இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: ஓவியா இருக்கிறார்!

செய்திப்பிரிவு

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கிடைத்த கவனத்துக்குப் பிறகு ‘ஓவியாதான் எங்கள் படத்தின் கதாநாயகி’ என்று கோலிவுட்டில் பலரும் கூவினார்கள். ஆனால், விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தில் மட்டும்தான் ஒப்பந்தமானார். பிறகு, ராகவா லாரன்ஸுடன் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தில் ஒப்பந்தமானார். இந்தப் படத்திலிருந்து ஓவியா விலகிவிட்டார் என்று செய்தி வெளியானதை அடுத்து, அது பொய்யான தகவல் என்று படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இதி நா லவ் ஸ்டோரி’ என்ற தெலுங்குப் படத்தில் தருண் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

வித்தியாச விழா

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘வேலைக்காரன்’. டிசம்பர் 22-ம் தேதி வெளியாகவிருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் வித்தியாசமாக நடத்தப்பட்டது. குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் சாப்பாட்டுக்கடை நடத்தும் பெண்மணி, விளிம்புநிலைக் குழந்தைகளுக்காகச் சிறப்புப் பள்ளி நடத்தும் பெண்மணி, ஆட்டோவை நடமாடும் நூலகமாக்கிய இளைஞர், மோர் விற்பனை செய்யும் முதியவர், ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவிடும் நபர் என மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றுவரும் ஏழு எளிய மனிதர்களை அழைத்து அவர்களை மேடையில் கவுரவித்து அவர்களையே படத்தின் இசையை வெளியிடச் செய்து ஆச்சரியப்படுத்தினார்கள்.

மகேஷ்பாபுவின் ‘பிரம்மோற்சவம்’

மகேஷ்பாபுவின் நேரடித் தமிழ்ப் படமான ‘ஸ்பைடர்’ முதலுக்கு மோசமில்லை என்ற விதத்தில் தலை தப்பிவிட்டது. இதையடுத்து மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிரம்மோற்சவம்’ தமிழில் ‘அனிருத்’ என்னும் தலைப்பில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். பிரபலத் தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கும் இந்தப் படம், ‘ தனது உறவுகள் பசித்திருக்கும்போது அடுத்தவர்களுக்குத் தானம் செய்வதைவிட மோசமான செயல் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை ஒருவரிக் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் சென்டிமென்ட் படமாம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ‘எந்திரன்’ பட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

08chrcj_oviyarightசரவெடி சரவணன்

‘நாரதன்’ படத்தைத் தொடர்ந்து நகுல் நடித்து முடித்திருக்கும் படம் ‘செய்’. இதில் ‘சரவெடி’ சரவணன் என்ற முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நகுல். மலையாளத்தில் வரிசையாக நான்கு வெற்றிப் படங்களை இயக்கிய ராஜ்பாபு இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். நாசர், பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஆஞ்சல். சந்திரிகா ரவி ஆகிய இரண்டு புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாக இருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பொறுப்பாளர்

தனுஷ் ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பக்கீர்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துவருகிறார். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் ஆங்கிலப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஒரு விளைட்டுத்தனமான இளைஞனைப் பற்றிய கதை இது. தற்போது நெப்போலியன் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் ஹாலிவுட் படத்தில் அருங்காட்சியகப் பொறுப்பாளராக நடித்துவருகிறார். அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் டெல் கணேசன் என்னும் இந்தியர் தயாரிக்கும் நேரடி ஹாலிவுட் திரைப்படம் இது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் குற்றச் சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் ஹாரர் வகைக் கதை. இதை எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்கிவருகிறார்.

SCROLL FOR NEXT