இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: காதலுக்குத் தேவைப்படும் சிகிச்சை!

செய்திப்பிரிவு

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடி பார்வையாளர்களைச் சமீபத்தில் கவர்ந்த ஆந்தாலஜி படமாக அமைந்தது ‘மாடர்ன் லவ் சென்னை’. அந்த வரிசையில், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகவிருக்கும் ‘வான் மூன்று’ ஆந்தாலஜி படம், மூன்று வெவ்வேறு தலைமுறை ஜோடிகளின் காதலைச் சித்தரிக்கிறது.

சினிமாக்காரன் வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்து வழங்க, இயக்குநர் ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷண், அபிராமி வெங்கடாசலம், லீலா சாம்சன், டெல்லி கணேஷ் ஆகியோர்தான் அந்த மூன்று காதல் ஜோடிகள்.

காதலின் வெவ்வேறு உணர்வுப் படிநிலைகளைச் சித்தரிக்கும் மூன்று காதல் கதைகளும் மருத்துவமனை ஒன்றுக்குச் சிகிச்சை பெற வரும் கதாபாத்திரங்கள் வழியாக விரிகின்றன. ’இக்கதைகளில் காதலின் வெவ்வேறு உணர்வுப் பரிமாணங்களைக் கலகலப்பும் கண்ணீரும் சரி விகிதத்தில் கலந்து அலசு’வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர்.

மீண்டும் ஒற்றைக் கதாபாத்திரம்: பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் ‘ஒத்த செருப்பு’, ஹன்சிகா மோத்வானி நடித்த ‘ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ்’, சங்ககிரி ராஜ்குமார் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘ஒன்’ ஆகிய படங்களில் ஒற்றைக் கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தற்போது, ’ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’ என்கிற படம் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது. இதை எழுதி, இயக்கி, ஒற்றைக் கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்துள்ளார் ஜி.சிவா. படம் குறித்து அவர் கூறும்போது “என்னைப் போன்ற ஒரு புதுமுக நடிகரை மட்டும் திரையில் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால் எதிர்பார்ப்பைத் தூண்டும் கதை வேண்டும்.

அப்படியொரு ’என்கேஜிங்’ ஆன கதை இதில் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள், நகைச்சுவை, விறுவிறுப்பான
திரைக்கதை ஆகியனவும் படத்தில் ஆகியன உண்டு. ‘கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் ‘மாஸ் ஃபார்முலா’வில் ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றுள்ள படம்’ என்கிற அடிப்படையில் கின்னஸ் சாதனைக்கும் விண்ணப்பித்துள்ளேன். பல மாத ஒத்திகைக்குப் பின், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். ஓகி - அருண் சுசில் இணைந்து இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்” என்கிறார்.

பழங்குடி மக்களின் கதை: கரோனா காலத்தில் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான புதுமுகக் கதாநாயகிகள் பலர். அவர்களில் ‘நடனப் புயல்’ என ரசிகர்களால் புகழப்படுபவர் ஃபரியா அப்துல்லா. அவரது நடிப்பையும் நடனத்தையும் பார்த்து, தனது ‘வள்ளி மயில்’ படத்தின் ‘டைட்டில் ரோ’லில் நடிக்கத் தேர்வு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன். விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஃபரியா நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது’ ‘தி ஜெங்காபுரு கர்ஸ்’ என்கிற இணையத் தொடர்.

ஒடிசாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு இத்தொடர் உருவாகியிருக்கிறது. ‘ஐ யாம் கலாம்’ என்கிற இந்திப் படத்துக்காக தேசிய விருதுபெற்ற நிலா மாதவ் பண்டா இயக்கியிருக்கும் இத்தொடர், புவி வெப்பமாதல் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கையாண்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதிய தயாரிப்பு நிறுவனம்: “தரமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற தாகம் கொண்ட திறமையான அறிமுக இயக்குநர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முதல் வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம். புதிய திறமைகளை அடையாளம் காண அனுபவம் மிக்க குழுவை அமைத்திருக்கிறோம்” என்கிறார் இந்நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அகில். எஸ்.கே.எம் சினிமாஸின் முதல் படத்தை விஜய் ஆனந்தன் இயக்குகிறார்.

‘நாளைய இயக்குநர்கள்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது குறும்படங்களுக்காக நடுவர் குழுவால் பாராட்டு பெற்றவர் அவர். இப்படத்துக்கு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT