‘பா
குபலி’ படத்தில் தேவசேனா வாக ஈர்த்த அனுஷ்கா இப் போது ‘பாகமதி’யில் சஞ்சலா, பாகமதி என்ற இரு கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
ஃபேன்டஸி வகை படங்களில் அதிகம் கவனம் செலுத்துவது ஏன்?
ஒரு கதையின் கான்செப்ட் பிடித்தால் போதும். அது காதலோ, ஃபேன்டஸியோ, வரலாற்று பின்னணியோ.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்வேன். கமர்ஷியல் களமாக இருந்தாலும்கூட, அதில் மையக்கரு நேர்த்தியாக இருந்தால் போதும். அதுதான் வெற்றியைக் கொடுக் கும் என்பது என் கருத்து. தவிர, ஒவ்வொரு பட கதாபாத்திரத்துக்காகவும் விதவித மான ஆடைகள், அணிகலன்கள், மேக்கப் ஆகியவற்றையே தேர்வு செய்கிறேன். ஆனால், ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் ‘அருந்ததி மாதிரி இருக்கே?’ என்பார்கள். அந்த அளவுக்கு அருந்ததி கதாபாத்திரம் எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மையில் அடுத்தடுத்து வந்த ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ உள்ளிட்ட படங்களுக்கு வெவ்வேறு பின்னணியிலேயே உடைகள், நகைகளை தேர்வு செய்திருக்கிறேன். இப்போது வரும் ‘பாகமதி’ படத்திலும் அந்த வித்தியாசத்தை நன்கு உணரமுடியும்.
‘பாகுபலி’க்கு முன்பே திட்டமிடப்பட்ட ‘பாகமதி’ படம் தாமதமானது ஏன்?
என்னிடம் 2012-ம் ஆண்டில் வந்த கதை இது. பட வேலைகளைத் தொடங்கலாம் என்ற நேரத்தில், ‘பாகுபலி’ படத்தின் பணிகள் ஆரம்பித்துவிட்டன. அதன்பிறகு 4 ஆண்டுகள் ‘பாகுபலி’ படத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. எனக்காக இயக்குநர் அசோக் 4 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தார். மீண்டும் 2016-ல் வேலைகளை திட்டமிட்டு இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் திரைக்கு வருகிறது.
நாயகியை மையமாக வைத்து கதை உருவாக்கி வெற்றி பெரும் பாணி அதிகரித்து வருகிறதே?
இது ஹீரோவுக்கான படம், இது ஹீரோயினுக்கான படம் என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. அந்த காலம் மாறிவிட்டது. நல்ல கதை, நல்ல கன்டென்ட் இருந்தால் போதும். ஆணோ, பெண்ணோ அல் லது இருவருமோ, அதில் யார் யாரெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை மட்டும் பார்த்தால் போதும். படம் பார்க்கும் ரசிகர்களும் இதை உணர ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்ற ஆரோக்கியமான காலகட்டத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், முழு திருப்தியையும் கொடுக்கிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் நீங்கள் நடிப்பதாக திட்டமிட்ட ‘ஒன்றாக’ படம் என்ன ஆனது?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் திட்டமிடப்பட்டுள்ள படம் அது. பயணம், சந்திப்பு, அழகிய அனுபவம், அருமையான நட்சத்திரப் பட்டாளம் என்று சுவாரசியமான களம். ஆகஸ்ட்டில் தொடங்கும் என்று நினைக்கிறேன். பட வேலைகள் தொடங்கும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.
ரஜினி, கமல் அரசியலில் இறங்கு கிறார்களே?
இருவருமே பெரிய அடையாளம். நான் சிறிய நடிகை. அவர்கள் பற்றி கருத்து கூறுவது நல்லதல்ல. என்னிடம் அரசியல் வேண்டாமே.. சிரித்தபடி விடைபெறுகிறார் அனுஷ்கா.