‘திரைப்படம் மிக எளிமையான கலை வடிவம். பேராசையுடன் அதனை வணிகமாக அணுகும் போதுதான் அது நெருங்க முடியாத பிரம்மாண்டமாக மாறுகிறது. எனவே உங்கள் முதல் படத்தை நடிகர்கள் இல்லாமல், தயாரிப்பாளர்களுக்காகக் காத்திருக்காமல் எளிமையாகத் தொடங்குங்கள்’ என்று தொடங்குகிறது ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் எழுதியிருக்கும் இந்த பிரம்மாண்ட புத்தகம். 420 பக்கங்களில் ‘காஃபி டேபிள்’ புத்தக வடிவத்தில் கெட்டி அட்டையில் தயாராகி வெளிவந்திருக்கும் இந்நூல், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது.
பில்லியன்களில் வசூல் செய்யும் ஹாலிவுட் வணிக சினிமாக்கள், திரைக்கதை தொடங்கி, வெளியீடு வரை ஒவ்வொரு கட்டமாக எப்படி உருவாகின என்பதைப் படங்களுடன் விளக்கும் ‘பிகைண்ட் த சீன்ஸ்’ புத்தகங்கள் இப்போதும் லட்சக்கணக்கில் விற்கின்றன.
ஆனால், திரைக்கதைப் புத்தகங்கள் நீங்கலாக, தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட் ஆன வணிக சினிமா ஒன்று உருவான விதம் குறித்து தமிழில் இதுவரை அவ்வகைப் புத்தகம் வெளிவந்ததில்லை. அந்தப் பெருங்குறையை செழியன் போக்கியிருக்கிறார். சுயாதீன உலக சினிமாவாக ‘டுலெட்’ படத்தை உருவாக்கிய அவர், கான் உட்பட உலகின் புகழ்பெற்ற படவிழாக்கள் பலவற்றுக்கும் அனுப்பி, நூற்றுக்கும் அதிகமான விருதுகளை வென்றுதரும் படைப்பு என்பதை நிறுவினார். இறுதியாக தேசிய விருதும் ‘டுலெட்’டை வந்தடைந்தது. 50 நாள்கள் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் மக்களின் ஆதரவுடன் ஓடியது.
ஒரு சுயாதீன தமிழ் சினிமா இப்படியொரு வெற்றியை உலக அரங்கிலும் உள்ளூரிலும் பெற்றது எனில், அது உருவான கதையை அணுவணுவாக விவரித்து எழுதி ஆவணப்படுத்துவது மிக அவசியமான செயல்பாடாகிறது. அதை ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார் செழியன். சுயாதீன, சுதந்திரமான படைப்புகளை உருவாக்க வருபவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாக அமையும் இந்த நூல், படம் ஒவ்வொரு படிநிலையாக எவ்வாறு உருவானது என்பதை ஒரு வெகு யதார்த்தமான மொழியில் பகிர்ந்திருக்கிறார்.
டுலெட்: திரைக்கதையும் உருவாக்கமும்
செழியன்
உயிர் எழுத்து பதிப்பகம்,
92, கல்யாண சுந்தரம் நகர் முதல் தெரு,கருமண்டபம்,
திருச்சி - 620001
தொடர்புக்கு: 99427 64229