த
மிழ்நாட்டில் பிறமொழிப் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால்தான் சென்னையில் உள்ள காசினோ, சங்கம், ஈகா திரையரங்குகளைத் தாண்டி இப்போது பெரும்பாலான திரையரங்குகளில் பிறமொழிப் படங்கள் வெளியாகின்றன. ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்குப் படங்களும்கூட நூறு நாட்களைக் கடந்து வெற்றி வாகை சூடுகின்றன.
தமிழ்நாட்டின் வெற்றியைக் கொண்டு தமிழ் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இப்போது பிறமொழிப் படங்கள் தயாராகிவருகின்றன. உதாரணமாக மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான ‘போக்கிரி சைமன்’, கடந்தாண்டு வெளியான ‘கட்டப்பனையிலே ஹிருத்திக் ரோஷன்’ போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பெறும் வெற்றியையும் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு வெளிவந்து தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த படங்கள் அதிகம். இந்தியில் ‘பிங்க்’, ‘தங்கல்’, ‘உட்தா பஞ்சாப்’, ‘ராமன் ராகவ்’ போன்ற பல படங்கள் தமிழ்ப் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன. ஆனால், இந்த ஆண்டு கவனம் ஈர்த்த படங்கள் மிகவும் குறைவு. கடந்த செப்டம்பரில் வெளியான ‘நியூட்டன்’ இந்திப் படம் அவற்றுள் ஒன்று. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கமுள்ள தண்டகாரண்யா காட்டுப் பகுதியில் ஒரு கிராமத்தின் தேர்தல் வழியாக இந்திய ஜனநாயகத்தின் நிலையை இந்தப் படம் சித்திரிக்கிறது. இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவில் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. அமித் மசூர்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் மையக் கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.
இந்த ஆண்டின் இறுதியில் வந்து கவனம் ஈர்த்த மற்றொரு படம் ‘கரீப் கரீப் சிங்கிள்’. ‘பூ’ பார்வதி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை இந்தி சினிமாவின் புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் தனுஜா சந்திரா இயக்கியுள்ளார். இர்ஃபான் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். முரண்பட்ட குணாதிசயங்கள் கொண்ட இருவரின் வாழ்க்கைப் பயணத்தைக் களமாகக் கொண்டது இந்தப் படம். ‘தங்கல்’ அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஆமிர்கானின் நடிப்பில் வெளியான ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படமும் கவனத்தைப் பெற்றது. பாடகி ஆகக் கனவு காணும் பதினைந்து வயதுச் சிறுமியின் வாழ்க்கைதான் இந்தப் படம். இதைத் தவிர்த்து பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ‘டாய்லெட்’ படம் வெறும் பிரச்சாரமாகிப் போனது.
தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன. ஆனால், தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த படங்கள் மிகக் குறைவுதான். ‘அர்ஜுன் ரெட்டி’ ஆந்திரா, தெலுங்கானாவைவிட சென்னையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. தமிழ்ப் பெண்களின் மனம் கவர்ந்த பிறமொழி நாயகர்களான நிவின் பாலி, துல்கர் பட்டியலில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக நடித்த விஜய் தேவாரகொண்டாவும் இந்தப் படம் மூலம் சேர்ந்துவிட்டார். இந்த நூற்றாண்டின் தேவதாஸாக இதில் அவர் நடித்திருக்கிறார்.
அதற்கு முன்பு வெளிவந்த ‘ஃபிடா’ படமும் தமிழில் கவனத்தைப் பெற்றது. காரணம், ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி இதில் நாயகியாக நடித்திருந்ததே. இறுதியாக வெளிவந்த மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ தமிழில் நேரடியாக வெளியானாலும் அதையும் தெலுங்குப் படமாகவே கொள்ளலாம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இங்கே வெளியான ‘பாகுபலி’ சென்னையில் பெரும் வெற்றியைப் பெற்றது. கன்னடப் படங்களைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு வெளிவந்த ‘திதி’ திரைப்பட விழாக்களின் வழியே கவனம் பெற்றதால் சென்னையில் திரையிடப்பட்டது. இந்த ஆண்டு புனீத் ராஜ்குமார் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னைக்கு வந்தன. அவை பெரிய கவனத்தைப் பெறவில்லை
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை பல நல்ல சினிமாக்களைத் தந்த ஆண்டு இது எனலாம். அவற்றுள் முதன்மையான படம் ‘அங்கமாலி டைரீஸ்’. 86 புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றது. கேரளத்தின் அங்கமாலி என்ற ஊரை, அதன் பன்றி மாமிச வியாபாரத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியிருந்தார். இதற்கு அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த ‘டேக் ஆஃப்’, பார்வதியின் நடிப்புக்காக மிகவும் பேசப்பட்டது. இந்தப் படம் சிறந்த நடிப்பு, சிறந்த படத்துக்கான சிறப்புப் பிரிவில் இரு விருதுகளை கோவா திரைவிழாவில் பெற்றது. இதற்கிடையில் துல்கர் சல்மானின் ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, நிவின் பாலியின் ‘சகாவு’ ‘ஒரு மெக்சிகன் அபாரத’ போன்ற படங்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்து கவனம் ஈர்க்கத் தவறிய படங்களாயின.
ஜூலையில் வெளிவந்த ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ அவற்றுக்குப் பரிகாரமானது. ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ வெற்றிப் பட இயக்குநர் திலீஷ் போத்தனின் இரண்டாவது படமான இது வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது. தாலி மாலை திருடப்படுவது தொடங்கி காவல் நிலையக் கூத்துகளை இந்தப் படம் சித்திரித்தது. இறுதியாக செப்டம்பரில் வெளிவந்த ‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிடவேள’ தமிழ்நாட்டில் வெற்றியைப் பெற்றது. புற்றுநோய்ப் பாதிப்பைப் பற்றிய இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அல்தாஃப் முழு நகைச்சுவையாக எடுத்திருந்தார்.
இந்த ஆண்டு கவனம் ஈர்த்து தமிழகத்தில் வரவேற்பு பெற்ற பிறமொழிப் படங்களில் பெரும்பாலானவை யதார்த்தத்தை மையமாகக் கொண்டவை. நட்சத்திர அந்துஸ்து இல்லாத நடிகர்களை மையப்பாத்திரமாகக் கொண்டவை. இந்த அம்சங்கள் நல்ல சினிமாவுக்கான ஒரு செய்தியைச் சொல்கின்றன போலும்.