இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: ‘ஷட்டில் லைஃப்’ (மலேசிய திரைப்படம்)

செய்திப்பிரிவு

‘‘ம

லேசியர்கள் கேமரா இல்லாமல்கூட படம் எடுப்பார்கள். பேய் இல்லாமல் எடுக்கமாட்டார்கள். அதுவும் சூர மொக்கையாக இருக்கும். பேய்ப்படம் எடுக்க பேயாய் அலைவார்கள். அந்த வியாதியை தமிழ்நாட்டுக்கு அனுப்பிவிட்டு இப்போது நல்ல படங்கள் எடுக்கத் துணிந்துவிட்டார்கள்’’ என்று 2017 கோவா திரைப்பட விழாவின்போது கோவை திரைப்பட இயக்கத்தைச் சார்ந்த பாஸ்கர் கூறினார். ஆனால், அவரது கூற்றை பொய்ப்பிப்பதுபோல, ஒரு மலேசியப் படத்தை அதே திரைப்பட விழாவில் பார்க்க நேர்ந்தது.

அவரும் பார்த்துவிட்டு, ‘‘கோவாவுக்கு ‘ஷட்டில் லைஃப்’ எனும் அற்புதமான உலக சினிமாவை அனுப்பி வைத்துள்ளனர். மலேசியத் தமிழர்களுக்கு மிகப்பெரிய சவாலை வீசியிருக்கிறது ‘ஷட்டில் லைஃப்’. இந்தப் படத்தை வென்று காட்டுங்கள். அதற்கு முதலில், உங்கள் சிந்தையுள ‘கோடம்பாக்கத்தை’ கொன்று போடுங்கள்” என்றார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர பெண் குடும்பத்தின் கதைதான் ‘ஷட்டில் லைஃப்’. அவளுக்கு நோய் சார்ந்த மாத்திரைகளைத் தருவது, அல்லது வாயில் திணிப்பது போன்ற கொடுமையான வேலைகளைச் செய்யும் சன் என்ற மகனுக்கு பெரிதாய் வேலை இல்லை. கூடவே 5 வயது தங்கை இருக்கிறாள். அவளது பிறந்தநாள் இரவில் அவளுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, விபத்தில் சிக்கி அவன் தப்பிக்க, தங்கை இறந்துபோகிறாள். உடலைத் தருவதற்காக, அவளது பிறப்புச் சான்றிதழை மருத்துவ நிர்வாகம் கேட்கிறது. வீட்டுக்கு வந்து தேடுகிறான், அம்மா ‘இல்லை’ என்கிறாள்.

போலிச் சான்று பெற முயற்சிக்கிறான். வேறு வழியின்றி, இவனும் நண்பர்களும் காரைத் திருடி விற்க முடிவு செய்கிறார்கள். காரைத் திருடி ஓட்டிச் செல்லும்போது மீண்டும் விபத்து. ஒருவன் அடிபடுகிறான். பயத்தில் நண்பர்கள் ஓடிவிட, காரை ஓட்டிச் செல்கிறான் சன். தங்கை மரணத்துக்கு காரணமான காரைத் தேடி சேதமாக்குவதால் காவல்துறை அவனை சிறையில் தள்ள, ஒரு தோழி ஜாமீனில் எடுக்கிறாள். பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பிணத்தை எடுக்க அப்பெண் அரசு நிர்வாகத்தில் ஒருவரைச் சந்தித்து உதவி கேட்கிறாள். திருடிய காரை என்ன செய்வது என்ற யோசனையுடனே, அவன் ஓட்டிச் செல்லும்போது வீதியில் தாயைப் பார்க்கிறான்.

மகளுக்காக தான் தைத்திருக்கும் கவுனை அப்போதுதான் அவள் காட்டுகிறாள். அவன் ஒரு விருந்தில் எடுத்து வந்த உணவை அவளுக்கு சாப்பிடக் கொடுக்க, அவள் சுவைத்துச் சாப்பிட, கார் ஓடிக்கொண்டிருப்பதோடு படம் முடிகிறது. மனநலம் பாதித்த பெண்ணாக தைவான் நடிகை நடித்துள்ளார்.

இயக்குநர் டான் சென் கியாத். உதிரி மலேசியர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை இப்படம் காட்டுகிறது. இரட்டை கோபுரம் போன்ற இடங்களைத் தவிர்த்து, சாதாரணமானவர்களின் குடியிருப்புகளுக்குள் படம் பயணிப்பது இதன் மாந்தர்களை அடையாளம் காட்டுகிறது.

- சுப்ரபாரதிமணியன்

SCROLL FOR NEXT