திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ்ச் சூழலில் இலக்கியத்துக்கு கிடைக்காமலிருப்பது தொடரும் துரதிர்ஷ்டம். உலகின் வேறு எந்த மொழிக்கும் இணையாக தற்காலத் தமிழிலக்கியம் செழித்து வளர்ந்திருந்தபோதும் அது தன்னை வாசிக்கும்படி தமிழர்களிடம் யாசித்து நிற்கிறது.
நிலைமை இப்படியிருக்கும்போது, தேடிப்பிடித்து வாசித்த சிறந்த இலக்கியப் பிரதிகள், சிறந்த திரைப்படங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் திறனாய்வை, அனைவருக்குமான மொழியில் எழுதும் புதிய விமர்சகர்கள் அரிதாகவே வந்துசேர்கிறார்கள். ‘காகங்கள் கரையும் நிலவெளி’ புத்தகத்தின் மூலம் அப்படியொரு அரிதான இளம் விமர்சகராக முகிழ்த்திருக்கிறார் சரோ லாமா.
சிறந்த புனைவிலக்கியப் படைப்புகள் தரும் தரிசனங்களை வாசிப்பின் வழி ஆழ்ந்த பார்வைக்கு உட்படுத்தும் இவர், அதற்கு இணையாக சிறந்த திரைப்படங்கள் கொண்டிருக்கும் படைப்பாக்கம் பற்றிய மதிப்பீட்டை தனது அனுபவங்களையும் கலந்து புனைந்து தந்திருப்பது இவரது விமர்சனத்தின் தனித்த அம்சம்.
மொத்தம் 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இத்தொகுப்பில், ‘ஒரு படைப்பு என்ன செய்யும்? முதலில் அது உள்ளுணர்வின் அகக்கண்களைத் திறக்கிறது. அதன்பிறகு நமக்குள் நிகழ்வதெல்லாம் மேஜிக் மட்டும்தான்’ என்று கூறுவதுடன் நின்றுவிடவில்லை. தான் வாசித்த இலக்கியப் பிரதிகளையும் பார்த்து வியந்த திரைப்படங்கள், இரு தளங்களிலும் கவனம்பெறாமல் போன படைப்பாளுமைகள் என ‘ஃபில்டர் காபி’ சுவையுடன் இவர் தந்துள்ள விமர்சன அறிமுகங்கள், சம்பந்தப்பட்ட படைப்புகளைத் தேடி வாசிக்கவும் பார்க்கவும் தூண்டக் கூடியவையாக இருக்கின்றன.
அமெரிக்க எழுத்தாளர் ஜே.டி.சாலிங்கரை ஆழமாக அறிமுகப்படுத்திக் கொண்டே, அங்கிருந்து கிம் கி டுக்கின் ‘ஸ்பிரிங் சம்மர் விண்டர் ஃபால்’ திரைப்படம் விரித்த அக உலத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். கிம் கி டுக்கின் மரணம் அவரை எந்த அளவு தொந்தரவு செய்ததோ, அதே அளவு க்ரியா ராமகிருஷ்ணனின் மரணமும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மரணமும் எவ்வாறு அதிர வைத்தன என அவர்களது பங்களிப்பையும் தனிப்பட்ட வாழ்வையும் அஞ்சலி மனநிலையிலிருந்து விலகி நின்று விரித்துள்ளார்.
கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’ நாவலை ஒரு சிறந்த செவ்வியல் திரைப்படம்போல் அறிமுகப்படுத்துகிறார். அங்கிருந்து தாவி, இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் கண்களாக பல படங்களில் பங்களித்த ஒளிப்பதிவாளர் ஹேமந்த் சதுர்வேதியின் மற்றொரு உலகத்தை நம் முன் படையல் வைக்கிறார். ‘பதேர் பாஞ்சாலி’யையும் சத்யஜித் ராயையும் பேசிக் களைத்த நமக்கு, அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுப்ரதோ மித்ரா குறித்து பேச விட்டுப்போன ஞாபக மறதியைத் தூண்டி விடுகிறார். சத்யஜித் ராயையும் மகேந்திரனையும் நினைவூட்டியபடி மகேந்திரனின் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் குறித்து எந்தப் பதிவும் இல்லாமல் இருப்பதை வாஞ்சையுடன் சுட்டிக்காட்டுகிறார்.
முத்தாய்ப்பாக, போலந்து உலக சினிமாவின் பிதாமகன் கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கியின் படைப்புலகம் தன்னை எவ்வாறு ஆகர்ஷித்தது என்பதை விரிக்கும் கடைசி கட்டுரை சரோ லாமா விமர்சனத்தை தொடர வேண்டும் என்கிற எண்ணத்தை நமக்கு வழங்குகிறது. இலக்கியமும் சினிமாவும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் கலைகள் என்பதை தழுவியும் தாவியும் செல்லும் சரோ லாமாவின் விமர்சனப் பார்வை ரசனை மிகுந்த வாசிப்பனுபவத்தை வழங்கிவிடுகிறது.
காகங்கள் கரையும் நிலவெளி
விமர்சனக் கட்டுரைகள்
ஆசிரியர்: சரோ லாமா
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ 200/-
நூலைப் பெற: 9942633833