இந்து டாக்கீஸ்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: வலையில் சிக்கிய வாழ்க்கை - தி நெட்

க்ருஷ்ணி

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு படம் தனித்து நிற்கும். 2015-ல் ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹியின் ‘தி டாக்ஸி‘, 2016 விழாவில் மற்றொரு ஈரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதியின் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி சேல்ஸ்மேன்’ அப்படிப்பட்டவை. இந்த முறை தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய ‘The Net’ அப்படிப்பட்ட படமாகத் திகழ்ந்தது. அனைத்துத் தரப்பினருக்கும் புரியாது, ஒரே காட்சிக்குள் பல விஷயங்களைச் சொல்வார், பலவீனமான மனம் கொண்டவர்களால் பார்க்க முடியாது, அதீத வன்முறை போன்ற கருத்துகள் கிம் கி டுக் படங்கள் சார்ந்து பொதுவாக முன்வைக்கப்படுகின்றன. இந்த முறை அவர் இயக்கியிருப்பது ஒரு அரசியல் பின்னணி கொண்ட நடப்பு நிகழ்வுகளைப் பேசும் படம்.

தென்கொரியாவையும் வட கொரியாவையும் ஒரு சாதாரணக் கயிற்றுக் கோட்டால் பிரிக்கிற ஆற்றில் மீன் பிடிப்பதுதான் நம்சுல் வூவின் தொழில். ஒருநாள் படகில் வலை சிக்கிக்கொள்ள எதிர்பாராமல் எல்லை தாண்டிவிடுகிறார். தென்கொரிய அதிகாரிகளிடம் விசாரணைக் கைதியாகப் பிடிபடுகிறார். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நாடு திரும்பும் நம்சுல்லின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படம்.

தென்கொரிய அதிகாரிகளால் நம்சுல் விசாரிக்கப்படுகிற விதம், உலகம் முழுவதும் சந்தேகத்தின் பெயரில் பிடிபடுகிற மனிதர்களின் நிலை ஏற்படுத்தும் வலியைக் கடத்துகிறது. எத்தனை முறை பதில் சொன்னாலும் அம்புகளாய்த் துரத்தி மண்டியிட வைக்க முயலும் கேள்விகளும் வன்முறையும் அடிப்படை விதிகளாக இருக்கின்றன.

ஆனால், நம்சுல் வூ எதற்கும் உடனே அடிபணிந்து விடுவதில்லை. விசாரணைக்கு முன்பு தென்கொரிய அரசு தரும் ஆடைகளை அணிய மறுப்பதில் தொடங்கி வெளிப்படுகிறது அவரது தன்மானம். பிறகு, சியோல் நகரத்தைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகக் கண்களை மூடியபடியே பயணிக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் கண்களைத் திறக்க நேர்கிறது. முன்னேற்றம் எட்டிப் பார்க்காத தன் கிராமம், மீன்பிடித் தொழில் ஆகியவற்றை மட்டுமே அறிந்திருந்தவரின் கண்களை வானுயர்ந்த கட்டிடங்களும் ஷாப்பிங் மால்களும் நிறைக்கின்றன. அவற்றை ஆச்சரியம் விலகாமல் பார்க்கும் அவர், அவற்றால் ஈர்க்கப்படவில்லை. கரடி பொம்மையைப் பார்க்கும்போது மட்டும் முகத்தில் தென்படும் சிறு சலனம், நாட்டுப்பற்றை மீறிய தந்தைப் பாசத்தைக் காட்டுகிறது.

நாடு திரும்ப படகு ஏறியவுடன் விசாரணை ஆடைகள் அனைத்தையும் களைந்து எறிகிறார் நம்சுல். நாட்டுப்பற்றுடன் தாயகம் திரும்பும் தனக்குக் கிடைக்கும் வரவேற்பை மனதுக்குள் எதிர்பார்த்தபடி செல்கிறார். வட கொரிய நாட்டுக்கொடியைச் சுற்றி அவரை அழைத்துச் செல்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், உடனே அவர் வீடு திரும்ப முடிவதில்லை. எதிரி நாட்டைப் போலவே, சொந்த நாட்டிலும் தொடர்கிறது விசாரணை. நாடுகள் வேறாக இருந்தாலும் சாதாரண மக்களுக்கு எதிரான அணுகுமுறைகள் ஒன்றாகவே இருக்கின்றன. துளைத்தெடுக்கும் கேள்விகளால் வதைபடுகிறார். நடந்தவை அனைத்தையும் அச்சு பிசகாமல் எழுதச் சொல்கிறார்கள். உதட்டில் ஒட்டிய விரக்தியாகப் புன்னகையுடன், “ஒரு ஏழை மீனவனால் எழுதுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்?” என்கிறார்.

மனதளவிலும் உடல் அளவிலும் விடாமல் தொடரும் அவமானங்களால் மனம் கன்றிப்போனவர், மனைவியோடு தனித்திருக்கிற பொழுதிலும் உணர்வற்றுப் போன மனிதராக மாறிவிடுகிறார். தனக்கு நேர்ந்ததில் ஒரு துளியைக்கூடப் பகிர முடியாத மன நெருக்கடியுடன் இருக்கும் நம்சுல், கணவனைத் தேற்றும் வழியறியாத மனைவி, நடப்பதன் சூதுவாதுகள் அறியாத மகள் என அந்தக் குடும்பம் ஒரு சாதாரண விபத்தால் தலைகீழாகிப் போகிறது. இரண்டு நாடுகளிலும் தனி மனித வாழ்வுரிமை மதிக்கப்படுவதும் இல்லை, அது எல்லோருக்கும் கிடைப்பதும் இல்லை என்பதைக் கச்சிதமான காட்சி மொழியால் சொல்லியிருக்கிறார் கிம் கி டுக்.

தென்கொரியாவில் ஏன் வசிக்க மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஜனநாயக நாடு என்கிறீர்கள். பிறகு ஏன் ஒரு பெண் தன் உடலை விற்று வாழ வேண்டிய நிலை இங்கே இருக்கிறது? உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன, செயல்படும் நிலையில் இருக்கும் மின்னணுப் பொருட்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன” என்று ஒவ்வொரு முரணையும் அவர் அடுக்கும்போது, நாடுகளின் எல்லைகள், அரசுகள் மாறினாலும் மக்கள் இயல்பான மகிழ்ச்சியோடு இல்லை என்பது உறைக்கிறது. ராஜதந்திரம், அயல்நாட்டு உறவு, அரசியல், அரசுகள் போன்றவை சாதாரண மக்களின் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தும் வேலையைச் செய்வதில்லை என்பதை அவர்களின் முரண்பாடான செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது.

மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வளர்க்கப்படும் வெறுப்பரசியலின் வீரியமும் அதற்கு அகப்படாதவர்களின் மனிதநேயமும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்பட்டுள்ளன. நம்சுல் வூ-வை விசாரிக்கும் தென்கொரிய விசாரணை அதிகாரி, போரில் தன் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர். வட கொரியர்கள் மீதான வன்மத்தை அவரால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதே நேரம் நம்சுல்லுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக வருகிற வோஜின் வூவின் தாத்தாவுக்கு வடகொரியாதான் பூர்விகம். அந்தக் காரணத்தைத் தாண்டி, இயல்பாகவே நம்சுல்லை ஒரு மனிதனாக நடத்த வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார் வோஜின் வூ.

இடையில் ஓரிடத்தில் நம்சுல் வூ சொல்லும் வசனம் இது: “என் வலையில் நிறைய மீன்களைப் பிடிக்க வேண்டுமென நினைத்தேன். வலையில் சிக்கிக்கொண்ட ஒரு மீனுக்கு அத்துடன் எல்லாம் முடிந்து போகிறது. இப்போது நானும் வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்”. நாட்டு எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகம் முழுவதும் உழைப்பை மட்டுமே அறிந்த எளிய மக்களின் வாழ்க்கையின் இன்றைய நிலையில் நம்சுல் வூ சொல்வதைப் போல ‘வலையில் சிக்கிக்கொண்ட வாழ்க்கை’யாகவே இருக்கிறது.

SCROLL FOR NEXT