இந்து டாக்கீஸ்

நிருபர் டைரி: கிராஃபிக்ஸ் ‘கில்லி’

ஸ்கிரீனன்

வி

ஜய்க்கு சூப்பர் டூப்பர் வெற்றியாக அமைந்த படம் ‘கில்லி’. துரத்தல் திரைக்கதைக்காகப் பேசப்பட்ட இந்தப் படத்தில் விஜய் - த்ரிஷா இருவரையும் வில்லன் பிரகாஷ்ராஜ் துரத்துவதைப் போல், கிராஃபிக்ஸ் குழுவைப் படத்தின் தயாரிப்பாளர் விடாமல் துரத்தியிருக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளை முழுமையாக உருவாக்கி முடித்த நிறுவனம், ‘பேசப்பட்ட தொகையைச் செலுத்தியதும் கொடுத்துவிடுவோம்’ என்று கூறியிருக்கிறது. தயாரிப்புத் தரப்பிலோ “வெளியூர்களுக்கு அனுப்பும் பிரிண்டுகளைப் போட்டுக் கொடுத்துவிட்டு விநியோகஸ்தர்களிடம் முன்பணத்தை வாங்கியதும் கொடுத்துவிடுகிறோம். தொடர்ச்சியாக உங்கள் நிறுவனத்துக்குத் தானே கிராஃபிக்ஸ் வேலையைக் கொடுக்கிறோம். இந்த நம்பிக்கைகூட இல்லையா?” என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தால்தான் ‘கிராஃபிக்ஸ் அவுட்’ கொடுப்போம் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், ரிலீஸுக்கு 36 மணிநேரமே இருந்த நிலையில் எப்படியாவது ‘கிராஃபிக்ஸ் அவுட்’டை வலுக்கட்டாயமாக வாங்கி வந்துவிட வேண்டும் என்று படக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு டீமாகக் கிளம்பிச் சென்றியிருக்கிறார்கள். இதை அறிந்த கிராஃபிக்ஸ் நிறுவன நிர்வாக அதிகாரி, கிராஃபிக்ஸ் அவுட்டை முழுமையாக பிலிமுக்கு மாற்றி, அதைப் பொறுப்பான ஒரு ஊழியரிடம் கொடுத்து “பிலிம் பாக்ஸுடன் ‘கில்லி’ பட அலுவலகம் உள்ள பகுதியைக் காரில் சுற்றிக்கொண்டே இரு. எங்களைத் தவிர யாருடைய அழைப்பையும் எடுத்துப்பேசாதே” என்று கூறி அனுப்பிவிட, விரைந்துவந்த படக்குழு கிராஃபிக்ஸ் அலுவலகத்தைத் துழாவிப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறது. வேறு வழியில்லை என்ற நிலையில் மறுநாள் பணத்தை அவசர அவசரமாக ஏற்பாடு செய்து கொடுக்க, கிராஃபிக்ஸ் நிறுவனமும் ‘கிராஃபிக்ஸ் அவுட்’ அச்சிடப்பட்ட பிலிம் பாக்ஸுடன் அலைந்துகொண்டிருந்த ஊழியரைக் கூப்பிட்டு, “ இனி அலைய வேண்டாம். ‘கில்லி’அலுவலகத்தில் கொடுத்துவிடுங்கள்.” என்று கூறிய அரை மணி நேரத்தில் அவர் அதை ஒப்படைத்திருக்கிறார். 18 மணி நேரமே அவகாசம் இருந்த நிலையில் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்து பிரிண்டுகளைப் போட்டு அவசர அவசரமாக வெளியூர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT