இந்து டாக்கீஸ்

தரணி ஆளும் கணினி இசை 12: இசைக் கலவை ரகசியங்கள்

தாஜ்நூர்

தொடக்க கால இசைப் பதிவு என்பது மோனாவாக (Mono sound) ஒற்றை ஒலித்தடத்தில் பதிவுசெய்யக்கூடியதாக இருந்தது. அன்று இசைப் பதிவுக் கூடத்தின் ஆர்க்கெஸ்ட்ரா ஹாலில், பேஸ் கிட்டார், கிட்டார், வீணை, தபலா என்று தொடங்கி 8 முதல் 16 வாத்திய இசைக் கலைஞர்கள் வரை அமர்ந்திருப்பார்கள். பாடகர்களுக்கான அறையில் இரண்டு பாடகர்கள் மற்றும் கோரஸ் பாடுபவர்கள் இருப்பார்கள். பாடகர்களுக்குத் தனி மைக்கும் ஒவ்வொரு வாத்தியத்துக்கு என்று தனித்தனியாகவும் மைக் பொருத்தப்பட்டிருக்கும். இசையமைப்பாளர் தனது மெட்டைப் பாடகர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார்.

இசைக் கோவையில் இடம்பெறும் இசையின் குறிப்புகளை வாத்தியக் கலைஞர்களுக்குக் கொடுத்து, அதை அவர்களை வாசிக்கச் சொல்லி ஒத்திகை பார்த்திருப்பார். பாடல்பதிவு தொடங்கியதும் இசையமைப்பாளரின் கையசைவுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு வாத்திய இசைக் கலைஞரும் அது கிடைத்ததும் சரியான ஒத்திசைவில் வாசிக்க, பாடகர்கள் அவர்களின் இடம் வரும்போது பாட, அந்தந்த மைக்குகளின் வழியே வரும் வாத்திய இசை, குரல்கள் ஆகியவை ‘மிக்ஸர்’(mixer) என்ற அனலாக் கருவியில் ஒன்றிணைக்கப்பட்டு (Pool) ‘மோனோ ட்ராக்’ எனப்பட்ட ஒற்றை ஒலித்தடத்தில் பதிவு செய்யப்பட்டன. ஸ்டீரியோ அறிமுகமானபோது இதே முறையில் இடம், வலம் என குரல்களும் இசையும் பிரித்து அனுப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன.

மனிதர்களாகிய நமக்கு இடது, வலது என்று இரண்டு காதுகள் இருக்கின்றன. ஏன் ஒலிகளையும் இடது, வலது எனத் தனித்தனியே பிரித்து இரண்டு ஸ்பீக்கர்கள் வழியே கேட்கும்படி பதிவு செய்யக் கூடாது என்ற சிந்தனையின் வழியே பிறந்ததுதான் ‘ஸ்டீரியோ’(Stereo sound). இந்தியத் திரைப்பட இசைக்கு எழுபதுகளின் இறுதியில்தான் ஸ்டீரியோ வந்து சேர்ந்தது.

தமிழ்த் திரையிசையில் ஸ்டீரியோ இசையைப் பயன்படுத்தி முதன்முதலில் ஒலிப்பதிவு செய்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ‘ப்ரியா’ படத்தில்தான் அந்தப் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஹே... பாடல் ஒன்று’, ‘அக்கரைச் சீமை அழகினிலே’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘என்னுயிர் நீதானே’என அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஸ்டீரியோவில் நனைத்து எடுத்திருந்தார் ராஜா.

குறிப்பாக ‘டார்லிங் டார்லிங்’பாடலில் இரண்டு ஸ்பீக்கர்களில் ஒன்றில், ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ’என்ற குரல் இடப்புறமும் ‘ ஐ லவ் யூ...லவ் யூ... லவ் யூ’ என்று வலப்புறமும் மாறி ஒலித்தபோது ரசிகர்கள் வியந்துபோனார்கள். வாத்தியங்களின் ஒலிகளும் இரண்டு வலது, இடது எனப் பிரித்து பதிவு செய்யப்பட்டிருந்ததில் அந்தப் பாடலின் இசை பரவலாக விரிந்து(widerness) ஒலித்ததில் இசையின் பிரம்மாண்டம் வெளிப்பட்டு ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. தமிழில் முதல் ஸ்டீரியோ இசைப்பதிவு எப்படி இருந்தது என இப்போதும் அதை அனுபவிக்க, ‘டார்லிங் டார்லிங்’ பாடலை ஹெட்போன் பயன்படுத்திக் கேட்டுவிட்டு கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஸ்டீரியோ வந்த பிறகு மோனோ முழுவதுமாகக் கடந்துசென்றுவிட்டது. பாடல்பதிவு முடிந்ததும் புல்லாங்குழல் ஒலியைக் கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமே, தபலா ஒலியைக் கொஞ்சம் குறைத்திருக்கலாமே என இசையமைப்பாளருக்குத் தோன்றலாம். இது பாடல் பதிவுக்கு முன்பே தோன்றியிருந்தால் அனலாக் மிக்ஸர் கருவியில் குறிப்பிட்ட வாத்தியங்களின் ஒலியை ஏற்றி, இறக்கி வைத்துக் கொள்வதன்மூலம் தேவையான மாற்றங்களைச் செய்வதில் சிக்கல் இருக்காது.

ஆனால், மோனோ, ஸ்டீரியோ எதுவாக இருந்தாலும் ஒலிப்பதிவின்போது ஒரு பாடல் பதிவுசெய்யப்பட்டுவிட்டால் அதன் பிறகு எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. காரணம் ‘டைம் கோட்’ என்ற சிக்கல் இருந்தது. இந்த இடத்தில்தான் கணினி இசையின் வரங்களில் ஒன்றாக இருக்கும் ‘மல்டி ட்ராக்’ டிஜிட்டல் ஒலிப்பதிவு வரமாக வந்துசேர்ந்தது.

உங்கள் பாடலைப் பதிவுசெய்துமுடித்த பின் பலமுறை போட்டுக் கேட்கிறீர்கள்; இந்த இடத்தில் புல்லாங்குழல் தூக்கலாக ஒலிக்க வேண்டும் என்று உணர்ந்தீர்கள் என்றால், புல்லாங்குழல் இசையைப் பதிவு செய்திருக்கும் ஒலித்தடத்தை மட்டும் தேர்வு செய்து, குழல் இசையைக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்க நினைத்தீர்களோ அதைச் செய்து இசையை மேலும் அழகாக ஒலிக்கச் செய்ய முடியும். மேலும் மலைத்தொடரில் உங்கள் பாடல் பட்டுத் தெறித்து, உங்கள் செவிகளைத் தழுவுதல் போன்ற (Reveb, delay and echo) ஒலியனுபவ உணர்வைக் கொடுக்க முடியும்.

அதேபோல் தேவைக்கு அதிகமாக ஒலிக்கும் வாத்தியத்தையும் அது பதிவாகியிருக்கும் ஒலித்தடத்துக்குச் சென்று ‘செலக்ட் செய்து’, அதைக் குறைக்க முடியும். ஒரு வாத்தியக் கலைஞர் மட்டும் சுருதி சேராமல் இருந்தால், அதைச் சரி செய்யலாம். அதேபோல் பாடகர்களும் சுருதி பிசகியிருந்தால் அதையும் தனியாகச் சரிசெய்யலாம். இத்தனை திருத்தங்கள் செய்யக் கணினித் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

உங்கள் இசையின் எந்த ஒலித்தடத்தை மிக அழகாகச் செதுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த ஒலித்தடத்தை உங்களது சவுண்ட் இன்ஜினீயருடன் இணைந்து, அவருடன் உட்கார்ந்து அதை முடிவு செய்யலாம். இதைத்தான் நாங்கள் இசைக் கலவை (Mixing in music) என்கிறோம்.

இசைக் கலவை எனும்போது இசையமைப்பாளரின் படைப்புத் திறனை உணர்ந்து அதை இசைக் கலவையில் சாத்தியப்படுத்துபவர்தான் இசையாக்கத்தில் பணியாற்றும் சவுண்ட் இன்ஜினீயர். இந்த இடத்தில் ஒலி வடிவமைப்பாளர் (Sound designer), சிறப்புச் சந்தங்களை சேர்ப்பவர் (sound effects) ஆகிய கலைஞர்களுக்கும் சவுண்ட் இன்ஜினீயர்தான். ஆனால், இவர்களை இசையாக்கத்தில் பணியாற்றும் சவுண்ட் இன்ஜினீயருடன் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. இவருக்கு இசையின் நுட்பமும் அதன் உயிரோட்டமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

இசைப் பதிவில் இவர் இயந்திரத்தனமாகச் செயல்பட முடியாது, இசையமைப்பாளரின் இசை மனதைப் புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு படைப்பாளி என்றே இவரைக் கூறினால் அதில் தவறில்லை. இதற்கு இசையமைப்பாளருடன் அவர் நீண்ட காலமாகப் பயணம் செய்து வந்தவராக இருக்க வேண்டியது மிக அவசியம்.

சவுண்ட் இன்ஜினீயர் என்பவர் திரைப்படத்தின் கதைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்போல் இருக்க மாட்டார். இசையமைப்பாளரைப் போலவே அவரும் கதையில் தோய்ந்து பணியாற்றுவார். இசைப் பதிவில் சின்னச் சின்ன அடிப்படையான விஷயங்களைக்கூட இவர் தனது அனுபவம் வழியாகக் கற்று வைத்திருப்பார். உதாரணமாக ஒலிப்பதிவுக் கூடத்தில் லைவ் இசையைப் பதிவுசெய்யும்போது, ஒரு குறிப்பிட்ட இசைக் கருவியின் அசலான ஒலியைச் சேதாரம் இல்லாமல் கேப்சர் செய்ய, அதன் அருகில் எப்படி மைக்கை வைக்க வேண்டும் (Mike position) என்பது அவருக்கு மிகத் துல்லியமாகத் தெரிந்திருக்கும்.

அதேபோல் எந்த வாத்தியத்துக்கு எவ்வளவு வால்யூம் வைத்துப் பதிவு செய்தால் அதன் அசல் தன்மை அப்படியே இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். இவை எல்லாமே அனுபவத்தில் வரக்கூடியவை. சவுண்ட் இன்ஜினீயரிங்- இந்தப் படைப்புத் திறன் மொத்தமும் ஒரு படத்துக்கான இசையை மாஸ்டரிங் செய்வதில் வெளிப்பட்டிருக்கும். அதைப் பற்றி அடுத்துப் பகிர்கிறேன்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

SCROLL FOR NEXT