உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கச் சிறப்புப் படையின் தீரர்கள் 12 பேர் ஆப்கானிஸ்தானில் ஊடுருவி அங்கு அமெரிக்காவின் போர் அதிகாரத்தைத் தொடங்கிவைக்கும் அதிரடியே ‘12 ஸ்ட்ராங்’ திரைப்படம்.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு அடுத்த நாளே அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்கும் வேலைகளை சி.ஐ.ஏ தொடங்குகிறது. அதற்கான சிறப்புப் படையில் தன்னார்வத்துடன் பொறுப்பேற்கும் 12 வீரர்கள், போர் ஆயத்த நடவடிக்கைகளுக்காக ஆப்கன் பள்ளத்தாக்குகளில் களமிறங்குகின்றனர். மலைப் பிராந்தியங்களில் பரிச்சயமற்ற குதிரையேற்றத்தில் பயணிக்கும் இவர்கள், அடிப்படைவாத தாலிபன்களுக்கு எதிராகப் போரிடும் வடக்குக் கூட்டணிப் படையினரிடம் பொது எதிரியை வீழ்த்தும் வியூகத்துக்கான உள்ளூர் உதவிகளை ஒருங்கிணைக்கின்றனர். அடுத்தபடியாக அயல்தேசத்தில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ போருக்கு வழிசெய்யும் வகையில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பழங்குடியினர் நம்பிக்கையையும் பெறுகின்றனர். முதல் வெற்றியாக ‘மஸர்-இ-ஷரிஃப்’ நகரத்தைப் போரில் மீட்கவும் இவர்கள் காரணமாகிறார்கள்.
இப்படி எதிரி நாட்டில் ஊடுருவி தங்கள் ராணுவப் பாய்ச்சலுக்கு அச்சாரமிட்ட இந்த 12 குதிரை வீரர்களின் சாகச அனுபவங்களை வைத்து வெளியான ‘ஹார்ஸ் சோல்ஜர்ஸ்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே ‘12 ஸ்ட்ராங்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியானபோதும், அமெரிக்காவின் வெற்றியைச் சாத்தியமாக்கிய ஆப்கன் மண்ணின் மைந்தர்கள் உதவிகளைப் பதிவுசெய்த வகையில் இப்படம் கவனம் பெறுகிறது. இதற்காக அமெரிக்க வீரர்கள் நடத்தும் தாக்குதல் காட்சிகளுக்கு இணையாக, தாலிபன்களுக்கு எதிராக அப்போது போரிட்ட ஆப்கனின் தற்போதைய முதல் துணை அதிபருமான அப்துல் ரஷீத் தாஸ்டம் (Abdul Rashid Dostum) பாத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.
கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், மைக்கேல் ஷேனன் உள்ளிட்டோர் நடித்து, நிகோலய் பூஷி (Nicolai Fuglsig) இயக்கிய இத்திரைப்படம் வரும் ஜனவரி 19 அன்று வெளியாகிறது.