திருவனந்தபுரம் சர்வதேசப் பட விழா
இந்தியாவின் புகழ்பெற்ற சர்வதேசப் படவிழாக்களில் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குத் தனியிடம் உண்டு. கேரள அரசின் சலச்சித்ர அகாடமி நடத்தும் 22-வது சர்வதேசப் படவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தொடக்க விழாச் சடங்குகள் நடத்தப்படவில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயனும் அமைச்சர் பாலனும் கலந்துகொள்ளவில்லை. மூத்த வங்காள நடிகை மாதவி முகர்ஜி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரஷ்ய இயக்குநர் அலெக்ஸாண்டர் சுக்ரூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, தென்கொரியா, தாய்லாந்து, கொலம்பியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 190 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேசப் போட்டிப் படங்கள், ‘இந்திய சினிமா இன்று’, ‘மலையாள சினிமா இன்று’, சர்வதேசப் படங்கள், நடுவர் படங்கள், சிறப்புப் படங்கள், மலையாளப் பெண் சினிமா எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. திரையிடலுக்காக மொத்தம் 14 திரையரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா, தமிழ்-மலையாள இயக்குநர் ஐ.வி.சசி, இந்தி நடிகர் ஓம்புரி உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டும் படங்கள் திரையிடப்பட்டன.
இந்தத் திரைப்படவிழாவில் பார்வையாளர்களுக்கான நுழைவுச் சீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இணையத்தில் விண்ணப்பிக்க திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பத்திரிகையாளர் நுழைவுச் சீட்டும் விண்ணப்பித்தவர்களுக்கே கிடைக்காததால் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், திரையிடலுக்கு வரும் அதிகப்படியான கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 60 சதவீத இருக்கை முன்பதிவிலும் 40 சதவீதம் முன்பதிவு செய்யாதோருக்காகவும் ஒதுக்கப்பட்டது.
இந்தத் திரைவிழாவின் தொடக்கப் படமாக ‘த இன்சல்ட்’ என்னும் பிரெஞ்சு, லெபானியப் படம் திரையிடப்பட்டது. லெபனான் கிறிஸ்தவருக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய அகதிக்கும் இடையிலான அடையாளச் சிக்கலைப் பற்றிய இந்தப் படம் திறந்தவெளி பொருளாதாரத்தால் சிக்கலாகியிருக்கும் பல இனங்களுக்கும் பொருத்திப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், பல முடிவுகளைக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குச் சிறு அயர்ச்சியைக் கொடுத்தது.
சொர்ண சகோரம் விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவில் இந்த முறை, அர்ஜெண்டினா, கத்தார், கஜகஸ்தான், மங்கோலியா, தாய்லாந்து, துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த படங்களுடன் நான்கு இந்தியப் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றுள் பொம்கிரனைட் ஆர்சார்டு என்ற அசர்பய்ஜனிய (azerbaijani) படம் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. இது ரஷ்ய இலக்கிய மேதையான ஆண்டன் செக்காவின் ‘செர்ரீப் பழத் தோட்டம்’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ‘காட்வி ஹவா’ (kadvi hawa) மழை பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாடுகளைக் குறித்த இந்தப் படம் ஏற்கெனவே தேசிய விருது பெற்றுள்ளது. ‘ஐ எம் கலாம்’ மூலம் கவனம் பெற்ற நிலா மத்ஹாப் பாண்டேவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படமும் கவனம் பெற்றது.
ஈரானிய இயக்குநர்கள் அப்பாஸ் கியரோஸ்தமி, மஜித் மஜிதி வரிசையில் அலி காவிட்டன் இயக்கியுள்ள ‘ஒயிட் பிரிட்ஜ்’ கவனத்தை ஈர்த்த படம். பள்ளி திறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்தால் ஊனமாகும் சிறுமியைக் கல்வி அமைச்சகம் சிறப்புப் பள்ளிக்கு மாற்றுகிறது. சிறுமிக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், சட்டத்தைக் காட்டி அரசு மறுக்கிறது. அதே பள்ளியில் கல்வியைத் தொடர தாயும் மகளும் போராடுவதே இதன் மையம்.
மலையாளப் படமான ‘ஏதன்’ படத்துக்குப் பார்வையாளர்களின் மத்தியில் வரவேற்பு இருந்தது. மிக நெருக்கமாக இருக்கும் இருவருக்கு இடையில் இருக்கும் விரோதத்தை இந்தப் படம் சித்திரித்துள்ளது. ‘சாத்தான் இல்லையென்றால் கடவுளின் தோட்டத்தில் நாகரிகம் இல்லை’ என்பதுதான் இதன் மையம். மிகுந்த பொறுமையைச் சோதிக்கும் இந்தப் படம் படைப்பாற்றல் மிக்க படமாக வெளிப்பட்டுள்ளது. இவை அல்லாது புகழ்பெற்ற இந்திப் படமான ‘நியூட்ட’னும் ‘ரண்டுபேர்’ என்னும் மலையாளப் படமும் கவனம் பெற்ற படங்களாக இருந்தன.
இளைஞர் காரல் மார்க்ஸ்
உலக சினிமா பிரிவில் திரையிடப்பட்ட காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ படமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் கேரளப் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விவாகரத்துப் பெற்ற தம்பதியர் இருவரும் வெவ்வேறு வாழ்க்கைக்குச் செல்ல அவர்களது பிள்ளை அநாதையாக்கப்படும் சமகாலச் சிக்கலைப் பேசும் ரஷ்யப் படமான ‘லல்லெஸ்’ என்னும் படமும் விமர்சகர்களின் பாரட்டைப் பெற்ற படமாக இருந்தது.
கோவா இந்தியத் திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘120 பீட்ஸ் பெர் மினிட்’ படம் இங்கே போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்றாலும் சர்வதேசப் பிரிவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்வையாளர்கள் தேடிச் சென்று பார்த்தனர். சிரியப் போர் தொடர்பான ‘இன் சிரியா’ படமும் சர்வதேசப் பிரிவில் கவனம் பெற்றது.
இந்திய சினிமா பிரிவில் மராத்தியப் படமான ‘கச்சா லிம்பு’ம் (kachcha limbu) அஸ்ஸாமியப் படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படமும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. மலையாளப் பிரிவில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் இயக்கிய ‘கருத்த யூதன்’ படத்துக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. கேரளத்தில் எஞ்சியிருந்த யூதர்களைப் பற்றிய இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பிரிவில்தான் கோவா திரைப்பட விழாவில் விருது வென்ற ‘டேக் ஆஃப்’ படமும் திரையிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த விழாவின் படங்கள் ஏமாற்றம் அளித்ததாகச் சொல்லப்பட்டது.
சர்வதேசத் திரைவிழாக்களில் விருதுபெற்ற படங்களைத் தேடிப் பார்த்தவர்கள் இம்மாதிரியான அனுபவம் கிடைத்தது. எதிர்பார்ப்பில்லாமல் சென்ற சில படங்கள் சிறந்த அனுபவத்தைத் தந்தன எனத் திரைவிழாப் பார்வையாளர்கள் சிலர் பகிர்ந்துகொண்டனர். இந்த மனநிலையால் வெற்றி பெறப் போகும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பெரிதாகப் பார்வையாளர்கள் மத்தியில் இல்லை.
இந்தத் திரைப்பட விழாவில் நள்ளிரவுத் திரையிடல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் நிஷாகந்தி திறந்த வெளி அரங்கத்தில் நள்ளிரவுத் திரையிடல் நடந்தது. தென்கொரியத் திகில் படமான ‘சத்தான் ஸ்லேவ்’ இந்த நள்ளிரவுத் திரையிடல் பிரிவில் திரையிடப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
சொந்த மண்ணிலும் திரையிடல் இல்லை!
கோவா திரைப்பட விழாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்ட மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரனின் ‘எஸ் துர்கா’, மராத்திய இயக்குநர் ராஜீவ் ஜாதவின் ‘நியூடு’ ஆகிய இரு படங்களும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘நியூட்’ திரையிடலுக்காக அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. ஆனாலும், முறையான தணிக்கைச் சான்றிதழ் இல்லை எனத் திரையிடப்படவில்லை. போட்டிப் பிரிவுக்கு விண்ணப்பிக்கப்பட்ட ‘எஸ் துர்கா’ மலையாள சினிமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சனல்குமார் அதைத் திரும்பப் பெற்றார். பிறகு கேரள சலச்சித்ர அகாடமியே விருப்பத்தின் பேரில் திரையிடலுக்கான அழைப்பு விடுத்தும் ‘எஸ் துர்கா’ திரையிடப்படவில்லை. திரையிடப்படாமலே இந்த இரு படங்களும் அதிகம் விவாதிக்கப்பட்ட படங்களாக இருந்தன.