சமூகமெங்கும் பரவி வியாபித்திருக்கும் அவலங்களைக் கொண்டுதான் மனிதனின் வாழ்வு கட்டமைக்கப்படுகிறது. தான் உருவாக்கிய சரி, தவறு என்ற இரண்டு வெற்று வார்த்தைகளின் மூலம் இந்தச் சமூகம் காலங்காலமாக மனிதனின் இயல்பை விழுங்கிக்கொண்டிருக்கிறது. ஆபத்தொன்று நேரும்போதுதான் மனிதனின் உண்மையான இயல்பு வெளிப்படும். அப்போது அவன் எடுக்கும் முடிவில் அவன் உயர்வாக எண்ணிய பல இயல்புகள் மரணித்துவிடும். ஆனால், ஆபத்து நீங்கியவுடன் எந்த முடிவு அவனைக் காத்ததோ அந்த முடிவையே தவறென எண்ணி வருந்துவான். இவ்வாறு நொடிப்பொழுதிலெடுக்கும் தவறான (?) முடிவால் ஒரு மனிதனின் வாழ்வில் நேரும் விளைவுகளின்மேல் இயக்குநர் ரூபன் ஆஸ்ட்லண்ட் கொண்டிருக்கும் காதல், ‘தி ஸ்கொயர்’ படத்திலும் தொடர்கிறது.
15-வது சென்னை சர்வதேசப் படவிழாவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட்டது. இயக்குநர் ஆஸ்லண்டின் முந்தைய படமான ‘ஃபோர்ஸ் மெஜர்’-ல் பிரான்சிலிருக்கும் ஆல்ப்ஸ் மலைக்குத் தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் நாயகன் தாமஸ் பனிப்புகையைப் பனிச்சரிவென்று தவறாக எண்ணி பயத்தில் கண்ணிமைக்கும் நொடியில் தன் குடும்பம் அங்கிருப்பதையும் மறந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி விடுவதற்குப் பின் நிகழும் பிரச்சினைகளை நகைச்சுவை ததும்பக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். ஆனால், ‘தி ஸ்கொயர்’ படத்தில் அந்த விளைவுகள் சமூகம் சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.
‘தி ஸ்கொயர்’ படத்தின் நாயகன் கிரிஸ்டின், ஸ்டாக்ஹோம் நகரிலிருக்கும் அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்களைப் புனரமைக்கும் குழுவின் தலைவராகப் பணிபுரிகிறார். அறிவும் வசதியும் மிகுந்த அவர் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து உடையவராகத் திகழ்கிறார். அவரது மேற்பார்வையில் அந்த அருங்காட்சியகத்துக்கு எதிராக ஒரு புதிய காட்சிப் பொருள் வடிவமைக்கப்படும். அந்த நேரத்தில் அவரிடமிருந்து கைப்பேசியும் மணிப்பர்ஸும் திருடப்படும்.
இழந்த பொருட்களை மீட்டெடுக்கவும் அந்தப் புதிய காட்சிப் பொருளை விளம்பரப்படுத்தவும் அவர் இரண்டு முடிவுகளை எடுக்கிறார். அந்த முடிவுகளால் அவருக்கும் சமூகத்துக்கும் நேரும் விளைவுகளின்மூலம் நமது நம்பிக்கைகளை நையாண்டியுடன் கேள்விக்கு உள்ளாக்குகிறார் இயக்குநர். அந்த நையாண்டிகளை நம்மால் வெறும் புன்னகையுடன் கடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால், இயக்குநர் அந்தக் கேள்விகளை நம்முடையதாக்குகிறார்.
அந்தப் புதுக் காட்சிப்பொருள்தான் இந்தப் படத்தின் உண்மையான நாயகன். நான்குக்கு நான்கு மீட்டர் அளவு கொண்ட சதுரத் தளமே அந்தக் காட்சிப்பொருள். ‘தி ஸ்கொயர் – இது நம்பிக்கை மற்றும் அக்கறையின் உறைவிடம். இதனுள் அனைவருக்கும் உரிமைகளும் கடமைகளும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்’ என்ற வாசகம் அந்தச் சதுரத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமும் அதற்குப் பின்னிருக்கும் அபத்தமும்தான் இந்தப் படத்தின் உயிர்நாடி. ஏற்றத்தாழ்வற்ற சம உரிமை கொண்ட சமூகமென்பது கலையில் மட்டுமே சாத்தியம், நடைமுறை வாழ்வில் அது சாத்தியமற்ற ஒன்றென்பதை அதை விளம்பரப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு உணர்த்திவிடுகின்றன.
அங்கே நிகழும் கலைவிழாவில் மனிதக் குரங்கு வேடமேற்று ஊடுருவும் கலைஞனின்மூலம் அங்கே குழுமியிருக்கும் மனிதர்களின் கண்ணியமான நாகரிக ஒப்பனையைக் கிழித்தெறியும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. அதே போன்று நம்மை நல்லவர்களென்று நாம் நம்புவதற்கும் சமூகத்தின் மதிப்பீட்டைப் பெறுவதற்கும் எந்த அளவுக்கு நாம் மெனக்கெடுகிறோம் என்பதைப் படுக்கையறைக் காட்சிக்குப் பின் பெண் நிருபரை கிரிஸ்டின் சந்திக்கும் காட்சியின் மூலம் உணர்த்துகிறார் இயக்குநர். அவள் கேட்கும் கேள்விகள் கிரிஸ்டினின் ஒப்பனையை மட்டுமல்லாமல் நாம் விரும்பிப் பூசிக்கொண்டிருப்பதையும் சேர்த்தே கலைத்துச் செல்கிறது.
கிரிஸ்டின் பாத்திரமேற்று நடித்திருக்கும் கிளெஸ் பாங்க் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இயக்குநர் இந்தப் படத்தில் வித்தியாசமான கதை சொல்லும் உத்தியைக் கையாண்டிருக்கிறார். கதை நேர்கோட்டில் பயணிக்காமல் எந்த ஒழுங்குமின்றிப் பல திசைகளில் பயணித்து எங்கெங்கோ முட்டிமோதி எதிரொலித்துப் பின் ஒரே திசையில் வந்துசேர்கிறது. பார்வையாளர்களைப் பெரிதும் சிரமப்படுத்திய இந்தத் திரைக்கதை உத்திக்காகவே 2017 கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்றது இந்த சுவீடன் நாட்டுத் திரைப்படம்.
திரைப்பட அனுபவமாகப் பல நேரம் நமக்கு அயர்ச்சியளிக்கும் வண்ணம் அபத்தமாகத் தோன்றுகிறது. மனித வாழ்வின் அபத்தங்களைச் சொல்ல அதன் திரைக்கதையை ஒழுங்கற்றதாக, அதன் தொடர்ச்சிகளைக் கத்தரித்துப் போட்டிருக்கிறார் இயக்குநர் ஆஸ்லண்ட். இதன் மூலம் பார்வையாளர்களுக்கான திரை அனுபவத்தைக் கடினமாக மாற்றிவிடுவதையே இந்தப் படத்தின் கலாபூர்வ அம்சமாக மாற்றி பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.
ஒரு சிறந்த படைப்பு, அதன் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஒன்றாகவும் இருக்கும் என்பதற்கு ‘தி ஸ்கொயர்’ சிறந்த உதாரணம். சென்னைப் பட விழாவின் தொடக்கப் படம் என அரங்கு நிறைய பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள், படம் முடியும்வரை பொறுமை காத்தார்கள் எனினும், படம் முடிந்து வெளியேறியபோது ‘இதுவெல்லாம் ஒரு படமென்று எப்படித் தேர்வு செய்தார்கள்’ எனப் பெரும்பாலான பார்வையாளர்கள் கடிந்துகொண்டதன் மூலம் அவர்களது ரசனைக்குச் சவால்விடும் படமாகவும் ‘தி ஸ்கொயர்’ இருந்தது.