இந்து டாக்கீஸ்

தரணி ஆளும் கணினி இசை 11: அனலாக் என்பது மண்பானை ருசி!

தாஜ்நூர்

டந்த கால நினைவுகள் எப்போதுமே இனிமையானவைதாம். பழைய பொருட்களை ரசிக்கிறோம், அவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். நமக்குமுன் வாழ்ந்த தலைமுறை உருவாக்கியதை ‘கிளாசிக்’ எனக் கொண்டாடுகிறோம். தற்போது ‘அனாலாக்’ முறைக்கும் இப்படியொரு மரியாதை கிடைத்து வருகிறது. இசையுலகில் இன்று எல்லாப் பணிகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. இருந்தபோதிலும், டிஜிட்டலின் ஒரு பகுதியாக ‘அனலாக்’ முறையை மீள் அறிமுகம் செய்து, அதிக விலைக்கு விற்கும் போக்கு தற்போது உருவாகி இருக்கிறது. பாரம்பரியமான விண்டேஜ் கலைப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதுபோல, டிஜிட்டலுக்குள் நுழைத்துத் தரப்படும் அனலாக் ஹார்டுவேர் இன்றைய தலைமுறையைக்கு ஓர் ஆச்சரியம்தான்.

அது என்ன அனலாக்? அனலாக் முறையில் இசையைப் பதிவு செய்யும்போது அலைகளாக (Wave signals), அதன் அசல் வடிவம் கெட்டுவிடாமல் பதிவுசெய்யப்படுகிறது. உதாரணமாக அனலாக் டேப் ரெக்கார்டரில் பதிவு செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒலிவாங்கி (Mike) மூலம் உள்வாங்கப்படும் இசை, அதன் அசல் தன்மையுடன் ஒரு வடம் (wire) வழியே அனலாக் அலையாகப் பயணித்து டேப்பில் பதிவாகிறது. இந்த இசையை அனலாக் அவுட்டாகக் கேட்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஒலிகளும் குரலும் சேதாரம் ஏதும் இல்லாத அதன் அசல் தன்மையால் வசீகரம் மிக்கதாக மாறுகின்றன.

ஆனால், டிஜிட்டல் இசை என்பது டேட்டாவாகப் பதிவுசெய்யப்படுகிறது. அதாவது பதிவுசெய்யப்படும் இசையானது, ஒரு வினாடிக்கு 44,000 எண்களாக (44,000 Hz samples per second -16 Bit)சேமிக்கப்படுகிறது. இதை ஒலிப்பதிவில் ஆடியோ சேம்பிள் மற்றும் பிட் ரேட் (Audio sample and bit Rate) என்று நாங்கள் கூறுவோம். இந்த அளவுதான் ஒலியின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு டிஜிட்டல் சிடியில் பயன்படுத்தப்படும் ஒலித்தரத்தின் அளவு இதுதான்.

இப்படிப் பதிவான இசையை நாம் கேட்கும்போது ஒரு வினாடிக்கு இதே அளவிலான எண்கள், மின்னழுத்த அலைகளாக(voltage wave) மாறி, நம் காதுக்கு இசையைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. நிர்ணயிக்கப்பட்டுப் பின்பற்றப்படுகிற இந்த சேம்பிள் மற்றும் பிட் ரேட்டை சில நவீன இசையமைப்பாளர்கள் இதைவிடச் சிறந்த தரம் வேண்டும் என்பதற்காகத் தன்னம்பிக்கையுடன் மீறியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் 44,000 Hz – 24 Bit என்ற அளவில் ஒலிப்பதிவு செய்வார்கள்.

ஆனால், இதையும் தாண்டி ஒலியின் தரத்தைக் காதலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற அதிநவீன இசையமைப்பாளர்கள் தொடக்கம் முதலே பெரும் பாய்ச்சலோடு 96,000 Hz 24 Bit என்ற அளவுக்குச் சென்று ஒலிப்பதிவு செய்கிறார்கள்.

இதற்குக் கணினியின் வேகமும் பதிவகத்தின் உள்வாங்கும் வேகமும்(Processer and Hard disk speed) மிக உயர்ந்த திறன் கொண்டிருந்தால் மட்டுமே இந்த அதிரடியான அளவுமுறையில் பதிவு செய்ய முடியும். ப்ளூ ரே டி.வி.டியில் தற்போது இந்த அளவில்தான் டிஜிட்டல் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.

ஊடாடும் உயிரோட்டம்

இப்படி 2010-லிருந்து முழுவதும் டிஜிட்டலாக மாறிவிட்டோம். மிகக் குறுகிய காலத்தில் இசையுலகம் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சியின் அதிவேகத்தில் அனலாக்கை நாம் மறந்துபோய்விட்டோம். இப்போது அதை டிஜிட்டல் உலகமே அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது; இதுவும் பணம் சம்பாதிக்கும் உத்தியா என நீங்கள் நினைக்கலாம். காரணம் அதுவல்ல. ஒலியின் ‘உயிர்’த்தன்மையில் உணரப்பட்டிருக்கும் வேறுபாடுதான்.

டிஜிட்டல் ஒலிப்பதிவுமுறை எந்தவகையில் எல்லாம் சிறந்தது என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முன்னால் வந்து நிற்கக்கூடியது அதன் ‘எளிமை’. அடுத்து, குறைவான நேரம் மற்றும் செலவு. நமக்கு எத்தனை ஒலித்தடங்களில் (Tracks) தேவையோ அத்தனை ஒலித்தடங்களில் நிறைவான, துல்லியமான ஒலிப்பதிவு செய்துகொள்ளும் வசதி போன்றவற்றைக் கூறலாம். ஆனால், அனலாக் ஒலிப்பதிவு முறையில் ‘உயிர்’ இருக்கும். நாம் உருவாக்கிய இசையின் அசலான தன்மை கொஞ்சம்கூடச் சேதாரம் ஆகாமல் அப்படியே கிடைக்கும்.

01CHRCJ_KARTHIK_RAJA கார்த்திக் ராஜா

ஒரு மார்பிள் சிலையில் இருக்கும் பளபளப்பும் கவர்ச்சியும்தான் டிஜிட்டல் இசை என்றால் களிமண்ணில் செய்து சூளையில் சுட்ட கலையழகு மிக்க ‘டெரகோட்டா’ சிற்பம்தான் அனலாக். ஒரு உலோகப் பாத்திரத்தில் செய்யப்படும் சமையலை விரைவாகச் சமைத்துவிடலாம். அதில் சுவைக்கும் குறைவிருக்காது.

ஆனால், மண் சட்டியில் செய்யப்படும் உணவின் இயற்கை ருசிக்கு எது ஈடாகமுடியும்? உயிருள்ள ஒரு புல்லாங்குழல் கலைஞன் ‘லைவ்’ ஆக வாசிக்கும்போது கேட்பதற்கும், அதே புல்லாங்குழல் இசையை கீ போர்டு வழியே வாசிக்கும்போது கேட்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறோமோ அதுதான் அனலாக் – டிஜிட்டலில் நாம் பெற்றுக்கொள்வது. டிஜிட்டலில் பல வசதிகள் கிடைத்ததால் இந்த ‘உயிர்’த் தன்மையை மறந்து வெகுதூரம் வந்துவிட்டோம்.

இந்தச் சூழ்நிலையில் அனலாக் முறையில் பதிவுசெய்யப்பட்ட இசையைக் கேட்கும்போது அதன் ‘ஒரிஜினல்’ தன்மையால் கிடைக்கும் ‘உயிரோட்டம்’ டிஜிட்டலில் குறைவாக இருப்பதைத் தற்போது கண்டுகொண்டதால், இதை எப்படியாவது டிஜிட்டலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற முயற்சியால்தான் இன்று டிஜிட்டலுக்குள் அனலாக் ஒரு ஹார்டுவேராக வந்து கம்பீரமாக அமர வந்துவிட்டது.

டிஜிட்டல் முறையில் உருவான உங்கள் இசையின் ஒரு பகுதிக்கு மட்டும் அனலாக்கின் உயிர்த் தன்மையைத் தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்போது உங்கள் இசையை டிஜிட்டல் இன்புட்டாக உள்ளே செலுத்தி, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அனாலாக் பகுதிக்குள் அனுப்பினால், அங்கு நடக்கும் செயல்முறையால் அது அனாலாக் இசையாக விரிந்து, கேட்பவரை மிகநெருக்கமான உணரவைக்கும் அதன் உயிரோட்டத் தன்மை(warmness) மாறாமல் அதேநேரம் ஒலிப்பதிவில் மீண்டும் டிஜிட்டல் அவுட்புட்டாகவே நீங்கள் வெளியே எடுத்துக்கொள்ளலாம்.

அனலாக் இசை மறக்கப்பட்டதற்கு அதன் சில குறைகளும் காரணம். அனலாக் இசை அலையாகப் பயணித்து தன்னைப் பதிவு செய்துகொள்ள வடத்தை (wire) ஊடகமாகக் கொண்டிருப்பதால், அதில் கடத்தியாகப் பயன்படும் மின்சாரத்தால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மின்சாரத்தின் குறைந்த, உயர் அழுத்தம், ‘எர்த்’ சரியாகச் செய்யப்படாதது போன்ற காரணங்களால் ‘ம்ம்ம்ம்ம்ம்ம்…’ என்ற ஒலியும் சேர்ந்து பதிவாகிவிடும். அதேபோல பிளக்குகளை செருகும்போதும் பிடுங்கும்போதும், நகர்த்தும்போதும் எழும் ‘கிளிச்’ என்ற ஒலியும் சேர்ந்தே பதிவாகும்.

இப்படி உபரியாகப் பதிவாகும் தேவையற்ற, எரிச்சலூட்டும் ஒலிகளை வடிகட்டிவிட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால், அனலாக்கில் அப்படி முடியாது. இந்த இடத்தில் டிஜிட்டல் இசை சார்ந்த கணினித் தொழில்நுட்ப அறிவும், இசை ஞானமும் உள்ள இசையமைப்பாளர்களால் ஒலித் தரத்தில் மிகச் சிறந்த உயரத்தை எட்ட முடிகிறது. இப்படி ஒலித் தரத்தில் இணையற்ற இரண்டு தமிழ் இசையமைப்பாளர்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானையும் கார்த்திக் ராஜாவையும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

01chrcj_noor தாஜ்நூர்right

சிறந்த கற்பனை வளம் கொண்ட இசையமைப்பாளர்கள் பலருக்கும் டிஜிட்டல் இசை, கணினி அறிவு போதுமான அளவு இருப்பதில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் தங்களை அப்டேட் செய்துகொள்ளவும் நினைப்பதில்லை. எல்லாவற்றையும் நமது சவுண்ட் இன்ஜினீயர் பார்த்துக்கொள்வார் என்று இருந்துவிடுகிறார்கள். இசையமைப்பாளருக்கும் சவுண்ட் இன்ஜினீயருக்குமான உறவு என்ன, அல்லது ஒரு இசையமைப்பாளரே சவுண்ட் இன்ஜினீயரின் இடத்தை நிரப்ப முடியுமா?

தொடர்ந்து பகிர்வேன்…
தொடர்புக்கு tajnoormd@gmail.com

SCROLL FOR NEXT