இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: சக்க போடு போடு ராஜா

இந்து டாக்கீஸ் குழு

சென்னையின் பெரிய தாதா சம்பத். இவரது தங்கை பாப்ரி கோஷை காதலிக்கிறார் சந்தானத்தின் நண்பர் சேது. யாருக்கும் தெரியாமல் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார் சந்தானம். இதனால் சந்தானத்தை கொல்ல சம்பத் துடிக்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சினை என, பெங்களூரு சென்றுவிடுகிறார். அங்கு வைபவியைக் காதலிக்கிறார். சம்பத்தின் 2-வது தங்கைதான் வைபவி என்று பிறகு அவருக்கு தெரியவருகிறது. பின்னர், சம்பத்தை சந்தானம் எப்படி வழிக்குக் கொண்டுவந்து, காதலில் வெற்றி பெறுகிறார் என்பது மீதிக் கதை.

சந்தானத்தோடு விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், லொள்ளு சபா சுவாமிநாதன் என்று பெரிய காமெடி பட்டாளங்களை சேர்த்துக்கொண்டு களமிறங்கிய அறிமுக இயக்குநர் ஜி.எல்.சேதுராமன், அரதப்பழசான ஒரு கதையைப் பட்டி, டிங்கர் பார்த்து கொடுத்திருக்கிறார். வரிசையாக தொகுத்த நகைச்சுவைத் துணுக்குகளோடு கதை நகர்வதால், லாஜிக் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கேற்ப, முரட்டுப் பார்வை, தடித்த உருவத்துடன் வரும் தாதா சம்பத் முதல் அடியாட்கள் வரை அனைத்து பாத்திரங்களும் பக்குவம் இல்லாமல் பகடியாகவே காட்டப்படுகின்றன. அதற்காக, அவர்களை ஆறாம் அறிவே இல்லாதவர்கள்போல காட்டியிருக்க வேண்டாம்.

துரத்தல், தேடுதல் தொடர்பான காட்சிகளையாவது விறுவிறுப்பாகக் காட்டியிருக்கலாம். அதுவும் இல்லை. படத்தில் வரும் திடீர் ட்விஸ்ட்களும் சுவாரசியத்தைக் கூட்டவில்லை. இதனால், காட்சிகள் மனதில் ஒட்டாமல் தறிகெட்டு பயணிக்கின்றன. அடிக்கடி வரும் பாடல்கள், படத்துக்கு வேகத்தடையாக அமைகின்றன. கடைசி வரை விவேக் எது சொன்னாலும் நம்பாத சம்பத், கிளைமாக்ஸில் மட்டும் உடனே நம்புவது அபத்தம்.

திரைக்கதையில் இப்படி பலவீனங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தின் பலமும் சந்தானம்தான். ஆக்சன், நடனத்துக்காக அவர் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். நடன அசைவுகளிலும், ஸ்டைலான தோற்றத்திலும், சீறிப் பாய்ந்து சண்டை போடுவதிலும் முழுமையான நாயகனாகப் பரிணமிக்கிறார். காதலியைக் கலாய்ப்பது, தினுசு தினுசாக யோசிப்பது, பேசிப் பேசியே விவேக், சம்பத்தை கவிழ்ப்பது என அவரது பாத்திரம் கச்சிதம். அவரது வழக்கமான நக்கல் வசனங்களுக்கும் வசீகரிக்கின்றன.

காதலிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் காமெடி சாகசங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. காதல், காமெடி, ஆக்சன் என்று முப்பரிமாண பங்களிப்பை அடுத்தடுத்த காட்சிகளில் இடம்பெறச் செய்திருப்பது கொஞ்சம் திருப்தியாக இருந்தாலும், பவர்ஸ்டார் சீனிவாசன், விடிவி கணேஷ் இருவரது காமெடி காட்சிகள் தவிர வேறு எதுவும் மனதில் பெரிதாக ஒட்டவில்லை. 

நாயகி வைபவி படம் முழுக்க வந்தாலும், அவருக்குப் பெரிய வேலை இல்லை. பயமுறுத்தும் தாதாபோல முதலில் காட்டப்படும் சம்பத், கடைசியில் சிரிப்பு ரவுடிபோல மாறிவிடுகிறார். திடீர் வில்லனாக வரும் சரத் லோகிதஸ்வாவின் பாத்திர வார்ப்பும் ஏனோதானோ ரகம்.

சிம்பு இசையமைத்துள்ள முதல் படம். நிச்சயம் பாஸ் மார்க் அளிக்கலாம். ‘காதல் தேவதை’, ‘வா முனிமா’, ‘கலக்கு மச்சான்’ ஆகிய பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங், உமேஷ்குமாரின் கலை இயக்கம் ஆகிய மூன்றும் படத்துக்கு பெரிய பலம். 

காமெடி வசனங்களை குறைத்துக்கொண்டு ஆக்சன் கலந்த பஞ்ச் வசனங்கள், காதல், டூயட் என்று மாறுபட்ட முயற்சியில் சந்தானம் இறங்கியிருப்பதைப் பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், இந்த ராஜா சக்க போடு போட்டிருப்பான்.

SCROLL FOR NEXT