எ
ம்.ஜி.ஆரால் திரைப்படத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகி. அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். 1970-களின் பிற்பகுதியில் பல்வேறு ஊர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்தக் காலத்திலேயே 35 லட்சம் ரூபாயை கட்சி நிதிக்கு வசூல் செய்து கொடுத்தவர். எம்.ஜி.ஆருடனும் ரஜினியுடனும் ஜோடியாக நடித்த ஒரே ஹீரோயின்... நடிகை லதா. தீவிர அரசியலில் இல்லை என்றாலும் அதிமுகவில்தான் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ரஜினிக்கு நெருக்கமான நண்பரான லதாவிடம் நடப்பு அரசியல், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினோம். அதிலிருந்து...
அதிமுக பிரிவுகள் ஒன்றாகி இரட்டை இலை சின்னம் கிடைத்த நிலையிலும் ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை வைத்து ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைமையை தீர்மானிக்க முடியாது. தினகரன் பணபலத்தால் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக தோல்வி அடைந்தது மட்டுமல்ல; திமுகவுக்கும் டெபாசிட் போயிருக்கிறதே. அதே நேரம் அதிமுக அரசு தீவிரமாக மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் சமீபத்தில்தான் முடிந்து கட்சி ஒன்றாகி உள்ளது. இனி மக்கள் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். தினகரனுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. 2011-ல் அவரை ஜெயலலிதா கட்சியை விட்டே நீக்கினார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கவே இல்லை. பிறகு எப்படி தினகரன் தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என்கிறார் என்பது புரியவில்லை.
உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளாரே?
அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.
எம்.ஜி.ஆரோடும் ரஜினியோடும் நெருக்கமாக பழகியவர் நீங்கள். இருவரையும் எப்படி பார்க்கிறீர்கள்?
எம்.ஜி.ஆரோடு யாரையும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் குணம், தனித்தன்மைகள் உண்டு. ரஜினி பழகுவதற்கு எளிமையானவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மனித நேயம் மிக்கவர். பிறருக்கு உதவும் குணம் உள்ளவர். ரஜினிக்கும் அதே குணம் உண்டு.
எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தலைக்கனம் இருந்தது இல்லை. இப்போது இரண்டு படங்களில் நடித்துவிட்டாலே அவர்களை பிடிக்க முடிவதில்லை. ஆனால், ரஜினிகாந்த் இவ்வளவு புகழடைந்தபோதும் மிகவும் எளிமையான மனிதர்.
எனது மகன் தயாரிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து டீசரை வெளியிட்டார். சமீபத்தில் எனது வீட்டுக்கு வந்தவர், என் வீட்டின் பணியாளர்களுடன் கூட புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். அந்த அளவுக்கு எளிமையானவர்.
எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தாலும் அவருக்கு அரசியல் பின்புலம் இருந்தது. ஆனால், ரஜினிக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு வருகிறாரே?
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்து கட்சிக்காக உழைத்தார். திமுகவை வளர்த்தார். அவருக்கு அதிமுகவை தொடங்கி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தொண்டர்களின் வேண்டுகோளால்தான் அதிமுகவை தொடங்கினார். ரஜினிக்கு அதுபோன்ற அரசியல் பின்புலம் இல்லாவிட்டாலும் சமுதாயக் கண்ணோட்டமும் நாட்டு நடப்புகளில் ஆர்வமும் அக்கறையும் உண்டு. அவ்வளவு ஏன்? 1996-ம் ஆண்டு தேர்தலிலேயே அப்போதைய ஜெயலலிதா அரசை எதிர்த்து ரஜினி குரல் கொடுத்தாரே? நடிகரான ரஜினி எப்படி அரசியலில் குரல் கொடுக்கலாம் என்று அப்போது யாரும் கேட்கவில்லையே?
ரஜினிக்கு எல்லா கட்சிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். மக்கள் ஆதரவும் இருக்கிறது. கொள்கையே இல்லாத கட்சிகள், அரசியலை வியாபாரமாக நினைக்கும் கட்சிகள், சாதியவாதத்தைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் கட்சிகள் எல்லாம் இருக்கும்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
அதை யாரும் தடை செய்ய முடியாது. சமீபத்தில் ரசிகர்களை ரஜினி சந்தித்துப் பேசிய நிகழ்ச்சியில் கூட, ‘எம்.ஜி.ஆர். மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார் என்றால் அதற்கு அவருடைய நல்ல குணங்கள்தான் காரணம். நல்ல குணங்கள் இருந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் மக்களால் மதிக்கப்படுவார்கள்’ என்று பேசினார். அதேபோல, நல்ல குணங்களைக் கொண்ட ரஜினியும் மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.
ரஜினி கூறிய ‘ஆன்மிக அரசியல்’ என்ற வார்த்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதே?
அதற்கும் அவரே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளாரே. ஆன்மிக அரசியல் என்றால் நேர்மையான, நியாயமான, நாணயமான, சாதி, மதச்சார்பற்ற அரசியல் என்று ரஜினி விளக்கம் அளித்திருக்கிறார். திராவிட கட்சிகளில் ஒரு காலத்தில் நாத்திகவாதம் மேலோங்கி இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாக சாமி கும்பிடுகிறார்கள். அது மதவாதமா? மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயிலில் ஒருநாள் நான் சாமி தரிசனம் செய்யும்போது என் அருகில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவும் நின்று கொண்டிருந்தார். இதில் தவறில்லை. மதவாதத்தையும் ஆன்மிகத்தையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆன்மிகம் என்பது நல்ல விஷயம்தான்.
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது திமுகவைத் தவிர பிற கட்சிகளிடம் பெரிய எதிர்ப்பு இல்லை. கம்யூனிஸ்டுகள் ஆதரித்தார்கள். இன்று ரஜினிக்கு பல்வேறு கட்சிகளிடமும் கடும் எதிர்ப்பு இருக்கிறதே? அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களே?
ரஜினியைப் பொறுத்தவரை நாகரீகமான அரசியலை விரும்புகிறார். எல்லாருடனும் நட்புணர்வுடன் இருக்க விரும்புகிறார். அது ஆரோக்கியமான அரசியல். தமிழகத்தில்தான் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக நினைக்கும் நிலையும் தனி மனித விமர்சனங்களும் உள்ளது. வட மாநிலங்களில் அரசியலில் எதிர்க்கருத்துக்கள் இருந்தாலும் நட்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர். அந்த நிலை இங்கும் வர வேண்டும். யார் கண்டது? அரசியலில் ரஜினி வெற்றியடைந்தால் இன்று எதிர்ப்பவர்களே கூட நாளை அவர் பக்கம் சேருவார்கள்.
‘‘ரஜினி உங்கள் நெருங்கிய நண்பர். மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்புகிறீர்கள். அந்த அடிப்படையில் அவர் கட்சியில் நீங்கள் சேருவீர்களா?’’ என்று கேட்டதற்கு ‘‘குழந்தையே இன்னும் பிறக்கவில்லை. பெயர் வைக்கச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்டு தனது ‘டிரேட் மார்க்’ கல..கல..கல.. சிரிப்பைக் கொட்டினார் லதா!