ப
ல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று கவனம் ஈர்த்திருக்கும் ‘அருவி’ திரைப்படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இங்குள்ள சினிமா ஆர்வலர்களுக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்த திரையுலகினர், விமர்சகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் ஓர் அற்புதமான படம் என்று பாராட்டிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். அவருடன் உரையாடியதிலிருந்து...
‘அருவி’ –பெயர்க் காரணம்?
அருவி, இயற்கையின் அற்புதம். அது கடவுளின் அன்பைப் போல் பாரபட்சமற்றது. தன்னை நோக்கி வரும் உயிர்களின் பொருள், மதம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் தன் ஈரமான அன்பால் நனைக்க வல்லது. அப்படிப்பட்ட அருவியின் தன்மைகளே, இந்தப் படத்தின் மைய, பெண் கதாபாத்திரமான அருவியின் இயல்பும்.
‘அருவி’ கதாபாத்திரத்துக்கான உந்துதலை எங்கிருந்து பெற்றீர்கள்?
மனிதம் மற்றும் விடுதலை உணர்வு அதிகமிருக்கும் அனைத்து இளைஞர்களையுமே அருவி கதாபாத்திரத்துக்கான உந்துதலாகத்தான் பார்க்கிறேன்.
நாயகி அதிதி பாலனை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்தக் கதைக்கு வலிமையான, ஆளுமைமிக்க நடிகர் தேவை என்றுணர்ந்து தேடலைத் தொடங்கினோம். 2013 டிசம்பர் முதல் 2014 ஆகஸ்ட்வரை எட்டு மாதம் 600 பேருக்குமேல் எனத் தேடல் நீண்டது. சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து தேடினோம். சினிமாவுக்குச் சம்பந்தமில்லாத பலரையும் தேர்வில் பங்கேற்க வைத்தோம். அப்படித்தான் அதிதி பாலன் கிடைத்தார்.
படத்தின் சிறப்புத் திரையிடலைப் பார்த்தவர்கள் அவரது நடிப்பைப் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள், ஒரு புதியவரிடம் எப்படிச் சிறந்த நடிப்பைப் பெற முடிந்தது?
படம் வெளியாகும்வரை அதை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன். போலியான சினிமாக்கள் மீதான அதிருப்தி உணர்வே, எங்கள் குழுவில் உள்ள பலரையும் சினிமா உருவாக்கத்தில் ஈடுபடத் தூண்டியது. செயற்கையான நடிப்பு படத்துக்கு எந்த வகையிலும் உதவாது என்பதைப் பல படங்களில் பார்த்து உணர்ந்திருக்கிறேன். எனவே, நடிப்பவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு, நட்புணர்வோடு கதாபாத்திரங்களில் பயணிக்க வைத்தேன். அவர்களும் கதையின் தேவைக்கேற்ப அர்ப்பணிப்புடன் பங்களித்தார்கள். அதிதி பாலன் மட்டுமல்லாது பல முக்கிய நடிகர்கள் அருவியின் மூலம் அறிமுகமாக உள்ளனர்.
முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய பல விஷயங்களைக் கையாண்டிருப்பது ட்ரைலரிலேயே தெரிகிறதே?
மக்களின் மீது மிகுந்த அன்புடன் எழுதப்பட்டதே அருவியின் திரைக்கதை. வணிகமாக இருப்பினும், கலை மக்களுக்கானது. மக்கள் சார்ந்த அரசியலை நேர்மையுடன் வெளிப்படுத்துவதே எங்களின் பணி. படம் பேசும், ஆனால் அதிலிருக்கும் அன்பு சார்ந்த அரசியல் சர்ச்சையாகத் தோன்ற வாய்ப்பில்லை.
வித்தியாசமான இசையைப் படம் கொண்டிருக்கிறது, அது எப்படி நடந்தது?
இக்கதைக்கு அம்மாதிரியான இசைதான் தேவைப்பட்டது. அதை உருவாக்க, இரண்டு தெருப் பாடகர்கள் கபிர்தாஸ் பாடல்களின் மூலம் சரியான நேரத்தில் அறிமுகமானார்கள். பிந்து- வேதாந்த் தங்கள் இசையின் மூலம் ஒரு இணைக் கதைசொல்லியாகச் செயல்பட்டுள்ளனர்.
படத்தின் கதை கசிந்துவிடும், பலருக்குக் காண்பிப்பதால் படத்தின் மீது ஒரு எதிர்மறை பிம்பம் விழும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. இது மனிதம் போற்றும் சினிமா. மனிதநேயம் அனைவருக்குமானது. எவ்வித எதிர்மறை எண்ணங்களும் எழ வாய்ப்பில்லை என்பதைத் திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பில் புரிந்து கொண்டதால், துணிவுடன் திரையிட்டோம். படம் பார்த்தவர்கள் கதையை வெளியே சொல்லாததிலிருந்தே, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை உணர முடிகிறது.
தயாரிப்பாளரை எப்படிப் பிடித்தீர்கள்?
தயாரிப்பாளர்களுடனான உறவு ஒரு கணவன் - மனைவி உறவைப் போல இருக்கிறது. பணம் போடும் முதலாளிக்கான தோரணை கொஞ்சமும் எஸ்.ஆர்.பிரபுவிடம் கிடையாது. உயர்ந்த ரசனை கொண்ட, வியாபார நுணுக்கங்களை நன்கறிந்த ஒருவர் ‘அருவி’யைத் தயாரிக்க முன்வந்தது எங்கள் குழுவுக்கான வரம்.