இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: தாத்தாவுக்கும் பேரனுக்கும் சண்டை!

எஸ்.எஸ்.லெனின்

கு

ழந்தைகளின் உலகம் அலாதியானது. அதில் இரண்டாம் குழந்தைப் பருவத்தினரான முதியோர் ஊடாடுவதும், அவர்கள் இடையிலான பாசத்தை உரசிப் பார்க்கும் இளைய தலைமுறை உடனான முரண்பாடுகள் எழுந்து அடங்குவதும் இன்னும் அழகு. இவையனைத்தையும் குழந்தையின் பார்வையில் சொல்லும் ‘த வார் வித் கிராண்ட்பா’ திரைப்படம், பிப்ரவரி 23 அன்று வெளியாகிறது.

பத்து வயதாகும் சுட்டிப் பையன் பீட்டருக்குத் தாத்தா என்றால் கொள்ளைப் பிரியம். தொலைவில் பாட்டியுடன் வசித்துவந்த அந்தத் தாத்தா, பாட்டி இறந்ததை அடுத்து இனி தங்களுடன் வசிக்கப் போகிறார் என்று தெரிந்து குஷியாகிறான். ஆனால், பெட்டி படுக்கையுடன் தாத்தா வீட்டுக்குள் நுழைந்த தினத்தில் பீட்டர் அடியோடு மாறிப் போகிறான். காரணம் தாத்தா தனது கால் வலியைக் காரணமாக்கி அவருக்கு ஒதுக்கப்பட்ட மாடியறைக்குப் பதிலாக பீட்டரின் அறைக்குள் ஊடுருவுகிறார். பீட்டரின் படுக்கையறை என்பது அவனது தனி உலகம். கூடவே மாடியறையை அவனுக்கு அறவே பிடிக்காது.

எனவே, திடீர் அறைவாசியான தாத்தாவிடம் தனது அறையைத் திரும்ப ஒப்படைக்குமாறு நிர்ப்பந்திக்கிறான். மறுக்கும் அவர் மீது அதிகாரபூர்வமான போரை அறிவிக்கிறான் பீட்டர். நண்பர்கள் உதவியுடன் பல குறுக்கு வழிகளில் தாத்தாவை வழிக்குக் கொண்டுவரவும் முயல்கிறான். தனிமையில் தவித்த அந்த வயோதிகருக்குப் பேரனின் போர் பிடித்திருக்க வேண்டும். அவனுடன் சரிக்கு சரியாக சமர் செய்கிறார். பேரனுக்கும் தாத்தாவுக்குமான போரில் என்ன நடக்கிறது, அதன் முடிவு அவர்களை எங்கே இட்டுச் செல்கிறது என்பது மீதிக் கதை.

அமெரிக்கக் குழந்தைகள் எழுத்தாளரான ராபர்ட் கிம்மல் ஸ்மித், எண்பதுகளில் இதே தலைப்பில் எழுதிய பிரபல நாவலைத் தழுவி, தற்போது ‘த வார் வித் கிராண்ட்பா’ திரைப்படமாக உருவாகி இருக்கிறது. தாத்தாவாக ராபர்ட் டி நீரோ, பேரனாக ஓக்ஸ் ஃபெக்லி (Oakes Fegley) நடிக்க, உடன் உமா தர்மன், கிறிஸ்டோஃபர் வாகன் உள்ளிட்டோர் தோன்றும் இத்திரைப்படத்தை டிம் ஹில் இயக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT