இந்து டாக்கீஸ்

வேட்டையாடு விளையாடு 07: பாடல் படப்பிடிப்பில் புதுமை

ஷங்கர்

1. பாடல் படப்பிடிப்பில் புதுமை

மிழ் சினிமாவில் மறக்கடிக்கப்பட்ட மேதைகளில் ஒருவர் ராம்நாத். அவரது இயக்கத்தில் 1950-ல் வெளிவந்த படம் ‘ஏழை படும் பாடு’. புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹூஹோவின் ‘லெஸ் மிஸரபிள்ஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1862-ல் வெளியான இந்த நாவல், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஜப்பானியம், இத்தாலி ஆகிய மொழிகளில் நாடகம் மற்றும் திரை வடிவங்களைக் கண்டது. கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜாவர் என்ற கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துத்தான் வழக்கறிஞரும் திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான என். சீதாராமன், ‘ஜாவர்’ சீதாராமன் ஆனார். தமிழ்த் திரையுலகின் முதல் நட்சத்திர எழுத்தாளரான இளங்கோவன் திரைக்கதை எழுதிய படம் இது. இப்படத்தில் வரும் ‘விதியின் விளைவால்’ பாடல் எதற்காகப் புகழ்பெற்றது?

2. அனிமேஷன் துறையில் சாதனை!

ணினி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் முழு நீளத் திரைப்படமான ‘டாய் ஸ்டோரி’ 1995, நவம்பர் 22-ல் வெளியானது. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படத்தை இயக்கியவர் ஜான் லாசஸ்டர். சிறந்த அனிமேஷன் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்படும் இப்படம் உலகெங்கும் அதிக வசூலைக் குவித்தது. இந்தப் படத்தின் நாயகனான வுடி-க்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். திரைக்கதை, இசை, பாடலுக்காக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இப்படம், ஸ்பெஷல் அச்சீவ்மெண்ட் அகாடமி விருதைப் பெற்றது. உலகம் முழுக்க குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், வீடியோ கேம்கள், தீம் பார்க்குகளுக்கான உந்துதலையும் ‘டாய் ஸ்டோரி’ படம் தந்துள்ளது. டாய் ஸ்டோரியை உருவாக்கிய பிக்ஸார் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்த பிரபலம் யார்?

3. சினிமா மாணவர்களின் வேதம்

யுத்தம் மக்களின் வாழ்வை மட்டுமல்ல; ஆன்மாவையும் நிலைகுலையச் செய்கிறது. யுத்தத்தின் மோசமான பாதிப்பு குழந்தைகளுக்குத்தான் என்பதை அற்புதமாக வெளிப்படுத்தும் திரைப்படம் ‘இவான்ஸ் சைல்ட்ஹுட்’. கவித்துவமும் ஆன்மிக விசாரணையும் கொண்ட திரைப்படங்களை எடுத்த ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கியின் முதல் படம். தன் வாழ்நாளில் ஏழு திரைப்படங்களையே எடுத்த தார்க்கோவ்ஸ்கி, இங்மார் பெர்க்மன், கீஸ்லோவெஸ்கி போன்ற திரைமேதைகளைப் பாதித்தவர்.

4jpg

இவான் என்ற பெயரில் வெளியான ரஷ்யச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1962-ல் வெளியானது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் அநாதைச் சிறுவன் இவானின் அனுபவங்களைச் சொல்லும் படம் இது. ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி எடுத்த சினிமாக்களிலேயே பெரும் வர்த்தக வெற்றியை ஈட்டிய படைப்பு இது. இதன் சில காட்சிகள் குறித்த அதிருப்தியை தார்க்கோவெஸ்கி தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வெளிப்படுத்தினார். சினிமா மாணவர்களின் வேதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன?

4. ஜி.வி.ஐயர் கதையில் சிவாஜி

ந்தியாவில் சம்ஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட முதல்படம் ‘ஆதி சங்கராச்சார்யா’(1983). அத்வைத வேதாந்தத்தைப் போதித்த ஆதி சங்கரரின் வாழ்க்கையையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது இப்படம். இந்திய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சினிமாக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்திய ஜி.வி.ஐயர், ஆதி சங்கரரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி அவரது போதனைகளையும் எளிமையாக இப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருந்தார்.

மது அம்பாட்டின் ஒளிப்பதிவும் பாலமுரளி கிருஷ்ணாவின் இசையும் சிறப்பாகப் பேசப்பட்டன. கன்னடம், சம்ஸ்கிருதத்தில் தேர்ந்த ஞானம் மிக்க ஐயர், அதைத் தொடர்ந்து ‘மத்வாச்சார்யா’, ‘ராமானுஜாச்சார்யா’ படங்களையும் எடுத்தார். நாடக நடிகர், தயாரிப்பாளர், கதை வசன கர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பல முகங்களைக் கொண்ட ஐயர் கதை எழுதி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எது?

warjpgright5. தடுத்த தணிகை, விடுவித்த நீதிமன்றம்!

‘ராம் கே நாம்’ (கடவுளின் பெயரால்..) என்ற ஆவணப்படம் மூலம் புகழ்பெற்றவர் ஆனந்த் பட்வர்த்தன். 1998-ல் பாகிஸ்தான், இந்திய அரசுகளின் அணு ஆயுதச் சோதனையை ஒட்டி இவர் எடுத்த படம் ‘வார் அண்ட் பீஸ்’. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வளர்ந்துவரும் மதவாதத்துக்கும் அணு ஆயுத ஆதரவுக் கொள்கைகளுக்கும் இடையிலான உறவை ஆராயும் இப்படத்தை மூன்று ஆண்டுகளாக எடுத்தார் பட்வர்த்தன்.

ஜப்பானிலும் அமெரிக்காவிலும் அணு ஆயுதங்கள் தொடர்பாக இருக்கும் அணுகுமுறைகளை அலசும் இப்படத்தின் 21 இடங்களில் துண்டிக்கப் பரிந்துரைத்தது தணிக்கைக் குழு. இதையடுத்து நீதிமன்றம் சென்றார் ஆனந்த் பட்வர்த்தன்.

அவருக்கு அங்கே வெற்றி கிடைத்தது. அந்தப் படத்தை முழுமையாக வெளியிடத் தீர்ப்பளித்த நீதிமன்றம் எது?

SCROLL FOR NEXT