ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரியும் ஒரு பெண்மணி. கல்லூரிக்குச் செல்லும் அவருடைய மகன். மகனைக் குறித்த ஏகப்பட்ட கனவுகளோடு இருக்கும் அந்தத் தாய்க்கு, தன்னுடைய மகன் தன்பாலின ஈர்ப்புள்ளவர் என்னும் உண்மை தெரியவரும்போது, நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் ‘என் மகன் மகிழ்வன்’ (மை சன் இஸ் கே) படத்தின் கதை. நடந்துமுடிந்த 15-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுப் பார்வையாளர்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
“ சாதாரண ஒரு ஆணுக்கு என்னை மாதிரி தன்பாலின ஈர்ப்புள்ள ஒருவரைத் திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைத்தாலும் இருக்கும். பிகாஸ், ஐயம் எ கே பர்சன்!” என்று படத்தில் முதன்மைப் பாத்திரம் பேசும் வசனம், சமூகத்தில் இப்படிப்பட்டவர்களும் மனிதர்கள்தாம், அவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள் என்னும் கோரிக்கையை மறைமுகமாக உணர்த்துவதுபோல் இருந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ், சமூக உளவியலையும் தனிமனித உளவியலையும் தனது கதாபாத்திரங்கள் மூலம் எளிதாக உணரச்செய்துவிடுகிறார். தன்பாலின உறவாளருக்கும் அவர்களைக் குறித்து சமூகம் உருவாக்கியிருக்கும் பிம்பத்தையும் இந்தப் படத்தின் மூலம் பக்குவமாக உடைத்தும் இருக்கிறார்.
“என் மகன் இப்படின்னு தெரிஞ்சிருந்தா கருவிலேயே கலைச்சிருப்பேன்” என்று பேசும் நாயகனின் அம்மா கதாபாத்திரத்தின் வழியாக, புரிதலற்று அறியாமையில் இருக்கும் சமூகத்தை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறார் இயக்குநர்.
இந்தக் கதைக்கு இணையாகத் தன்பாலின உறவாளனாக இருக்கும் தங்களது மகனை ஏற்றுக்கொள்ளும் ஒரு பெற்றோரையும் இயக்குநர் சித்தரித்திருப்பது விதிவிலக்காகப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
நாயகனின் தாயாக நடித்த அனுபமா குமார், மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை எனத் தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் நேர்த்திக்கு உதவி இருக்கின்றன.
- ச.ச.சிவ சங்கர்