ந
டிகை ஆலியா பட், அடுத்து வெளியாகவிருக்கும் ‘ராஸி’ திரைப்படத்தில் ரசிகர்கள் தன்னை வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார். “ராஸி’ வித்தியாசமான திரைப்படம். இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது மாதிரி வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு படத்தில் முதன்முறையாக நடித்திருக்கிறேன். உண்மையான கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ரசிகர்களையும் இந்தப் படம் நிச்சயம் கவரும்” என்று சொல்கிறார் ஆலியா.
1971 இந்தியா- பாகிஸ்தான் போரைப் பின்னணியாக வைத்து எழுத்தாளர் ஹரிந்தர் சிக்கி எழுதிய ‘காலிங் சஹமத்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். இந்தியப் படையின் உளவாளியாக ஒரு பாகிஸ்தான் அதிகாரியை மணக்கும் காஷ்மீரி பெண் கதாபாத்திரத்தில் ஆலியா நடித்திருக்கிறார். பாகிஸ்தான் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்கி கவுஷல் நடித்திருக்கிறார். மேக்னா குல்ஸார் இயக்க, கரண் ஜோஹர் தயாரித்திருக்கிறார். அடுத்த ஆண்டு மே 11-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
- கனி