பிளாக் ப்ரைடே, தேவ் டி, குலால், கேங்ஸ் ஆஃப் வசேபூர் படங்கள் வழியாக பாலிவுட்டின் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குநர் அனுராக் காஸ்யப். இவர் இதுவரை எடுத்த திரைப்படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் எடுத்துவரும் ‘பாம்பே வெல்வெட்’ வரும் நவம்பரில் வெளியாக உள்ளது. ரூ. 90 கோடி பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது.
1950-கள் காலத்திய பழைய பம்பாயின் நிலவெளியை அப்படியே இப்படத்தில் கண்முன் காட்டப்போகிறார்கள். இப்படத்தைப் பொறுத்தவரை பம்பாய் நகரமும் ஒரு கதாபாத்திரமாக ரத்தமும் சதையுமாக உலாவரப் போகிறது.
சமீபத்தில்தான் ‘பாம்பே வெல்வெட்’ படப்பிடிப்பிற்காக இலங்கையிலிருந்து 200 வின்டேஜ் கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நல்ல நிலையிலிருக்கும் அத்தனை பழைய கார்கள் இந்தியாவில் இல்லையாம்.
பழைய பம்பாயில் தெருச்சண்டைக்காரனான ஜானி பால்ராஜ் என்பவன் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் தன் வாழ்க்கையில் அடையும் ஏற்றம்தான் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் கதை. அவனது காதலி ஜாஸ் பாடகி ரோசி. ஜானியின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், ரோசியாக அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளனர். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கரண் ஜோகர் இந்தப் படத்தில் வில்லனாக அரிதாரம் பூசியுள்ளார்.
பாம்பே வெல்வெட் படம் மும்பையின் வளர்ச்சியையும், நல்ல வாழ்க்கைக்காக மனிதர்கள் நடத்தும் போராட்டத்தையும், கனவுகளையும் சொல்கிறது. எல்லாருக்கும் வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் அதே நகரம்தான் பல்வேறு குற்றங்களின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. இதுதான் பாம்பே வெல்வெட்டின் கதை. கியான் பிரகாஷ் என்ற எழுத்தாளரின் ‘மும்பை பேபிள்ஸ்’ என்ற வரலாற்று நூலைத்தான் அனுராக் காஸ்யப் திரைக்கதையாக மாற்றியுள்ளார். காதல், பேராசை, வன்முறை வழியாக ஒரு பெருநகரமாக மும்பை எப்படி உருவாகிறது என்பதைத் தெரிவிக்கிறது அட்டகாசமான இசைப் பின்னணியில் மூன்று பாகங்களாகத் தயாராகும் பாம்பே வெல்வெட்.
தேவ் டி படத்துக்கு அருமையான பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் அமித் திரிவேதிதான் பாம்பே வெல்வெட் இசைக்கும் பொறுப்பேற்றுள்ளார். 1960-களில் வெளிவந்த இந்திப் படங்களில் ஆதிக்கம் செலுத்திய ஜாஸ் இசையின் தாக்கம் படத்தில் இருக்கும் என்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் இத்திரைப்படத்துக்காகப் பாக்சிங் சண்டை கற்றார். இப்படத்தைப் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், பாண்டம் பிலிம்ஸ் நிறுவனத்தினரும் சேர்ந்து தயாரிக்கின்றனர்.
மணிரத்னத்துக்கு ‘நாயகன்’ போல, அனுராக் காஸ்யப்புக்கு ‘பாம்பே வெல்வெட்’ மிகப் பெரிய உயரத்தை அளிக்கலாம். பாலிவுட் ரசிகர்கள் ஒரு மகா விருந்துக்குக் காத்திருக்கிறார்கள்.