ஒன்று துதிபாடும் விழாவாக இருக்கும்; அல்லது துயரக் குரல்களின் சேர்ந்திசை ஒலிக்கும். கோலிவுட்டில் இன்றைய திரைவிழாக்களின் வண்ணம் இவ்வளவுதான். இதைத் தாண்டிச் சில விழாக்கள் மொத்தமாய் நம்மை வாரிச் சுருட்டி இழுத்துக்கொள்ளும். சமீபத்தில் அப்படி ஒரு பொன்மாலைப் பொழுதாக விரிந்த விழா; ‘மணல் நகரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.
இசை வெளியீட்டு விழா இத்தனை நெகிழ்ச்சியூட்டும் விழாவாக இருக்குமா? மணல் நகரம் படத்தின் விழா அப்படித்தான் இருந்தது. அதற்குக் காரணம் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிசயம்.
யதார்த்தமான காதல், மசாலா காதல் எதுவாக இருந்தாலும் அதில் கமலையும் ரஜினியையும் பொருத்திச் சொன்னால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றிருந்த 80களில் அதை அப்படியே புரட்டிப்போட்ட படம்தான் ‘ஒருதலை ராகம்’. அந்தப் படம் தந்த பாதிப்பில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் தாடி வளர்த்துக்கொண்டு, பெல்பாட்டம் பேண்ட் அணிந்து ‘நானொரு ராசியில்லா ராஜா’ என்று பாடிக்கொண்டிருந்தார்கள். டி. ராஜேந்தர் இயக்குநராக அறிமுகம் ஆன அந்தப் படம் வெளிவந்து 34 ஆண்டுகள் ஓடிவிட்டன.
படத்தின் டைட்டிலில் இயக்குநர் என்ற இடத்தில் ராஜேந்தர் பெயர் இடம் பெறாமல் போனது. ஆனால், தான்தான் அந்தப் படத்தை இயக்கியவன் என்பதை அடுத்தடுத்து வரிசையாக எட்டு வெற்றிப் படங்கள் கொடுத்து நிரூபித்துத் தன் உழைப்பால் உயர்ந்தார் டி.ஆர்.
டி. ராஜேந்தர் தலைமையில் ஒருதலை ராகம் படக்குழுவை ஒட்டுமொத்தமாகத் திரட்டியிருந்தார்கள் ’ மணல் நகரம்’ படக்குழுவினர். இவர்களுக்கு ஏன் இந்தப் படத்தின் மீது இத்தனை அக்கறை?
ஒருதலை ராகம் மூலம் நவயுக தேவதாசாக தமிழ் ரசிகர்கள் அறிந்த அந்தப் படத்தின் நாயகன் சங்கர்தான் இந்த ‘மணல் நகரம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
நினைவு அடுக்குகளில் முதலில் நீந்தினார் ஒருதலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன்.
“34 வருஷத்துக்கு முன்னாடி ஷுட்டிங்ல ரூபாவைப் பார்த்தது. அதற்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன். இப்பவும் அப்படியேதான் இருக்கிறார்” என்று நெகிழ்ந்தார்.
“உங்களை நான் ராஜேந்திரன்னுதான் கூப்பிடுவேன். இப்பவும் அப்படியே கூப்பிடட்டுமா?” என்று அவர் மேடையிலிருந்த டி.ஆரிடம் கேட்க, “நான் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரே மாதிரிதான். தாராளமா கூப்பிடுங்க” என்று அரங்கு அதிர அனுமதி தந்தார் டி.ஆர்.
அதன் பிறகு மைக் பிடித்த டி.ஆர், “நான் ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கேன். என்னைப் பாட்டு பாடச் சொல்லாதீங்க. நான் பாட ஆரம்பிச்சா டண்டணக்கான்னு சொல்வாங்க. இப்ப கூத்தடிக்கிற நேரமில்ல” என்று பேச ஆரம்பித்தவர், நிஜமாகவே நெகிழ்ச்சியிலிருந்தார். “அந்தப் படத்தில் ரூபா மேடத்தைக் கடைசி வரைக்கும் பேசவே விடலன்னு சொன்னாங்க. அவங்க பேசியிருந்தா படம் அவுட்டாகியிருக்கும். காத்துக்கு ஏன் காத்துன்னு பேரு வந்திச்சு தெரியுமா? அது மேகத்தைக் காதலிக்குமாம். ஆனால் அந்த மேகத்தைத் தொடாமலே தள்ளி நிக்குமாம். அப்படிக் காத்துக் காத்து நிக்கறதாலதான் அதுக்கு காத்துன்னு பேரு. அப்படிதான் படத்துல ரூபாங்கிற மேகத்துக்காக ராஜாங்கிற காத்து காத்துக் கிடந்துச்சு” என்று தன் ஸ்டைலில் தொடர்ந்தார்.
“இன்னைக்கு ஒருதலைராகம் படத்தை எடுத்தா இப்படி எடுக்க முடியுமா? அவ பேச மாட்டாளான்னு வருஷக்கணக்குல காத்திருந்தான். லவ்வைச் சொல்லவே முடியாம தவிச்சுகிட்டு இருந்தான். ஆனால் இன்னைக்கு லவ் வந்ததும் அதை எஸ்.எம்.எஸ்.ல தட்டிவிட்டுர்றான். வாட்ஸ் அப்புலயே சொல்லிடுறான்” என நிகழ்காலத்துக்கு வந்தார்.
“இந்த படத்திற்காக 100 பாட்டுக்கும் மேல போட்ருந்தேன். 35 வருஷத்துக்கு முன்னாடி மயிலாடுதுறையில் இருக்கும் ஏ.வி.சி. கல்லுரியில் படப்பிடிப்பு நடத்தினேன். அதற்கப்புறம் அந்தக் கல்லூரி பக்கமே நான் போனதில்ல. ஆனால் ஒவ்வொரு முறை மயிலாடுதுறை போகும்போதும், அந்த காலேஜ் வாசலில் காரை நிறுத்தி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவேன்” என்றார்.
மணல் நகரம் இசை வெளியீட்டை முன்னாள் மாணவர்களின் சந்திப்பாக மாற்றிய படத்தின் இயக்குநர் சங்கர் அந்தப் படத்தில் என்ன வைத்திருக்கிறார்? “இது இன்றைய தலைமுறைக்கான சினிமா” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் ஒரே படத்தில் இளைஞர்களைப் பைத்தியமாக அடித்த இந்த நாயகன். கிடைத்த வாய்ப்பில் எல்லோருக்கும் விருது கொடுத்துக் கவுரவப்படுத்தினார்.
ஒரே படத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களை இழுத்துப் போட்ட ‘வாசமில்லா மலரிது, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது’ பாடல்கள் எல்லாமே எதிர்மறையான வரிகள்தான் என்றாலும்... நாயகனும் நாயகியும் கடைசி வரை நேரடியாகப் பேசிக்கொள்ளாத, ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாத அதிசயக் காதல் கதையின் படைப்பாளியான டி.ஆருக்கு அவர் பாணியிலேயே உருக்கமான கவுரவத்தைத் தந்துவிட்டார் சங்கர்.