இந்து டாக்கீஸ்

’காதல்’ தண்டபாணி: தற்செயலான ஆச்சரியம்

ஆனந்த் செல்லையா

கரகரத்த குரலும், இறுக்கமான முகமும், வெள்ளை வேட்டி சட்டை தோற்றமும் கொண்ட அவரது ஆளுமை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானது.

நம்மைச் சுற்றி வலம்வரும் மனிதர்களைச் சில திரைப்படங்களோ சிறுகதைகளோ அப்படியே பிரதிபலிக்கும்போது, ‘வழக்கமாகப் பார்ப்பதுதானே’ என நம்மால் எளிதாகக் கடந்து போய்விட முடியாது. பெரும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்படும். அந்த மனிதர்களை ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் சந்தித்திருப்போம். ஆனால் எல்லோருக்குமான பொதுவான அனுபவத்தைக் கொடுப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ திரைப்படம் இப்படியான அநேக மனிதர்களை நம் நினைவுக்குக் கொண்டுவந்தது. அதுவும் ஐஸ்வர்யாவின் (சந்தியா) அப்பா கதாபாத்திரம் படம் பார்த்தவர்களை வெகு நேரம் தொந்தரவு செய்துகொண்டிருந்திருக்கும். அம்மைத் தழும்பு முகத்துடன் ராஜேந்திரன் என்னும் அந்தக் கதாபாத்திரத்தில் தோன்றிய அறிமுக நடிகர் தண்டபாணி அதற்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருந்தார்.

ஊர்ப் பெரிய மனுஷன், பிராந்திக் கடை உரிமையாளர், சாதிப் பற்று கொண்டவர், மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பா எனப் பல பரிமாணங்களை அந்தக் கதாபாத்திரம் படத்தில் வெளிப்படுத்தியிருக்கும்.

திரைப்படங்களில் ஏற்கனவே நாம் பார்த்துப் பழகிய சில முகங்களே இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும். அவர்கள் சிறப்பாகவும் நடித்திருக்கலாம். ஆனால் தண்டபாணி போன்றவர்கள் மூலம் நமக்குக் கிடைத்த அசலான மண் மணம் கொண்டவர்கள் சார்ந்த அனுபவத்தை இழந்திருப்போம்.

காதல் படம் திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் புதிய அலையை ஏற்படுத்தியது. அதையொட்டி, தண்டபாணி குறித்தும் சிறு பேட்டிகள், குறிப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவர் நடிப்பு சார்ந்த எந்தப் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை. திண்டுக்கல் வட்டாரத்தில் ஏதோ கடை நடத்திக்கொண்டிருந்தவரை என்ன நம்பிக்கையில் நடிக்க வைத்தாரோ இயக்குநர்? அவருக்கு என்ன நம்பிக்கை ஊட்டினாரோ? மரத்தைப் பார்த்த உடனே முடிவெடுத்துவிடுகிற தச்சன் போல் பாத்திரத் தேர்வுகளில் ஓர் இயக்குநர் செயல்பட வேண்டும்போல. அந்தத் திறமையைக் காதல் படத்தில் பாலாஜி சக்திவேல் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.

‘காதல்’ படத்திலோ அதற்குப் பிறகோகூடத் தண்டபாணியை நடிக்க வைக்க இயக்குநர்கள் சிரமப்பட்டிருக்கலாம். ஆனால் திரையில் தண்டபாணியின் முகபாவமும் உடல் மொழியும் தேர்ச்சி பெற்ற நடிகருக்குரிய இயல்புடன் இருக்கும். காதல் படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கட்டப்பஞ்சாயத்துக் காட்சியின் ஆரம்பத்தில் அவர் காட்டும் நிதானம், “உன்னை நம்பித்தான் அவங்க வீட்டுப்பொண்ணை அனுப்பி வச்சாங்க, அவங்களுக்குத் துரோகம் பண்ணலாமா?” என்று ‘ஒரு தலைப்பட்ச தர்மம்’ பேசுவது இயல்போடும் உயிர்ப்போடும் இருக்கும்.

பாலாஜி சக்திவேல் போட்டுக்கொடுத்த பாதையைத் தண்டபாணி அப்படியே பற்றிக்கொண்டார். வெள்ளை வேட்டி சட்டையே நிரந்தர உடையலங்காரமாக ஒதுக்கப்பட்ட நடிகர்களில் அவரும் ஒருவர் ஆனார். “எடுறா வண்டிய, அவனைப் போட்டுத்தள்ளுங்கடா, கீழே போடுறா அரிவாள” போன்ற வசனங்கள் படத்தில் இடம்பெற்றால், தண்டபாணிக்குப் போகத்தான் மீதி. ஆனால் அதை வைத்துக்கொண்டே அவரால் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்ட முடிந்தது. பெரிய தாதாக்களிடையே நடக்கும் மோதலில் பரிதாபமாக உயிரிழக்கும் பெரியவர், வீட்டில் இருந்துகொண்டே இம்சை கொடுக்கும் வடிவேலுவுக்கு மாமானார் எனத் தேவையான இடங்களில் நெளிவுசுளிவுகள் காட்ட தண்டபாணியால் முடிந்தது.

இன்னும் பல பரிமாணங்கள் கொண்ட பாத்திரங்களில் தண்டபாணி நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். அவரும் அதற்காகப் பெரிதாக மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. படம் பண்ணத் தன்னைத் தேடி வருகிறவர்களிடம் ‘முடியாது’ என்ற பதிலைக் கூடிய மட்டும் தவிர்த்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டிய கட்டாயம் புதுமுகங்களைத் தேடிச் செல்ல வைக்கிறது. பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குநர்கள் அத்தகைய தேடல்களை மேற்கொள்ளும்போது, தண்டபாணி போன்ற தற்செயலான, ஆச்சரியகரமான நடிகர்கள் நமக்குக் கிடைக்கிறார்கள்.

SCROLL FOR NEXT