாரமாக அவர் வாசித்தது பூர்வி கல்யாணி. ‘பரமாத்முடு ஜீவாத்முடு’ என்ற வரியை எடுத்துக்கொண்டு நிரவல் செய்து (அதாவது, ராகம் பிறழாமல் வெவ்வேறு டியூன்களில் ஒரே வரியை இசைப்பது) ஸ்வரங்கள் இசைத்தார்.

ஹம்சவினோதினியை அடுத்து பிலஹரி ராகத்தை விரிவாக வாசித்து, ‘டொரகுண இட்டுவன்டி சேவா’ என்ற தியாகராஜ கீர்த்தனையைப் பாடி, பின்னர் ‘என்ன கவி பாடினாலும்’ எனத் தொடங்கும் ஆனையம்பட்டி ஆதிசேஷய்யர் இயற்றிய நீல மணி ராகப் பாடலுடன் நிறைவு செய்தார் ராமநாதன். வயலின் நிபுணர் சேர்த்தலை சிவகுமார், மிருதங்கக் கலைஞர் மாயூரம் மனோகரன் உடன் வாசித்து கச்சேரியை போஷித்தனர்.

SCROLL FOR NEXT