இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: மன்னர் வகையறா

இந்து டாக்கீஸ் குழு

ஊரில் பெரிய விவசாயி யான பிரபுவின் மகன் விமல். சட்டக் கல்லூரி இறுதியாண்டு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். அவர் வக்கீல் ஆகிவிடுவார் என்று சொல்லிச் சொல்லியே ஊரில் காமெடி ரவுடியிஸம் செய்கிறார் அவரது மாமா ரோபோ சங்கர். ஊரில் திடீரென முளைத்த இறால் பண்ணை யால் விளைநிலங்கள் கெட்டுப் போக, பண்ணை நடத்தும் கருணாகரனை எதிர்க்கிறார் பிரபு. இருவருக்கும் பகை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பண்ணையை மூடவைக்கிறார் பிரபு. இதற்கிடையில், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஆனந்தியை காதலிக்கிறார் விமல். ஆனந்தியின் அக்காவுக்கும், கருணாகரனின் தம்பிக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இந்த சூழலில், விமலின் அண்ணன் விஷம் குடித்துவிடுகிறார். ஆனந்தியின் அக்காவை அவர் காதலித்த விவரம் தெரியவருகிறது. தன் காதலைப் பற்றி கவலைப்படாமல், திருமண வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்தி, தன் அண்ணனுக்கு மணமுடித்து வைக்கிறார் விமல். ஏற்கெனவே இறால் பண்ணை விவகாரத்தில், பிரபு குடும்பம் மீது கருணாகரனுக்கு இருந்த பகை இன்னும் தீவிரமாகிறது. இப்பிரச்சினைகளில் இருந்து விமல் எப்படி மீண்டார்? காதலில் கரை சேர்ந்தாரா? என்பது மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூபதி பாண்டியன் இயக்கியுள்ள படம். அவரது சிறப்பம்சமான நகைச்சுவையோடு, காதல், குடும்ப சென்டிமென்ட், ஆக்சன் ஆகியவற்றை கலந்து ஜனரஞ்சகமான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். சிரிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறார். மற்ற விஷயங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. ஆனால், படத்தின் நீளம் ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது. நீளத்தைக் கூட்டுவதற்காகவே பல பாடல்கள், காட்சிகளை அளவுக்கு அதிகமாக திணித்திருப்பதாகத் தோன்றுகிறது.

ரோபோ சங்கரின் அலப்பறைகள் கலகலப்பாக இருக்கிறது. ஆனால், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து நடிக்க வரும் நடிகைகளே, பெயருக்கு பின்னால் சாதி போடும்போது நான் ஏன் போடக் கூடாது’’ என நீட்டி முழங்குவதும், இரட்டை அர்த்த வசனங்களும், அவர் மீதான ரசிப்பை மழுங்கடிக்கச் செய்துவிடுகின்றன.

தனி டிராக் மட்டுமின்றி, கதைக்குள்ளும் தாராளமாகவே இருக்கிறது நகைச்சுவை. குறிப்பாக விமல் - ஆனந்தி இடையே காதல் அரும்பும் காட்சிகளை நகைச்சுவையாக சித்தரித்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். இதற்கு ஆனந்தியின் துடுக்குத்தனமான கதாபாத்திரப் படைப்பும் நன்கு கைகொடுக்கிறது. இரண்டாம் பாதியில் ஆனந்தியின் ஒட்டுமொத்த குடும்பமும் அவரது அண்ணனிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பதற்காக செய்யும் காரியங்களுக்கு அரங்கமே சிரிப்பொலியில் மூழ்குகிறது.

ஆனந்தி சில இடங்களில் மிகை நடிப்பாக தோன்றினாலும், ரசிக்காமல் இருக்க முடியவில்லை. முதல் பாதியில் கல்லூரி மாணவியாக கெத்து காட்டும்போதும், இரண்டாம் பாதியில் காதலனை கரம்பிடிக்க முடிவு எடுக்கும்போதும் ரசிக்க வைக்கிறார். பிரபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன் நிறைவாக நடித்துள்ளனர். சில இடங்களிலேயே வந்தாலும்சிங்கம்புலி காமெடிகளும் கிளாஸ். கிளைமாக்ஸில் ஒரு காட்சியில் மட்டுமே வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் யோகி பாபு. பிக் பாஸ் ஜூலியும் ஒரு காட்சியில் தலைகாட்டுகிறார்.

வழக்கமாக நகைச்சுவைப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் விமல், இதில் ஆக்சனையும் கையில் எடுத்துள்ளார். அவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவரை ஆக்சன் ஹீரோ ஆக்குவதற்காக நன்கு மெனக்கெட்டிருக்கின்றனர். ‘‘கூடப் பிறந்தவனை முதலில் பார்ப்போம். கூட வரப்போறவளை அப்புறம் பார்ப்போம்”, ‘‘வெட்டுறதா இருந்தாலும் அது என் வீட்டு அரிவாளா இருக்கணும்” என வசனங்களில் பேசும் வேகம், அவரது சண்டைக் காட்சிகளிலும் தெறிக்கிறது.

ஜேக்ஸ் பிஜோய் இசையில் பாடல் கள் கேட்கும் ரகம். பி.ஜி.முத்தையா வின் ஒளிப்பதிவில் கதைக் களமும், சூழலும் இயல்பாகப் பதிவாகியுள்ளன.

திரையில் வரும்போதெல்லாம், ‘‘அண்ணனோடு சேரவேண்டும்’’ என்கிறார் சரண்யா. ஆனால் கடைசி வரை அந்த அண்ணனை காட்டாதது, அழுத்தமான காரணங்கள் இன்றியே மனம் மாறி விடும் வில்லன்கள் உள்ளிட்ட இடங்கள் படத்தின் பலவீனம். அதிக நீளத்தை வெட்டி, இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால், ஈர்க்கும் வகையறா படங்கள் பட்டியலில் ‘மன்னர் வகையறா’ இடம்பிடித்திருக்கும்.

SCROLL FOR NEXT