இந்து டாக்கீஸ்

வேட்டையாடு விளையாடு 14: ஆஸ்கரைத் தவறவிட்ட ‘இந்தி’யப் படம்!

ஷங்கர்

1. ஆஸ்கரைத் தவறவிட்ட ‘இந்தி’யப் படம்!

சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை ஒரு ஓட்டில் இழந்த பெருமை பெற்ற ‘மதர் இண்டியா’ 1957-ல் வெளியானது. சுனில் தத், நர்கீஸ் ஜோடிக்கு அழியாப் புகழைக் கொடுத்த படம் இது. மகபூப் கான் இயக்கிய இதன் கதை திருமணத்துக்குப் பின்னான பெண்ணின் நிலை, வட்டியால் அவதிப்படும் இந்திய விவசாயிகளின் நிலை ஆகியவற்றைப் புரட்சிகரமாக வெளிப்படுத்தியது. விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றிபெற்ற படம் இது. இதன் தலைப்பு இந்தியாவைக் கேலிசெய்து எழுதப்பட்ட கேதரீன் மயோ-வின் நூலுக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டது. இப்படத்தில் முதன்முறையாகக் கதாநாயகி வேடம் ஏற்ற நர்கீஸின் இயற்பெயர் என்ன?

2. ஓர் இயக்குநரின் கலை உச்சம்!

போலந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டாப் கைஸ்லோவ்ஸ்கியின் ‘ப்ளூ’ (1993), ‘வைட்’ (1994), ‘ரெட்’ (1994) எனும் ட்ரையாலஜி முதன்மையாகக் கொண்டாடப்படுகிறது. ‘த்ரீ கலர்ஸ்’ ட்ரையாலஜி என்று அழைக்கப்படும் இப்படைப்பின் மூன்று வண்ணங்களும் பிரான்ஸின் தேசியக்கொடியில் இருப்பவை. ‘ப்ளூ’ சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் ‘வைட்’ சமத்துவம் என்ற கருத்தாக்கத்தையும் பரிசீலிக்கும் கதைகளைக் கொண்டவை. மனித உறவுகளில் தார்மிகரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும் நிலவும் சிக்கல்களைக் கையாள்வதில் ஆர்வமுள்ள கைஸ்லோவ்ஸ்கியின் கலை உச்சமாக இந்தப் படைப்புகள் கருதப்படுகின்றன. வாழ்வில் தற்செயல் நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புதிர்போல மனிதர்கள்மீது கவிந்துவிடும் விதியையும் ‘ரெட்’ படத்தின் மூலமாக ஆராயும் கைஸ்லோவ்ஸ்கி, சமகால இயக்குநர்களான குவெண்டின் டாரண்டினோ, அலெஜேண்ட்ரோ கோன்சாலெஸ் இனாரிட்டு போன்றவர்களை இப்படம் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவுக்காக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த மூன்று படங்களையும் பத்து மாதங்களில் எடுத்தார். இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தபோது அவருக்கு வயது என்ன?

3. தமிழ் சினிமா தந்த ராமாயணம்

மவுனப்படக் காலத்திலிருந்தே ராமாயணம் சினிமாக் கலைஞர்களை ஈர்த்துள்ளது. பேசும் படமாக ‘சம்பூர்ண ராமாயணம்’ தமிழில் முதலில் 1958-ல் வெளியானது. 22 ஆயிரம் அடிகள் நீளம்கொண்ட மூன்றரை மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்தின் திரைக்கதையைப் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எழுத, கே. சோமு இயக்கினார். எம்.ஏ.வேணு தயாரித்தார். ராமனும் சீதையுமாக என்.டி.ராமராவும் பத்மினியும் நடித்தனர். பரதனாக சிவாஜி கணேசன் நடித்தார். ராவணனாக டி.கே.பகவதி காட்டிய பராக்கிரமம் திரை ரசிகர்கள் மறக்காதது. தசரதராக நாகையாவும் கைகேயியாக வரலட்சுமியும் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ராவணனுக்காக சி.எஸ்.ஜெயராமன் பாடிய ‘இன்று போய் நாளை வா’ பாடல் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இன்றும் நிற்பதோடு, பிரபல இந்துஸ்தானிக் கலைஞரான பீம்சென் ஜோஷியையும் கவர்ந்தது. இந்தப் படம் உருவாக்கப்பட்ட ரத்னா ஸ்டுடியோ எந்த ஊரில் அமைந்திருந்தது?

4. உடைக்கப்பட்ட கேமராக்கள் !

ஆறு ஆண்டுகள் உழைப்பில் உருவான ஆவணப்படம் ‘ஃபைவ் ப்ரோக்கன் கேமராஸ்’. இஸ்ரேலிய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தனது கிராமத்தின் ஆலிவ் மரத் தோப்புகளின் அழிவு, அந்த நிலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதை எதிர்க்கும் மக்களின் அமைதிப் போராட்டம் ஆகியவற்றைச் சொல்லும் படம் இது. கிராமத்தில் நடக்கும் தொடர் போராட்டத்தைப் படம் பிடிக்கும் இமாட் பர்னாட்டின் ஆறு கேமராக்கள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் அடுத்தடுத்து உடைத்து நொறுக்கப்பட்டன. ஒவ்வொரு கேமரா உடையும் பின்னணியில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. பாலஸ்தீனியர் இமாட் பர்னாட், இஸ்ரேலியர் கய் தாவிதி இருவரும் சேர்ந்து உருவாக்கிய படம் இது. தேசங்கள், பேதங்கள் கடந்த ரசவாதம் இந்த ஆவணப்படம். 2013-ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இதன் இயக்குநர் இமாட் பர்னாட், ஆஸ்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இறங்கியபோது அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு எந்த ஆவணப்பட இயக்குநரின் பரிந்துரையின் பேரில் அவருக்கு அனுமதி தரப்பட்டது?

5. துயரக் காதலின் இசை

ஹாங்காங்கைச் சேர்ந்த இயக்குநர் வோங் கார்வாய் எடுத்த துரதிர்ஷ்டம் பிடித்த அழகிய காதல் கதை இது. அறுபதுகளின் காலத்தின் ஒப்பனை, உடைகள் ஆகியவற்றுடன் ஓவியம் போல உருவான ‘இன் தி மூட் ஃபார் லவ்’ என்னும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டாய்ல். ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இரண்டு தம்பதியரில் ஒவ்வொருவரும் அடுத்த இணையின் பால் ஈர்க்கப்படுகின்றனர். நகரமயமாதல், கணவன்-மனைவி உறவுக்குள்ளேயே ஏற்படுத்தும் தனிமை, ஏக்கம், நிறைவேறாத காதல் அனைத்தும் இணைந்த இப்படத்தின் இசை மிகவும் பேசப்பட்டது. ‘யுமிஜிஸ் தீம்’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் புகழ்மிக்க சவுண்ட் டிராக்கை உருவாக்கிய இசையமைப்பாளர் யார்?

SCROLL FOR NEXT