ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகள் கடைபரப்பப்பட்டு வருகின்றன. எவ்வளவுதான் ஊடகங்கள் இவற்றை அம்பலப்படுத்தினாலும் மக்கள் தொடர்ந்து ஏமாந்துதான் வருகிறார்கள். இந்த மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்தும் படம்தான் மனோபாலாவின் தயாரிப்பில் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ வெளியிட்டுள்ள ‘சதுரங்க வேட்டை’.
மண்ணுளிப் பாம்பை விலை உயர்ந்த ஒரு சரக்காக விற்றுப் பணம் பறிக்கும் மோசடியிலிருந்து படம் தொடங்குகிறது. தொடர்ந்து எம்.எல்.எம். முறையில் மோசடி, ரைஸ் புல்லிங் மோசடி என்று தொடர்கிறது. மக்களை ஏமற்றுவது குறித்து சிறிதும் குற்ற உணர்வற்ற காந்தி பாபு (நடராஜ்) என்னும் இளைஞன், தன் புத்திசாலித்தனத்தாலும் பேச்சுத் திறமையினாலும் பெரும் மோசடிப் பேர்வழியாக வலம்வருகிறான். சட்ட அமைப்பை பணத்தைக் கொடுத்துச் சரிக்கட்டுகிறான். ரவுடிகளைப் பணத்தாசை காட்டி ஏமாற்றுகிறான்.
இப்படிச் செல்லும் வாழ்க்கையில் சில துரோகங்களாலும் அரிதாக எதிர்கொள்ளும் அன்பினாலும் சில திருப்பங்கள் வருகின்றன. தன்னிடம் அன்பு காட்டும் பெண்ணை (இஷாரா) மணம் செய்துகொண்டு திருந்தி வாழ நினைக்கும் நேரத்தில் அவனுடைய பழைய குற்றங்கள் துரத்துகின்றன. மீண்டும் மோசடியில் இறங்க வேண்டிய சூழலில் அவனுடைய உயிரும் அவன் மனைவியின் உயிரும் பணயப் பொருள்களாகின்றன. அதிலிருந்து தப்பித்தானா என்பதே கதை.
மோசடி வலை மக்களை ஏமாற்றுகிறது என்பதைவிடவும், மக்களின் பேராசை எப்படி அவர்களை மோசடி வலையில் விழ வைக்கிறது என்பதைத்தான் படம் காட்சிப்படுத்துகிறது. இந்தப் பேராசைதான் மோசடிக்காரர்களின் பிரதான ஆயுதம் என்பதை இயக்குநர் வினோத் அழுத்தமாகக் காட்டுகிறார். அடுத்தபடியாக மோசடி செய்பவர்களின் சாமர்த்தியத்தையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். வசனங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
ஈமு கோழி, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம். மூலம் சம்பாதிப்பது, மூடநம்பிக்கையை வைத்துக் காசு பார்ப்பது என்று பலவும் படத்தில் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களில் ஏமாந்த பலரும் இந்தப் படத்தைப் பார்த்து வெட்கமடைவார்கள். புதிதாக வேறு திட்டங்கள் கடைபரப்பப் பட்டால் அதில் ஏமாறாமல் ஒரு சிலராவது உஷாராக இருக்கக்கூடும். அந்த வகையில் இது வரவேற்கவேண்டிய படம்தான்.
ஆனால் காட்சிகளின் நம்பகத்தன்மை பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன. மண்ணுளிப் பாம்பு வியாபாரம், ஈமு கோழி வளர்ப்பு என உண்மைச் சம்பவங் கள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அவை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்ப டவில்லை. எம்.எல்.எம். மூலம் தொழில் செய்பவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளின் சித்தரிப்பும் ஏனோதானோவென்று இருக் கிறது. நெருக்கடி வரும்போது நாயகன் அடிதடியில் இறங்குவதில்லை. தன் மூளையாலும் வாய் ஜாலத்தாலும் தப்பிக்கிறான். ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. நூறு பேரை அடிப்பது மட்டும்தான் சூப்பர் ஹீரோயிஸம் என்றில்லை. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றும் திறமை உள்ளவனாக ஒருவனைக் காட்டுவதும் சூப்பர் ஹீரோயிஸம்தான். நாயகனின் வெற்றிகள் பலவும் கிட்டத்தட்ட மந்திர வித்தைகள்போலவே இருக்கின்றன. கோபுரக் கலசத்தை வைத்துச் செய்யப்படும் மோசடியைச் சித்தரிப்பதில் மட்டும் இயக்குநர் அதிகமாக மெனக்கிட்டிருக்கிறார். காட்சிகள் பலவும் மெருகேற்றப்படாமல் இருப்பதும் முக்கியமான குறை.
கெட்டவன் திருந்தி வாழ்வது, கடந்த காலம் அவனைத் துரத்துவது, கர்ப்பமாக இருக்கும் பெண்ணைப் பார்த்து அனுதாபம் கொண்டு கொலைகாரன் மனம் மாறுவது, நாயகனைத் தவிர அத்தனை கெட்டவர்களும் செத்துப்போவது என்று க்ளிஷேக்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்றாலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி அடைகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் நடராஜ் நாயகனாக நடித்திருக்கிறார். தீவிரமான காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்தும் இவர் நக்கல், நையாண்டி, காதல் போன்ற காட்சிகளில் ஒட்டாமல் இருக்கிறார். கதாநாயகியாக வரும் இஷாராவுக்கு அதிக வேலை இல்லை. கர்ப்பிணியாக வரும் காட்சிகளில் கவனிக்கவைக்கிறார்.
வில்லன் கோஷ்டியில் ஒருவராக வரும் ராமச்சந்திரன் நன்றாக நடித்திருக் கிறார். கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார். மண்ணுளிப் பாம்பு அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாறும் இளவரசு தான் படத்தில் ஆகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். பேராசை வழியும் அந்தப் பார்வையும் உதட்டுச் சுழிப்பும் அப்பாவித்தனமும் கள்ளத்தனமும் ஒரு சேரக் கொப்பளிக்கும் கண்களும்… பிரமாதம்.
பெரும்பாலான பாடல்கள் திரைக் கதையின் ஓட்டத்தைக் கெடுக்காமல் கதையோட்டத்தை நகர்த்தும் விதத்தில் எடுக் கப்பட்டிருப்பது ஆறுதல். சான் ரோல்டனின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு உதவுகிறது. கோபுரக் கலசத்தை உருவாக்கும் காட்சியின் துடிப்பைக் கூட்ட இசை உதவுகிறது.
விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்பு ணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருந்தால் சிறந்த திரைப் பட அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.