இந்து டாக்கீஸ்

சர்ச்சை: பார்க்கக் கிடைப்பாரா ‘பத்மாவதி’?

கோபால்

ஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ படத்துக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பு அரிதிலும் அரிதான வடிவங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. 2017 டிசம்பர் 1 அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடும் எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியில் படத்தின் வெளியீடு தற்போது காலவரையின்றித் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

மேவார் சாம்ராஜ்யத்தின் ராஜபுத்திர அரசர் ரத்தன் சிம்ஹாவின் இரண்டாவது மனைவி ராணி பத்மாவதி என்று நம்பப்படுகிறது. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியின் அழகால் ஈர்க்கப்பட்டு அவரைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும், ஆனால் போரில் தன் கணவன் இறந்துவிட்டதை அடுத்து பத்மாவதி அந்தக் காலத்தில் நிலவிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒட்டி தீயில் இறங்கி இறந்துவிட்டதாகவும் கதைகள் தெரிவிக்கின்றன.

ரத்தன் சிம்ஹாவுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையில் நடந்த போருக்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், ராணி பத்மாவதி குறித்து வரலாற்றுபூர்வமான ஆதாரம் எதுவும் காணக் கிடைக்கவில்லை. எனவே கதைகள்,கவிதைகளில் காணக் கிடைக்கும் அவரைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் தொன்மங்களாகவே நிலைத்துவிட்டன.

இருப்பினும், ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர்கள் பத்மாவதியைத் தங்கள் குல வீரத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். அவர் அலாவுதீன் கில்ஜியை எதிர்த்துப் போரிட்டதாகவும் நம்புகிறார்கள். ‘பத்மாவதி’ திரைப்படம், அவருக்கும் கில்ஜிக்கும் காதல் உறவு இருந்தது எனச் சித்தரிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் வரலாற்றைத் திரித்து தங்கள் வம்சத்தைச் சேர்ந்த அரசிக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, இந்தப் படத்தைப் படப்பிடிப்பு நிலையிலிருந்தே எதிர்த்து வருகிறார்கள்.

ராஜபுத்திர கர்ணி சேனா என்ற அமைப்பினர் இரண்டு முறை ‘பத்மாவதி’ படப்பிடிப்புத் தளத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு அரங்குகளைச் சேதப்படுத்தியதோடு இயக்குநர் பன்சாலியையும் தாக்கினர்.

இந்தப் படம் ராணி பத்மாவதிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்குமேயொழிய அவருக்கு எந்த விதத்திலும் களங்கம் விளைவிப்பதாக இருக்காது என்று படக்குழுவினர் பலமுறை கூறிவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகர்களுக்கான சிறப்புத் திரையிடலில் படத்தைப் பார்த்தவர்களும் படக்குழுவினரின் கூற்றை ஆமோதித்துள்ளனர். படத்தைப் பார்த்துவிட்ட அர்னாப் கோஸ்வாமி, “படத்தில் ஒரு ஃப்ரேமில்கூட பத்மாவதி, கில்ஜி பாத்திரங்கள் ஒன்றாகத் தோன்ற மாட்டார்கள். படம் வெளியானதும் அதை எதிர்த்த அமைப்பினர் மக்களுக்கு முட்டாள்களாகத் தெரிவார்கள்” என்று கூறியுள்ளார்.

24chrcj_Padmavathi

ஆனால், ராஜபுத்திர அமைப்புகள் இவற்றைக் காதில் போட்டுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒன்று பத்மாவதியை இழிவுபடுத்தும் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மட்டுமே சொல்லிவருகின்றனர். படக்குழுவினர் மற்றும் படத்தைப் பார்த்த ஊடகர்களின் கூற்று உண்மையென்றால் இல்லாத காட்சிகளை எப்படி நீக்குவது? எனவே, படத்தை எப்படியாவது தடை செய்ய மட்டுமே இந்த அமைப்பினர் போராடுகிறார்கள் என்றுதான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோன் ஆகியோரின் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் தலையை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிடுபவர்கள் சாதி, மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சூரஜ் பால் அமு, பன்சாலி மற்றும் படுகோனின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

பெரும்பாலான பா.ஜ.க. முதல்வர்களும் கட்சிப் பிரமுகர்களும் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும்கூட ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை படத்தை வெளியிடத் தடை விதித்துவிட்டார் ம.பி. முதல்வர் சிவராஜ் சவுஹான். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோரும் படத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2013-ல் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதும் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின் படம் வெளியானதும் கருத்து சுதந்திரத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றளித்த பின் படத்தைப் பிரத்யேகத் திரையிடலில் பார்த்த அமைப்புகள்தாம் எதிர்க்கத் தொடங்கின. எதிர்ப்புக்குக் காரணமான காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டு படம் வெளியானது.

ஆனால், ‘பத்மாவதி’ படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. ஒரு படம் மக்கள் பார்வைக்குத் தகுந்ததா இல்லையா என்று முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள தணிக்கை வாரியம்கூட இன்னும் பார்த்திராத படத்தை, சில அமைப்புகள் தங்கள் கற்பனைகளின் அடிப்படையில் எதிர்ப்பதும் படக் குழுவினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும் அதை ஆளும் அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் தாண்டி மிகப் பெரிய ஜனநாயகச் சீர்கேடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு தொன்மத்தைத் தங்களது வரலாறாக ஏற்றுக்கொள்வதும் அது திரிக்கப்படக் கூடாது என்று போராடுவதும் அவரவர் உரிமை. ஆனால், படத்தையும் பார்க்காமல் படக்குழுவினர் சொல்வதையும் கேட்காமல் இந்த எதிர்ப்புக்குச் சொல்லப்படும் காரணங்களையும் அது வெளிப்படும் வழிமுறைகளையும் வைத்துப் பார்க்கையில் உணர்ச்சிகளைக் கிளப்பி ஆதாயம் அடைய மட்டுமே இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கருத வேண்டியுள்ளது.

SCROLL FOR NEXT