‘கடம்பன்’ படத்துக்காக காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டிய ஆர்யா, அடுத்துத் தனக்கான மணமகளைத் தேட வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார். அமீர் இயக்கத்தில் ‘சந்தனத் தேவன்’ படத்தில் நடித்துக்கொண்டே சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இதற்கிடையில் ஸ்டுடியோ க்ரீன்ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஆர்யா கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.‘ஹர ஹர மஹா தேவகி’ , ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படங்களின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் மூன்றாவது படம் இது.
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்து இதற்கு முன் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் பணிபுரிந்தனர். அந்தக் கலகலப்பு கூட்டணி மீண்டும் நகைச்சுவைக் களத்தையே கையில் எடுத்துள்ளது. இம்முறை ‘யோகி’ பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். ஈசன் புரடெக்ஷன்ஸ் சார்பில் துஷ்யந்த் இப்படத்தைத் தயாரிக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்க உள்ளார்.
ராஜீவ் மேனன் நாயகி
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிவிட்டது. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகரும் பாடகியுமான அபர்ணா பாலமுரளி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் நாயகியான இவர், அந்தப் படத்துக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்திருந்தார்.
‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி யாதவை ஒளிப்பதிவுக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜீவ் மேனன். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படம், வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பதிப்புகளின் ‘டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்’ உரிமையை அமேசான் இணைய விற்பனை நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.