கடந்த 2015 இல் மலையாளத்தில் வெளியான ‘சிக்னல்’ படத்தை இயக்கியவர் தேவகுமார். ‘இந்த கிரைம் தப்பில்ல’ என்கிற தலைப்பில் தனது இரண்டாவது படத்தைத் தமிழில் இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தைச் சமீபத்தில் தொல்.திருமாவளவன் வெளியிட்டிருந்த நிலையில், படத்தின் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் தலைப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கிறதே? - எவ்வளவு கடுமையான சட்டங்கள், தண்டனைகள், போக்சோ நீதிமன்றம் என்று இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவை குறித்த குற்றவுணர்வைப் பொதுச் சமூகத்துக்கு உருவாக்கும் விதமாகத் தற்போது பல திரைப்படங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
அவற்றில் ‘கார்கி’ தொடங்கி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டியது முதல் தேவையா அல்லது அவர்களை உளவியல் ரீதியாக மீட்டெடுப்பது முதல் தேவையா என்கிற விவாதத்தை உருவாக்கிச் சென்றிருக்கின்றன. இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்தால் என்ன நடக்கும் என்பதைத் திரைக்கதை ஆக்கியிருக்கிறோம். அவர்கள் செய்யும் குற்றம் தவறில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியொரு தலைப்பு.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ‘பல்லுக்குப் பல்.. கண்ணுக்குக் கண்’ என்று பழிவாங்கும் கதைபோல் தோன்றுகிறதே? - நூறு விழுக்காடு சரி! வெவ்வேறு ஊர்களில் நடக்கும் 3 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர்கள் இரண்டு பேர், ஒரு சகோதரி ஆகியோர் எதிர்பாராமல் ஒரு குழுவாக ஒன்றிணைகிறார்கள். குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற ஒரு கூட்டம் எல்லா வகையில் சட்டத்தை வளைப்பதால் நீதி நீண்ட உறக்கத்தில் ஆழ்கிறது.
சட்டம் சாதுர்யமானவர்களால் முடக்கப்பட்டு, நீதி, தாமதமான அநீதியாக மாறும்போது அவர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்கிறார்கள். அதை மேம்போக்காகக் காட்டாமல் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்கும்படி உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் காட்சிகளை அமைத்திருக்கிறோம். இந்த ‘ரிவென்ஜ்ஸ்குவாட்’ எப்படி நிதி வழங்கினார்கள் என்பதுதான் படம்.
சமீபத்திய தமிழ்ப் படங்களில் அதீத வன்முறைக் காட்சிகள் தேவையின்றித் திணிக்கப்படுகின்றன. நீங்களும் அதே பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? - கதைக்குத் தேவையில்லாமல், ஒரு ‘ஃபன்’னுக்காகவும் ஹீரோயிசத்துக்காகவும் வன்முறைகள் காட்சிகளைத் திணிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதெல்லாம், நம்மை அதிரச் செய்யும் விதமாகப் பாலியல் குற்றங்கள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் சமூக ஊடகப் பதிவுகளையும் அதில் வரும் மீம்களையும் பாருங்கள்.
அவற்றில், ‘அந்த மாதிரிக் குற்றங்களைச் செய்தவர்களை எந்த வழிமுறையில் தண்டிக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் தங்கள் மனத்தின் வன்முறையை வெளிப்படுத்தியிருப்பார்கள். அந்தப் பதிவுகளின் பிரதிபலிப்பை உள்வாங்கி இதில் வன்முறையைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். தணிக்கைக் குழு ’யுஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
யாரெல்லாம் நடிகர்கள்? - மூன்று பேர் கொண்ட ‘ரிவென்ஜ் ஸ்குவா’டில் ஆடுகளம் நரேன், சன் டிவி புகழ் பாண்டி கமல், மேக்னா ஏலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி, இப்படத்தின் தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். ஆக் ஷன் காட்சிகளை கணேஷ் அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை ஏ.எம்.எம். கார்த்திகேயனும் இசையமைப்பை பரிமளவாசனும் செய்திருக்கிறார்கள்.