இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன் - ‘ரைடு’ கிளம்பிய விக்ரம் பிரபு

செய்திப்பிரிவு

‘டாணாக்காரன்’ , ‘இறுகப்பற்று’ ஆகிய இரண்டு படங்களும் விக்ரம் பிரபுவுக்கு ‘நல்ல நடிகர்’ எனப் பெயர் பெற்றுக் கொடுத்துள்ளன. ஆனால், இதுபோன்ற கதைப் படங்கள் அவரது கமர்ஷியல் ஹீரோ இமேஜுக்கு உதவவில்லை. இதை உடனே உணர்ந்துகொண்டு, தனது அதிரடி ஆக்‌ஷன் கதைக் களத்துக்கு மீண்டும் அவர் திரும்பியிருக்கும் படம் ‘ரைடு’.

தனது பாணிக்கு ஏற்ற ஆக்‌ஷன் கதைகளைத் தேடிவந்த நேரத்தில், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘டகரு’ பொருந்திப் போக, அந்தப் படத்தைத் தமிழில் ‘ரைடு’ ஆக ரீமேக் மேக் செய்திருக்கிறார்கள். இதில் சீருடை அணியாத காவல் அதிகாரி வேடம்.

“பிரம்மா உன் தலையெழுத்தை ‘பென்’னுல எழுதியிருந்தா நான் ‘கன்’னுல எழுதி
டுவேன்” என்று வில்லனாக நடித்துள்ள வேலு பிரபாகரனைப் பார்த்து விக்ரம் பிரபு தில்லாக வசனம் பேசியிருக்கும் டீசர் வெளியாகி இரண்டு மில்லியன் பேரை எட்டியிருக்கிறது. இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஸ்ரீதிவ்யா கோலிவுட்டுக்குத் திரும்பியிருப்பது!

இப்போது நான் ‘மிரியம்மா’ - அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன், ஸ்ரீ சாய் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘மிரியம்மா’. ரேகா ‘டைட்டில்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரெஹானா பாடல்களுக்கு இசையமைக்க, மூன் ராக்ஸ் என்கிற இசைக் குழுவினர் பின்னணி இசையை அமைத்திருக்கிறார்கள். ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும் ‘யாத்திசை’ படப் புகழ் ரஞ்சித் கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

இப்படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் ரேகா பேசும்போது: “நடித்த கதாபாத்திரம் ஒன்றின் பெயரைச் சொல்லி முன்பின் தெரியாத ஒருவர் நம்மை அழைக்கும்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். தமிழில் ஜெனிபர் டீச்சர், ரஞ்சனி, உமா போல், மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி எனக் கடந்த 30 ஆண்டுகளில் பல சிறந்த கதாபாத்திரங்கள் எனக்கு அவ்வாறு அமைந்தன. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த ‘மிரியம்மா’வும் இடம்பெறுவாள்.

அயர்லாந்தில் படித்து அங்கேயே குடியேறிவிட்ட இப்படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன் செல்போனில் கதை சொன்னபோதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிவிட்டது. ‘இந்தக் கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே’ என்று என் மனம் குதூகலித்தது. அவர் கதை சொன்னதைவிடப் பல மடங்குச் சிறப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இது பெண் இயக்குநர்களின் காலம். இந்தப் படம் உங்கள் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும்” என்றார்.

காதல் என்பது பொதுவுடைமை: நவம்பர் மாதம்தோறும் களைகட்டும் கோவா உலகப் படவிழா, வரும் 20ஆம் தேதி முதல் 28 வரை 9 நாள்கள் நடைபெறவிருக்கிறது. அதன் 54ஆவது பதிப்பில் ‘இந்தியன் பனோரமா’பிரிவுக்கு இம்முறை 3 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்குப் போட்டியிட்ட 408 இந்திய மொழிப் படங்களிலிருந்து 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மெயின் ஸ்ட்ரீம் பிரிவில் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் ஃபீச்சர் பிலிம் பிரிவில் தேர்வுபெறும் படங்களையே படவிழாவுக்கு வருகை தரும் உலகப் பட ஆர்வலர்கள் கொண்டாடுவார்கள். அந்தப் பிரிவின் கீழ் வெற்றிமாறனின் ‘விடுதலை’யும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் ‘காதல் என்பது பொதுவுடைமை’ என்கிற புதிய படமும் தேர்வாகியுள்ளன.

இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே ‘லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய மூன்று சிறந்த படங்களின் மூலம் கவனம் பெற்றிருப்பவர். படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “இது ஒரு நவீனக் காதல் கதை. இன்றைய நவீன காலகட்டத்தில் உறவுகள், நண்பர்களுக்கு இடையிலான மனவோட்டங்களைக் காட்சிகளாக்கியிருக்கிறேன்.தொழில்நுட்பத்தால் நவீனப்பட்டிருக்கும் தற்காலத்தின் காதல் களமாகியிருக்கிறது” என்றார்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் பட இயக்குநர் ஜியோ பேபி வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக் ஷன், சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினீத் நடித்திருக்கிறார். அவருடன் லிஜோமோள், ரோகிணி, கலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்.

ஏரியா பற்றிய எண்ணம்: ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக இயக்கியிருக்கும் வெப் சீரீஸ் ‘லேபிள்’. வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இத்தொடரில் ஜெய் நாயகனாகவும் தான்யா ஹோப் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வடசென்னையில் பிறந்த வளர்ந்து வழக்கறிஞராகிறார் நாயகன். அவர் ஒரு முன்னாள் தொழில்முறை ரவுடியின் மகன்.

தனது தாயால், தந்தையின் பாதையைச் சிறு வயது முதலே வெறுத்து, படித்து முன்னேறியதுடன், தனது பகுதியில் வளரும் சிறார்களைப் படிப்பு, விளையாட்டில் ஊக்குவிக்கிறார். ஆனால், அவர் வசிக்கும் பகுதி மீதான பொதுப்புத்தியின் எண்ணம் அவருக்குப் பெரும் சோதனையாக அமைகிறது. அந்த எண்ணத்தை மாற்ற அவர் எவ்வாறு போராடுகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதுதான் கதை. இத்தொடருக்கு வசனம், கூடுதல் திரைக்கதை ஆகியவற்றை எழுதியிருப்பவர் ஜெயசந்திர ஹாஷ்மி.

SCROLL FOR NEXT