ச
ல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஏக் தா டைகர்’ படத்தின் தொடர்ச்சியாக ‘டைகர் ஸிந்தா ஹை’ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகவிருக்கிறது. டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ‘ஸ்வாக் சே ஸ்வாகத்’, ‘தில் தியான் கல்லான்’ என்ற இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இதில் ‘தில் தியான் கல்லான்’ பாடல், விஷால்-சேகர் இசையில் அதிஃப் அஸ்லாம் குரலில் சிறப்பான காதல் கீதமாக ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் ஆஸ்திரியாவின் அழகான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. யூடியூப்பில் கடந்த வாரம் வெளியான இந்தப் பாடலை 1.5 கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றனர். இந்தப் பாடலில் உறைந்த நதியில் சல்மான் கத்ரீனாவின் உருவத்தை வரையும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.
அலி அப்பாஸ் ஸஃபர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், 2014-ம் ஆண்டு, ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் ஈராக்கில் 46 செவிலியர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
- கனி