இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: பேசப்படும் பின்னணி இசை!

செய்திப்பிரிவு

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பைப் போலவே விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கும் விஷால் சந்திரசேகரிடம் இது பற்றிக் கேட்டபோது. “‘சீதாராமம்’ தெலுங்குப் படப் பாடல்கள், பின்னணி இசை இரண்டுக்காகவும் எனக்கு ‘சைமா’ விருது கிடைத்தது. ‘சித்தா’வுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். ‘சித்தா’ படத்தின் கதையைக் கேட்டு உறைந்து போனேன்.

அதில் நான் என்ன உணர்ந்தேனோ, அதைப் பின்னணி இசையாகக் கொடுத்தேன்” என்றவர், தற்போது பணியாற்றி வரும் படங்கள் பற்றிக் குறிப்பிட்டார்: “பேரரசன் ராஜராஜன் காலத்துக்கு முந்தைய சோழ மன்னன் நமக்குக் கல்லணை தந்த கரிகாலன். அவனைப் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட ஒரு கதை, ஒன்பது எபிசோடுகள் கொண்ட ஆடியோ புத்தக வடிவில் வரவிருக்கிறது.

அதைக் கண்ணை மூடிக் கேட்டால், ஒரு சிறந்த வரலாற்றுத் திரைப்படத்தை மனத்திரையில் காண முடியும். அதற்கு இசையமைத்து முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். அடுத்து திரு இயக்கி முடித்துள்ள படம், நந்தா பெரியசாமி இயக்கி முடித்துள்ள படம் ஆகியவற்றுக்கு இசையமைத்து வருகிறேன்” என்றார்.

‘கண்ணப்பா’வில் இணைந்த பிரபலம்! - கற்பனை வரலாற்றுத் திரைப்படமாக வெளியாகி, இந்தியா முழுவதும் 1000 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்தது ‘பாகுபலி’. அப்படத்தின் வெற்றிக்குப் பின் வரலாறு, புராணப் படங்கள் தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவருகின்றன.

அந்த வரிசையில் கண்ணப்ப நாயனாரின் புராணக் கதை, ‘கண்ணப்பா’ என்கிற தலைப்பில் ‘பாகுபலி’ புகழ் திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் பங்களிப்புடன் எழுதப்பட்டுள்ளது. அதில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்து பான் இந்திய சினிமாவாகத் தயாரிக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு.

இந்தப் படத்தில் ‘பாகுபலி’ பிரபாஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த நிலையில், தற்போது மலையாளப் படவுலகிலிருந்து மோகன்லால் இப்படத்தில் இணைந்துள்ளார். அடுத்து தமிழ், கன்னடப் படவுலகிலிருந்து இணைய sவிருக்கும் முன்னணி நடிகர்களைப் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர். படம் முழுவதும் நியூசிலாந்து நாட்டில் படமாக இருக்கிறது. ஸ்டார் ப்ளஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கும் இந்தப் படத்துக்கு மணி சர்மா - ஸ்டீபன் தேவஸ்ஸி ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.

கன்னட உலகின் ‘கோஸ்ட்’ - மலையாளம் என்றால் ‘லூசிஃபர்’ ராக வந்து கலக்குபவர் மோகன்லால், தெலுங்கு என்றால் ‘டைக’ராக வந்து கலக்குபர் ரவி தேஜா. அதேபோல் கன்னடப் படவுலகின் ‘கோஸ்ட்’ என்று பெயர் பெற்றிருக்கிறார் சிவராஜ் குமார். கன்னடத்திலிருந்து யாஷ் போன்ற புதியவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்றிருந்தாலும் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்காமல் எந்த பெரிய கன்னட ஹீரோவின் படமும் வெளியாவதில்லை. சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு அடியாள் கூட்டம் அனுப்பும் கன்னட கேங்ஸ்டராக வந்து கலக்கியிருந்தார் சிவராஜ் குமார்.

தற்போது ‘சித்தா’ படத்தின் கன்னடப் பதிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அங்குள்ள சில அரசியல்வாதிகள் புகுந்து சித்தார்த்தை வெளியேற்றிய சம்பவத்துக்கு சிவராஜ் குமார் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில் சிவராஜ் குமாரின் புதிய பான் இந்திய சினிமாவான ‘கோஸ்ட்’ பட டிரைலரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக அரசியல்வாதியும் பட அதிபருமான சந்தேஷ் நாகராஜ் தயாரித்துள்ள இந்தப் படம், தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. நன்கு தமிழ் அறிந்தவரான சிவராஜ் குமார், ‘கோஸ்ட்’ படத்தின் தமிழ்ப் பதிப்புக்குச் சொந்தக் குரலில் டப்பிங் பேசி இருக்கிறார்.

SCROLL FOR NEXT