இந்து டாக்கீஸ்

மன்னிப்பு கேட்டதில் தவறில்லை! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி

கா.இசக்கி முத்து

ந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் ஒருசேரப்பெற்ற ‘மாநகரம்', ‘தீரன் அதிகாரம் ஒன்று' , 'அருவி' ஆகிய மூன்று படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்துவரும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து....

'அருவி' படத்தைப் புதுமுகக் கதாநாயகியைக் கொண்டு தயாரித்தது ஏன்?

இரண்டு முன்னணிக் கதாநாயகிகளை அணுகினோம். கதை பிடித்திருந்தாலும் தயக்கம் காட்டினார்கள். இப்படத்தில் இருக்கும் கருத்துக்கள், சில விஷயங்கள் பெரிய கதாநாயகிகள் நடித்திருந்தால் சர்ச்சையாக உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாதாரணமான பெண்ணின் பிரச்சினைகள் சார்ந்த கதை, பெரிய நாயகிகள் நடித்தால் அவர்களுடைய இமேஜும் அக்கதாபாத்திரத்துடன் பயணிக்கும். அது இக்கதையைப் பாதிக்குமே என்று ஒருகட்டத்தில் உணர்ந்தோம். அப்போதுதான் புது நாயகியை வைத்து எடுத்துவிடலாம் என்று தீர்மானித்தோம்.

அதிதி பாலன்தான் நாயகி என்று முடிவானவுடன், தயாரிப்பாளராக நீங்கள் நினைத்தது என்ன?

புதுமுக நடிகருடன் பயணிக்கும்போது, ‘ஒருவேளை படம் சரியாகப் போகவில்லை என்றால் எந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும். அந்த பாதிப்பை நம்மால் தாங்கிக் கொள்ள இயலுமா’ என்றெல்லாம் யோசித்தோம். 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கவில்லை. படம் தோல்வியடைந்தாலும், எந்தளவுக்குத் தோல்வி இருக்கும், அதை நாம் தாங்குவோமா என்ற கேள்விக்கான பதிலுடன்தான் தொடங்கினோம். ஆனால், மிகப்பெரிய வெற்றி பரிசாகக் கிடைத்தது. இப்போது அனைத்தையுமே சரியாகத் திட்டமிட்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

உங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் திடீரென வருத்தம் தெரிவிக்க என்ன காரணம்?

படம் யாரையோ தாக்குகிறது எனும்போது, மனவருத்தம் இருக்கத் தானே செய்யும். அப்படியிருக்கும்போது படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகத்துக்கான செய்தி அடிபட்டுப்போகிறது. நமது படத்தினால் வருந்துகிறார்கள் எனும்போது, மன்னிப்புக் கேட்பதில் தவறேதும் இல்லையே. படத்தின் கதையோட்டத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடந்துகொள்ளும் என்ற விவாதக்துக்குப்பிறகு காட்சிகள் இறுதிவடிவம் பெறுகின்றன. தவறான கண்ணோட்டத்தில், ஒரு நபரைத் தவறாக சித்திரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் தயாரிப்பதில்லை.

இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வரி, டிக்கெட் விலை உயர்வு, பைரசி போன்றவற்றிலிருந்து தமிழ் சினிமா மீண்டுவிட்டதாகக் கருதுகிறீர்களா?

மீள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. சிறிய அளவில் நம்பிக்கை தெரிகிறது என்று சொல்லலாம். சிறு படங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாக உணர்கிறேன். இந்தாண்டு சின்னப் படங்கள் ஓரளவு லாபம் கொடுத்திருக்கின்றன என எண்ணுகிறேன்.

ஒரு படத்தின் கதை மற்றும் நடிகரைச் சார்ந்து, இவ்வளவு பொருட்செலவு செய்யலாம் என்றொரு கணக்கு இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி செலவு செய்யப்படுகிறது. படங்கள் தோல்விடையும்போது படத்தின் கதை மீதும், நடிகர்கள் மீதும் பழி விழுகிறது. பல படங்கள் பொருட்செலவு, வியாபாரம் ஆகியவற்றால் தோல்வி அடைந்திருக்கின்றன. இவை முறைப்படுத்தப்படும்போது வெற்றி - தோல்வி எண்ணிக்கை கண்டிப்பாக மாறும்.

நடிகர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே...

சம்பளம் என்பது தயாரிப்பாளரின் கையில்தான் இருக்கிறது. நானே சில நடிகர்களிடம் பேசுகிறேன். சம்பளம் ஒத்துவராதபோது அப்படங்களை நான் தயாரிப்பதில்லை. அதிக சம்பளம் என்றாலும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலைவரும்போது பாதிக்கப்படுவோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டதே?

கணக்குத் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என சிலர் நினைக்கிறார்கள். சங்கம் என்று வரும்போது அதற்கான நேரத்தில் அதன் கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். இரண்டு வருடத்திற்கான கணக்கை முடித்து சமர்ப்பிக்க இருக்கிறோம். 2017 – 18-ம் ஆண்டிற்கான கணக்கை, 2018-ம் ஆண்டின் பொதுக்குழுவில்தானே வைக்க முடியும். நாங்கள் ஏன் அவ்வளவு அவசரமாக சமர்ப்பிக்க வேண்டும்? பணம் காணவில்லை என்கிறார்களே, எங்கிருந்து காணாமல் போய்விட்டது என்று ஆதாரத்துடன் பேசினால் பதில் கூறலாம். மற்ற குற்றச்சாட்டுகளுக்கு காதுகொடுத்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

SCROLL FOR NEXT