ஒருவர் தன் ஜன்னலைத் திறந்து தன் பிரதேசத்திலிருந்து உற்றுப் பார்த்தாலே 100 கதைகள் சொல்லலாம் என்று கூறிச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. இன்னமும் திரையில் வராத வட்டாரக் கதைகள் தென்னிந்திய சினிமாவில் ஏராளம். அப்படி, வடக்கு கர்நாடகாவில் ஒரு கடலோரக் கிராமத்தில் குடியேறி வாழ வேண்டும் என்கிற கனவை வரித்துக்கொண்டு, அதற்காக தங்கள் நிகழ்கால வாழ்வை இழக்கும் ஒரு காதல் ஜோடியின் உயிரோட்டமுள்ள வாழ்க்கைச் சித்திரம்தான் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’. அதாவது,‘ஏழு கடல்களுக்கு அப்பால், எங்கேயோ’ என்பது பொருள் .
2013இல் லூசியா வெளிவந்த பிறகு கன்னடத் திரையுலகின் நவீன சினிமா வுக்கு ஒரு புதிய பாதை போடப்பட்டது. அந்த வரிசையில் வந்த இரண்டு கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இதற்கு முன்னர் ‘கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு’, ‘கவுலதாரி’ ஆகிய படங் களின் இயக்குநர், ‘அந்தாதுன்’ இந்திப் படத்துக்கான திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் பணிபுரிந்த ஹேமந்த் எம். ராவும் ‘777 சார்லி’ படப் புகழ் இயக்குநர் ரக் ஷித் ஷெட்டியும்தான் அந்த இருவர்.
இறுக்கமானதொரு மாநகர நெருக்கடியில், ஒரு தொழிலதிபரின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிகிறார் நாயகன் மன்னு. ஒரு கடலோரக் கிராமத்தில் போய் குடியேறி வசிக்க வேண்டும், அத்துடன் திரைப்படப் பின்னணிப் பாடகியாகவும் புகழ்பெற வேண்டும் என இரட்டை கனவுகளை வரித்துக்கொண்டவர், கல்லூரி மாணவி ப்ரியா.
இந்த இருவரும் காதலிக்கின்றனர். திருமணத்துக்கு முன்னர் சொந்த வீட்டு கனவுக்காக, சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் செய்யும் ஒரு செயல், எப்படியெல்லாம் அவர்களது வாழ்வை அலைக்கழிக்கிறது என்பதுதான் படம்.
நகர வாழ்க்கையின் இயலாமையையும் ஒரு முதிர்ந்த காதலின் தீர்க்கத்தையும் யதார்த்த வாழ்வின் கோரப் பக்கங்களையும் ஒரே புள்ளியில் இணைய வைத்திருப்பது ஒரு கனமான திரைக்கதை முயற்சி. தமிழில் வெளிவந்த ‘வடசென்னை’ போலவே இப்படமும் பெங்களூர் மத்திய சிறையின் வேறு பக்கங்களைச் சமரசம் இல்லாமல் நமக்கு வெளிப்படுத்துகிறது.
கண்டிப்பும் காதலுமாக ‘கத்தே’ (கழுதை) என்றழைக்கும் ப்ரியாவும் அவளின் கனவுக்காக எதையும் செய்யத் துணியும் மன்னுவும் வழக்கமான சட்டகக் காதலர்களாக இல்லாமல், ஓர் உயிரோட்டமுள்ள உறவால் விளையும் உணர்வுபூர்வத் தருணங்களைச் சிறந்த சினிமா தருணங்களாக அளிக்கின்றனர்.
இருவரும் சேர்ந்து ஒரு பாடல்கூட பாடாத ஜோடியாக இருப்பதாலோ என்னவோ, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குள், இறுக்கங்களுக்குள் நம்மால் ஒன்றிவிட முடிகிறது. சமீபத்தில் இப்படி ஓர் அழுத்தம் திருத்தமான பெண் கதாபாத்திரம் கன்னடத் திரையில் வெளிவரவில்லை.
கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கக் கனவு காணும் மன்னுவாக ரக் ஷித் ஷெட்டியும் ஆயிரம் ‘பாவ’ங்கள் காட்டும் ப்ரியாவாக ருக்மணி வசந்த்தும் பிரமாதமான நடிப்பை அளித்துள்ளனர். அம்மாவாக வரும் பவித்ரா லோகேஷ், அச்யுத்குமார், அவினாஷ், ஷரத் லோஹித்தாசா, சோமாவாக வரும் ரமேஷ் இந்திரா எனத் துணைக் கதா பாத்திரங்களில் வருபவர்கள் கதை, களம், கதாபாத்திர முனைப்பு ஆகியவற்றுக்கு உயிர்கொடுத்து நடித்திருக்கிறார்கள்.
2010இல் நடைபெறும் கதையமைப்பில் முதல் பாகமாக இப்படம் வந்துள்ளது. வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தைப் போலவே இப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் காட்டப்படுகிறது. கதையின் எஞ்சிய முடிச்சுகள் 2020இல் நடைபெறுவதாக இரண்டாம் பாகம் அமைந்திருப்பதை முன்னோட்டக் காட்சிகள் கூறுகின்றன.
இப்படத்தில் ஹேமந்த் எம். ராவ் (கன்னடத்து பாலாஜி சக்திவேல்) துயரம் தோய்ந்த கவித்துவமான இயக்கத்தைப் படம் முழுவதும் சாத்தியமாக்கியிருக்கிறார். அவரது நெறியாள்கைக்கு மிகவும் உறுதுணையாக, அத்வத குருமூர்த்தியின் ஒளிப்பதிவும் சரண்ராஜின் பாடல்கள், பின்னணி இசையும் அமைந்துவிட்டன. சமீபத்தில் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் இது குறிப்பிடத்தகுந்த பின்னணி இசை என்பதைப் படத்தைப் பார்க்கும்போது உணரமுடியும்.
கடலை வெகுவாக ரசிக்கும் ப்ரியா, காதலன் மன்னுவுக்கு ஒரு சங்கினைப் பரிசளிக்கிறாள். அந்தச் சங்கில், பிரிவிலும் அவளின் கடல் சத்தம் அவனுக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அப்படித்தான் திரைப்படம் முடிந்து வெளிவந்த பின்னரும் திரைப்படத்தின் அதிர்வுகள் நம்முடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. இதுவே இரண்டாம் பாகத்தைக் காண வேண்டும் என்கிற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது.
- tottokv@gmail.com